குறுஞ்செய்தி - அசோக் பழனியப்பன்






ஆயிரம் 
கனவுகளோடு 
வார்த்தைகளால்
குடும்பம் 
நடத்தி கொண்டிருந்தோம் 
திருமண செலவுக்கு 
யாரிடம் கேட்பதென்று 
நமக்கு நாமே 
கேட்டுக் கொண்டிருந்தோம்.
பதிவு திருமணம் 
செய்வது பற்றி 
கூகுளிடம்  
விசாரித்து கொண்டிருந்தோம் 
எப்போதும் 
அக்கம் பக்கம் 
பார்த்து பேச 
இரகசிய ஒப்பந்தம் 
போட்டிருந்தோம். 
பிள்ளை பிறந்தால் 
என்ன பேர் 
வைப்பதென்று 
விவாதித்து மகிழ்ந்திருந்தோம்.
காமத்தை 
முத்தத்தின் 
ருசியோடு 
வழியனுப்பி வைத்திருந்தோம்.
காதல் பாடல்களில்
இரவுகளை
நிரப்பிக் கொண்டிருந்தோம்.
தகவல் தொடர்புக்கு
நண்பர்கள்
இரண்டு பேரை
இல்லை
நண்பர்களாக்கிக்கொண்டிருந்தோம்.       
நீ தான் உலகம் 
நீ மட்டும் தான்  உலகம்
என்ற நினைவுகளோடு 
நேற்றய பொழுதை 
தூங்கி கழித்து 
காலையில்  
எழுந்த போது 
வந்து சேர்ந்தது 
விபத்தில் உயரிழந்த 
உன்னுடைய மரண செய்தி 
ஒற்றை வரி குறுஞ்செய்தியாக