காம்பவுண்ட் சுவரில்
மட்டுமல்ல..
கதவின் பின்னால் கூட
கை ,கால் தடம்
இல்லாதிருக்க வேண்டும்,
கையில் பொருளோடு
நீங்கள் கீழே விழுந்தாலும்
தரையிலோ,கதவிலோ
சேதம் ஏற்பட்டுள்ளுதா
என்றுதான் முதலில்
பார்க்க வேண்டும்,
அவர்கள் கதவை
தட்டும் போது உடனே
திறக்க வேண்டும்,,
அப்போது கணவன்,மனைவி
கொஞ்சிக் கொண்டிருந்தாலும் சரி
நிச்சயம் நாசுக்காய் விபரம்
சொல்லியாக வேண்டும்,
நீ வைக்கும் குழம்புனா
ருசியாருக்கும் என கேட்கும்
சுண்ட வைத்த வற்றல் குழம்பு வரை
இலவசம் கொடுத்தாக வேண்டும்.
தொலைவிலிருந்தால்
பரோலில் இருப்பவர்,
அருகிலிருந்தால் ஆயுள்
கைதியே தான் நீங்கள்,
எத்தனை உடன்படிக்கை
வருடத்திற்கு ஒரு முறை
இந்த வசதியில எங்கேயும்
உங்களுக்கு கிடைக்காது,
அதனால அடுத்த மாதம் முதல்
ஒரு ஐநூறு ரூபாய் சேர்த்து
கொடுத்திருங்க சரியா என்றபடி
உங்களின் பதிலை எதிர்பாராது
சொல்லி சென்றால் அவர் தான்
வீட்டு உரிமையாளர்,
அந்நிமிடம் செவிடாகிப் நிற்கும்
வாடகைக்கு வசிப்பவர் நீங்கள்,