இன்னும் ஆப்பிள் நியூட்டன் தலைக்கு வந்துசேரவில்லை. இடையில் கைப்பற்றியிருந்த ஆதாம் ஏவாளுக்குக் கடிக்கக் கொடுத்தான். ஒரு கடி கடித்துவிட்டு “சீச்சீ இந்தப் பழம் புளிக்கிறது” என்றாள் அவள். ’’சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?” என்ற சிறுவனின் வார்த்தைகளில் கவனம் திரும்பியபோது மூதாட்டியின் வடைகளைத் திருடியிருந்தன நான்கைந்து நரிகள். கோபமுற்ற கண்ணகி தன் இடதுமுலையைத் திருகி வீசி எறிந்தபோது பொத்தென்று ஆப்பிள் நியூட்டன் தலையில் விழுந்தது. ---------------------------- வழுக்கிச் செல்லும் பாம்பின் மினுமினுப்பாயிருக்கிறது இந்த வெயில். ச்சோவென்று பெய்கிறது மழை எல்லோர் கனவுகளிலும். நீ இன்னும் கொஞ்சம் ஈரச் சொற்களைக் கொண்டுவந்திருக்கலாம். அந்தச் சிறுமி நனைந்த தன் பாவாடையின் ஈர நுனியைப் பிழிந்தபோது சொட்டும் நீரில் துளிர்த்திருக்கலாம் ஒரு செடி. அதற்காகவேனும் பெய்யட்டுமே ஒரு மழை! --------------------- திருவாளர் விமர்சகர் பாராட்டுகிறார் திருவாளர் படைப்பாளி புன்னகைக்கிறார். ’’உன் எழுத்தால்தான் இலக்கியம் ஓர் அங்குலம் வளர்ந்திருக்கிறது” என்கிறார் விமர்சகர். நகவெட்டியில் தன் நகத்தைச் சீர்படுத்தியபடி மீண்டும் புன்னகைக்கிறார் படைப்பாளி. எதிரிகளைப் பழி தீர்ப்பதற்காக அவசர ஆத்திரமாய் ஒரு கட்டுரை எழுதுகிறார் திருவாளர் விமர்சகர். கட்டுரைக்கு மேல் ‘நகைச்சுவை’ என்று தலைப்பிடுகிறார் திருவாளர் படைப்பாளி. திருவாளர் விமர்சகர் நகர்ந்துவிடுகிறார் அப்பாலிருக்கும் படைப்பாளியும் நகர்கிறார். இடையிலிருக்கும் நிலைக்கண்ணாடியை என்ன செய்ய?