பொன்.வாசுதேவன் கவிதைகள்




01
ஆழமாய் இழுத்து விட்டதில்
காற்றிலுழலும் புகையென 
அந்தரத்தில் சுழல்கிறது
உடல் நீங்கிய உயிர்

வாழ்ந்த காலத்தை ஆமோதிக்கின்றன
இருத்தலை நெரிசலாக்கிய அடைசல் சுற்றங்கள்
உசுப்பி வீறிட்டு அழுது தீர்க்கிறது
முகம் சுளித்த பந்தங்கள்

நாட்களைக் கடந்த ஆயாசம்
விளக்கேற்றிச் சுற்றியமர்ந்தழும் உறவுகளில்
வளியில் சுடரென அசைகிறது

துவண்டு விரைத்து 
எரிந்து தணிந்து அவியும் தணலில்
மிஞ்சுகிறது சில கைப்பிடி மென் சாம்பல்

கரைக்கக் கரைக்க ஓயாது
நுரைத்துப் பெருகிக் கொண்டிருக்கிறது
நினைவின் அலைகள்

••

02
இரை தேடும் பறவையை விட்டு விடு
அதன் பசி அதற்கு

போஸ்டரைக் கிழித்துண்ணும் மாட்டைப் பார்க்கிறாய்
போகட்டும் விடு; புற்கள் தென்படவில்லை
வேறு கதியில்லை அதற்கு

குக் பக்கெனக் குரலெழுப்பிப் படபடத்துப் பறந்து
அமர்ந்து இடம் வலம் விழியுருட்டும் புறாக்கள் அழகுதான் 
அதன் பதற்றம் அதற்கு; ரசித்து விட்டுச் செல்
கைப்படுத்திப் பற்றி மென்மையாய்த் தடவ ஆவலுறாதே

குரலால் சமிக்ஞை செய்து கூரலகால் தரை கீறி
சிதறும் சாதப்பருக்கையுண்ணும் காகங்கள் 
அதன் விதி அப்படி 
விட்டுவிடு இருந்து விட்டுப் போகட்டும்

உன் பசியுறைக்கும் போது 
எதையும் மறந்து சாப்பிடத் துணிகிறாயே
அதைச் செய்
கண்டதையெல்லாம் கற்பனித்து
கவிதை எழுதாதே

பறவைக்கு இரை
மாட்டுக்கு போஸ்டர்
புறாவுக்குப் பதற்றம்
காகத்துக்கு கரைந்துண்ணல்

உனக்கு உன் பசி போலத்தான்
அததற்கு அதனதும்.
••

03
தாழப்பறந்து நீர் கொத்தி
தப்பிய மீனைக் குறித்து ஏமாற்றடைந்து
ஆகாசம் பறந்து 
பசியை அடைகாக்கிறது பறவை

மரித்த புன்னகையோடு
தக்கையின் அசைவுக்குக் காத்திருக்கும்
ஒரு மனிதன்

கூரிய நுனியில் நீரினுள்ளிருந்து
அசைவுறும் வலிப்புழு

நிசப்தத்தை விழுங்கி ஆழச்சென்று
சேற்றுப் பாசிக்குள் பதுங்கி
தன்னிருத்தலைப் பதுக்கும் கரிய மீன்

அஸ்தமனச் சலனத்தில் அலைவுறும் நீர்ப்புலம்
நீல வானத்தின் வெறுமையோடு
அந்தரங்க இருளை
விழுங்கியபடிச் சூழ்கிறது வெளிச்சம்.

••