“முத்தங்களின் கடவுள்”: தமிழ் பெண்ணியக் கவிதைகளின் புது வடிவம் - ஆர்.அபிலாஷ்
மனுஷியின் கவிதைகள் பொதுவான தமிழ் பெண்ணியக் கவிதைகளின் பாணியில் இருந்து சற்றே வழுவியவை. நேரடியான, அதிர்ச்சிக்குரிய பாலுறுப்பு வர்ணனைகள், கோட்பாட்டு வாதங்கள், உடலை சுயமாக பார்த்து, உடலின் விடுதலையை, சுயத்தின், பெண்ணினத்தின் விடுதலையாக பார்க்கும் பார்வை ஆகியவை மனுஷியிடம் இல்லை. தன் உடலை தன் சுயமாக கருதும் பார்வை அவரிடத்தும் உண்டு எனினும் மனுஷி இந்த உலகின் தீமை, மனித மனம் எதிர்கொள்ளும் நெருக்கடி, அன்பின் போதாமை, அறம் என “ஆணுலக கவிதைகளின்” கருப்பொருட்களையும் தீவிரமாக கையாள்கிறார். ஆத்மாநாம், அப்பாஸ், தேவதேவன், நகுலன் என எண்பதுகள், ஆரம்ப தொண்ணூறுகளின் கவிதையுலகை மனுஷியின் கவிதைகள் நினைவுபடுத்துகின்றன. அவரது நிதானமான, கூர்மையான பிரக்ஞை தொனிக்கும் மொழி ஆண் தன்மை கொண்டது.

குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி, லீனா மணிமேகலை ஆகியோரின் நேரடியான நீட்சியாக இவர் இல்லை என்பது கவனிக்கத்தக்க செய்தி. ஏனென்றால் ரெண்டாயிரத்தின் முதல் பாதியில் அவர்களின் தாக்கமும் மீடியா இருப்பும் வலுவாக தீவிரமாக இருந்தது. கிட்டத்தட்ட பிற ஆண் கவிஞர்களை அவர்கள் அமாவாசையாக முழுங்கி விட்டார்கள். ஆனால் ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் இருந்து பெண்ணிய கவிதையின் வெளிச்சம் மெல்ல மெல்ல மங்கி இன்று சிறு கீற்றாக எஞ்சி விட்டது. அதற்கு முக்கிய காரணம் மேற்சொன்ன பெண்ணிய கவிஞர்களால் தம் கவிதை நம்பிக்கைகளை ஒரு இயக்கமாக நீட்டித்து, தமது வாரிசுகளை உருவாக்க முடியவில்லை என்பது. அவர்களில் குட்டிரேவதி மட்டுமே பத்திரிகை, பதிப்பகம் என சற்று காலம் மீடியாவில் இயங்கினார். அவருடன் மேலும் பலரும் தொடர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிகழவில்லை. இன்று மனுஷியின் வழி எண்பதுகளின் கவிதையும் ரெண்டாயிரத்தின் பெண்ணிய கவிதையும் ஒரு தனித்துவமான புள்ளியில் இணைக்கிறது.

“முத்தங்களின் கடவுள்” மனுஷியின் இரண்டாவது தொகுப்பு. உயிர்மை வெளியீடு. 75 கவிதைகள். பெரும்பாலான கவிதைகள் உறவின் கசப்பு, இழப்புணர்வு, அன்பின், அக்கறையின் பின்னுள்ள பாசாங்கு, மரண வேட்கை, கசப்பின் பாலான போதை என தனிப்பட்ட விசயங்களையும், அறம், கடவுள், தீமையின் மிதமிஞ்சிய இருப்பு என விரிவான அக்கறைகளையும் கொண்டுள்ளன. தொகுப்பின் அளவு ஒரு குறை. கவிதையாக உருப்பெறாத வெற்று அறிக்கைகளாக உள்ளவற்றை தவிர்த்திருந்தால் இத்தொகுப்பு இன்னும் கச்சிதமாக உருப்பெற்றிருக்கும். ஆனாலும் இத்தொகுப்பை எண்ணி அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். முதல் தொகுப்புடன் ஒப்பிடுகையில் இன்னும் ஆழமான தீவிரமான கவிதைகளை இதில் எழுதி இருக்கிறார். படைப்பாளியாக மேலும் துலங்கி இருக்கிறார்.

