மனுஷ்ய புத்திரன் கவிதைகள்



 

சாயைகள் -1


கடற்கரையில்
நானும்
என் நாயும்
தியானத்தில் இருந்தோம்

யாரோ
ஒருவன் என் நாயிடம் வந்து
பேசத் தொடங்குகிறான்

என் நாய்க்கும் அவனைப் பிடித்திருந்தது
அவன் வாசனையை
சிநேகத்துடன் நுகரத் தொடக்கியது
அந்த மனிதன்
நாயை  இறுக அணைத்து
முத்தமிடுகிறான்
அதனுடைய
பெயர் என்ன என்றான்
வாஞ்சையுடன்

உங்களுக்கு
நாய் என்றால் அவ்வளவு
விருப்பமா?’’  என்றேன்
’’இல்லை
இதே போன்ற ஒன்றை
நான் ஃபிளாட்டிற்கு குடியேறியபோது
கைவிட நேர்ந்தது’’
எனறான் உலர்ந்த குரலில்
அவன் எதையோ நினைத்துக்கொண்டு
உடைந்து போகிறான்
போகும்போது
திரும்பித் திரும்பி
பார்த்துக்கொண்டே சென்றான்

சாயைகள்
நம்மை விடுவதில்லை
எங்கெங்கும் விழுகின்றன
சாயைகளின்
பைத்திய நிழல்கள்
·          

சாயைகள்-2


பிரமாண்டமான குழந்தைகள்
விளையாட்டுப் பூங்கவின்
ஆயிரம் ஆயிரம் ஜனங்களுக்கு நடுவே
அவளைக் கண்டேன்
அவள் ஒரு ராட்டினத்தின்
நீண்ட க்யூவின் நடுவில்
நின்று கொண்டிருந்தாள்
முதுகில் விழுந்துகொண்டிருந்த 
அவள் கேசம்தான் அவளை காட்டித் தந்தது
பிறகு யாரையோ அழைக்கும்
அவளது விசேசமான  கையசைப்பு
பிறகு அவளுக்கு மட்டுமே சாத்தியமாகும்
தயங்கிய ஒரு தலையசைப்பு
என் மனம் ஒரு கணம்
சிதறிவிட்டது
நான் பதட்டத்துடன்
அருகில் சென்றபோது
அந்த முகம் வேறு யாருடைய
முகமாகவோ மாறிவிட்டது.

நான் அந்த நாளில் மீண்டும் மீண்டும்
அவளைப் போலவே இருந்த அவளை
சந்தித்துக்கொண்டே இருந்தேன்
நீச்சல் குளத்தில்
அவள் கூச்சத்துடன் கால் நனைத்துக்கொண்டிருந்தாள்
கேபிள் காரில்
பாதாளத்தைக் கண்டு அஞ்சினாள்
பொம்மை ரயிலில்
யாருக்கோ விடை கொடுத்தாள்
ஐஸ் கிரீம் பார்லரில்
அவள் சாப்பிட்ட பாதி ஐஸ் க்ரீமை சாப்பிட
யாரோ இருந்தார்கள்
அவளை நான் அத்தோடு பிரிந்துவிட்டேன்
என்று நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம்
அவளை மறுபடி மறுபடி எதிர்கொண்டேன்
அவள் கவனத்தின் எதேச்சையான நிழல்கூட
என்மீது விழவில்லை

நான் அவளிடம்
ஒரே ஒரு முறை
புன்னகைக்க விரும்பினேன்
ஒரு ஒரு முறை
என்னை அறிமுகப்படுத்திகொள்ள விரும்பினேன்
ஒரே ஒரு முறை
அவள் பெயர் என்ன என்று கேட்க விரும்பினேன்.
அவளைப் போலவே ஒருத்தியை
நான் அவ்வளவு நேசித்தேன்
என்பதை அவளிடம்
ஒரே ஒரு முறை சொல்லிவிட வேண்டும் என்று
அப்படித் தவித்தேன்
அந்தியின் வெளிச்சம் போல
அவள் எல்லா இடங்களிலும்
என்னைக் கடந்து சென்றாள்

சாயைகள் நம்மை
கைவிடுகின்றன
எங்கிருந்தோ ஒலிக்கிறது
சாயைகளின்
மாய மான் குரல்கள்

manushyaputhiran@gmail.com