அவளை விட்டு விடுங்கள் - மனுஷிஅவள் நொந்து போயிருக்கிறாள்.
ஒரு துரோகம் 
அவளைத் தின்று கொண்டிருக்கிறது.
இறந்து போவதற்கான
ஆயத்த ஏற்பாடுகளை
முப்பொழுதும் சிந்தித்துக் கொண்டேயிருக்கிறாள்
வாழ்தலுக்கான பேராசையைச் சுமந்தபடி.
உங்களின் அனுதாபங்கள் வேண்டாம்
அவளுக்கு.
இயேசுவின் உள்ளங்களிலும்
பாதங்களிலும் அறையப்பட்ட
ஆணியைப் போன்றவை
உங்களின் அனுதாபங்கள்.
உங்களின் அக்கறையும் தான்.
ஒருபோதும்
அவளின் வலியைக் குறைக்க வாய்ப்பில்லை
அவை.
உங்களின் கைபேசி அழைப்புகளைக் கண்டு
அவள் மனம் நடுங்குவதை
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் 
நீங்கள் இரசனை மிக்கவர்கள்.
இரகசியங்களை அறிந்துகொள்ளும்
ஆர்வம் மிகுந்தவர்கள்.
நீங்கள் பேச்சாற்றலில் வல்லவர்கள்.
அவளிடம் பேசுவதற்கு
ஒரே ஒரு பேச்சு மட்டுமே
மிச்சம் இருந்தது உங்களிடம்.
நீங்கள் ஞானவான்கள்.
அவளிடம் கேட்பதற்கு
ஒரே ஒரு கேள்வி மட்டுமே 
மிச்சமாய் இருந்தது உங்களிடம்.
புதையலைத் தேடும் ஆர்வத்துடன்
நீங்கள் தேடிக் கொண்டிருப்பதை
அவள் உணரத் தொடங்கிவிட்டாள்.
அவள் ஒரு பேராசைக்காரி.
வாழ்வின் கடைசித் துளி வரை
வாழ்ந்து தீர்க்க வேண்டும் என
இன்னமும் 
விரும்புகிறாள்.
அவளை விட்டு விடுங்கள்.