அறையும் பொம்மைகளும் மனுஷியின் கவிதையில் தொடர்ந்து வரும் குறியீடுகள். அறை அவர் தனக்குள் இருக்கும் ஒரு இடமாகவும், பொம்மை அவருக்குள் உள்ள மாற்று சுயமாகவும் வரும். கவிதையில் வரும் அறையில் அவருடன் ஒரு பொம்மை இருக்கிறதென்றால் அவருடன் சலனிக்காக, பேசாத மற்றொரு மனுஷி இருக்கிறார் என பொருள். “நிலா வந்திருந்தாள்” கவிதையில் அறையில் உள்ள பொம்மைகள் உயிர் பெறுகின்றன. அறைக்கு நிலா வருகிறாள். பொம்மைகள் குழந்தைகளாக நிலா அவர்களுக்கு பாடம் கற்பிக்கிறாள்.
அவர்களுக்கு காமிக்க அவள் மலைகள், காடுகள், கடல்கள், மலர்கள், சூரியன், வானவில், விலங்குகள், பறவைகள், புற்களை சிருஷ்டிக்கிறாள். அவள் உருவாக்கும் இயற்கையும் உயிர்களும் அறைக்குள் உயிர் கொண்டு வலம் வருகின்றன. விரைவில் அவள் அவர்களுக்காக சில மலைகளையும், கடலையும் சிருஷ்டிக்கப் போவதாக சொல்லுகிறாள். இந்த இடத்தில் கவிதை புது தொனியை கொள்கிறது. மற்றொரு தளத்தை அடைகிறது. விவிலியத்தின் பிரபஞ்ச சிருஷ்டி கதையை நினைவுபடுத்துகிறது. விவிலியத்தில் பிரபஞ்சத்தை தோற்றுவித்தது ஆணாகிய பிதா எனும் ஆண்டவன். அவன் தான் பின்னர் ஏவாளை தோற்றுவிக்கிறான். இந்த ஏவாள் தீமையின் கனியை சுவைத்து பாவம் செய்து உலகை நரகமாக்குகிறாள். மனுஷியின் கவிதை இப்படி முடிகிறது: “(நிலா) வெளியேறிப் போனாள் / ஒரு ஆப்பிளைக் கடித்து தின்றபடி”. இந்த இடத்தில் நிலா ஏவாளாகிறாள். பாவம் செய்து ஏதனை விட்டு வெளியேறிய ஏவாள் அல்ல. உலகை சிருஷ்டித்து மனிதனுக்கு சுதந்திரத்தை, அறிவை, கல்வியை தந்த ஏவாள். சட்டென இக்கவிதை ஒரு பெண்ணியக் கவிதையாக, கிறிஸ்துவ இறையியல் சித்தரிக்கும் பாவம், பெண்ணின் இச்சை ஆகியவற்றுக்கு ஒரு மாற்று சித்திரத்தை தரும் ஆழமான கவிதையாக மாறுகிறது. தொழில்நுட்பரீதியாகவும் ஒரு சிறந்த கவிதை இது. பொதுவாக மனுஷியின் கவிதைகளில் பல்குரல் தன்மை இருக்கும். அவரது சுயம் உடைந்து பல்வேறு ஆட்களாக கவிதைக்குள் உலவும். இங்கு அப்பொம்மைகளும், நிலாவும் மனுஷியின் வெவ்வேறு ரூபங்கள், சுயங்கள்.

 ‘’என்னருகில் யாரும் இல்லை” இத்தொகுப்பில் உள்ள மற்றொரு முக்கிய கவிதை.
      ‘இயேசுவை நம்புங்கள்
      அவர் நல்லவர் ’
என்றது குரல்.

குரல் வந்த திசையைத் தேடினேன்.
அருகில் இருந்தவர்களின் வாய்கள்
மௌனமாகவே இருந்தன.
யாருடைய உதடுகளும் நாவும்
அசையவே இல்லை.
குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் கர்த்தர்
சர்வ வல்லமை படைத்தவர்.
அற்புதங்கள் செய்யும் அவரைத் துதியுங்கள்
என்றது குரல்.
அற்புதங்கள் ஏதும் நிகழ
வாய்ப்பே இல்லையென
தீர்க்கமாய் முடிவு செய்திருந்த தருணம் அது.

கர்த்தரை நம்புங்கள்.
அவர் நல்லவர்
என்றது குரல்.
நல்லது என்று எதுவுமே இல்லை
நல்லவர் என்று எவருமே இல்லை என
முழுதாய் நம்பத் தொடங்கிய கணம் அது.

தேவன் நம் அருகில் இருக்கிறான்
என்றது குரல்.
என்னருகில் யாருமே இல்லை
அப்போது.

சர்வ வல்லமை படைத்தவர்
அவரை நம்புங்கள்
என்றது குரல்.
மனிதர்கள் மீது
நம்பிக்கை அற்றிருந்தேன் அப்போது.

பைபிளைக் கைக்கொள்ளுங்கள்
அது நம்மைக் காப்பாற்றும்
என்றது குரல்.
என் கையில்
ஒரு கவிதை நூல் இருந்தது
அப்போது.

அவர் நமக்காகவே மரித்தார்
என்றது குரல்.
வலியின்றி இறந்து போவதைப் பற்றி
தீவிரமாய்,
அதிதீவிரமாய் சிந்தித்துக் கொண்டிருந்த
நாட்கள் அவை.

