மணிகண்டன் பாலசுப்பிரமணியன் கவிதைகள்





ஓடும் கனவுகள்

முன் பாய்ந்து
செல்லும் விளக்கொளி
கூடவே வரும்
நிலவும்,நட்சத்திரங்களும்
பின் செல்லும்
மரங்களும்,மின்கம்பங்களும்,

மயக்கமா,துயிலாவென
அடையாளம் கூற முடியாது
விளக்கொளியில்
கண்மூடியிருக்கும் பயணிகள்.


சாலையில் விரைந்து செல்கிறது
கால‌த்தை வேட்டையாடிய‌படி
நெடுந்தொலைவு பேருந்தொன்று.

நிராசை

இவ்வண்டியில்
வருபவர்களாவது அதிக
காசு போட மாட்டார்களா
என,கம்பை தரையில்
தட்டிய படி காத்திருந்த
ஊனமுற்ற பிச்சைக்காரன்,

எப்படியும் பத்திருப்பது
கிடைக்குமென கையில்
கேண்டிலுடன் காத்திருந்த
காபி,டீ விற்கும் சிறுவன்,

ஜன்னலோர பிரயாணிகள்
போடும் திண்பண்டங்களுக்காய்
காத்திருந்த கட்டைவால் நாய்,

அனைவரின் ஆசையையும்
பொய்யாக்கி நின்றது
அந்த நிறுத்தத்திற்கு
சற்று முன் தடம் புரண்டு
நின்ற வெகு தொலைவு
ரயில் வண்டி.