மனிதன் அப்பத்தினால் மட்டுமின்றி
கடவுளின் வாயிலிருந்து வரும்
வார்த்தைகளாலும் உயிர் வாழ்கிறான்
என்றது குரல்.
தேவிடியா என்ற வார்த்தையைத்
தேவன் கூறியிருக்க முடியாது என்றும்
அந்த வார்த்தை தரும் வலியை
தேவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும்
சொல்லிக் கொண்டேன்.

அல்லேலுயா
கர்த்தருக்கு அல்லேலுயா என்று
உரத்துப் பாடியபடி
என்னை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தது
அந்தக் குரல்
சூம்பிப் போன கைகளால்
தன் மிதிவண்டியை இயக்கியபடி.

அற்புதங்களிலும், நன்மையிலும் நம்பிக்கை இல்லாத மனிதன் ஒட்டுமொத்தமாய் எதிர்காலத்தில் நம்பிக்கை அற்றவன் தான். வாழ்க்கையில் நம்பிக்கை வைக்க வாழ்க்கையை கடந்த ஒன்றின் மீது பிடிப்பு வேண்டும். ஏனென்றால் வாழ்க்கை அடிப்படையில் அநீதியலும் தீமையாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மதங்கள் திரும்பத் திரும்ப நம்மை வாழ்க்கையை அதற்கு அப்பாலான ஒன்றின் பெயரால் ஏற்க சொல்கின்றன. ஆனால் அந்த அப்பாலான நம்பிக்கையில் பிடிப்பை இழந்தால் பிறகு நமக்கு முற்றுமுழுதான தனிமையும் தீராத கசப்பும் தான் எஞ்சும். இக்கவிதைசொல்லியின் மனநிலை அது தான். இறைவன் மனிதனுக்காக மரித்தான் என்பது உச்சபட்ச ஆன்மீக நிலை. தன்னை அழித்து அவன் இன்னொரு உன்னதமான மனித நிலையை தோற்றுவிக்கிறான். ஆனால் அந்த புத்துருவாக்கத்தை கவிதைசொல்லி மறுக்கிறார். உலகை பாவங்களற்றதாக நீ மாற்றி ஒன்றும் ஆகப்போவதில்லை என கடவுளிடம் அவர் சொல்கிறார். ஏனென்றால் அவர் மரணத்தை தன்னை இழக்கும் ஒரு உயரிய கலையாக பார்க்கிறார். அல்லது மரணம் எனும் எதிர்மறை மனநிலைக்குள் தன்னை தொலைத்திட நினைக்கிறார்.

அவருக்கு மரணம் என்பது வலியின் பொருட்டே சிக்கலாகிறது. தன் மரணத்தை கூட ஏற்கலாம். ஆனால் அதை விட ஒரு சின்ன வலியை தான் தன்னால் தாங்க முடியாது என ஒரு நவீன மனுஷி நினைப்பது எப்படியான ஒரு அவநம்பிக்கையான, அவலமான நிலை பாருங்கள். அம்மனுஷி எனக்கு வாழ்வது முக்கியமில்லை, ஆனால் இருக்கும் சில நொடிகள் வலியின்றி இருக்க வேண்டும் என்கிறாள். வாழ்க்கை என்பது அவ்வப்போதைக்கான துர்பலமான, தற்காலிக நிம்மதியாக மட்டுமே நமக்கு உள்ளதை மனுஷி காட்டுகிறார். பிறகு தான் அவர் இந்த சுவிசேச வரிகளை கூவிச் செல்லும் ஊனமுற்ற ஆளைப் பார்க்கிறார். அவரது உடல் சிதைவை, அதன் கசப்பை உணர்கிறார். முற்றிலும் மாறுபட்ட கசப்பான துக்கமான ஒரு உலகில் இருந்து ஒருவர் நம்பிக்கையுடன் இறைவனுடன் உரையாடப் பார்ப்பதை கவனிக்கிறார். இந்த இரண்டு உலகங்களும் சந்திக்கும் இடம் இக்கவிதையில் முக்கியம். அப்போது மனுஷி வாழ்க்கைப் பார்வை பரிபூரணமாகிறது. வாழ்க்கையின் அபத்தம், அர்த்தமின்மை, தீமை அத்தனைக்கும் அப்பால் அதன் பிரகாசமான வெளிச்சமும் அவருக்கு புலனாகிறது. அந்த வெளிச்சம் ஒரு மனிதனின் அக ஆழத்தில் இருந்து வருகிறது. வாழ்க்கை எந்தளவுக்கு இருட்டாக மாறினாலும் அகத்தில் ஒளியிருந்தால் நமக்கு வழிநடக்க அது போதும் என அறிகிறார்.

கழிவிரக்கத்தை உன்னதமான நிலைக்கு எடுத்து சென்று அன்புக்கான ஒரு ஆன்மீக இறைஞ்சலாக மாற்றுவது மனுஷ்யபுத்திரனின் கவிதை பாணிகளில் ஒன்று. அந்த அச்சில் வார்க்கப்பட்ட கவிதை “பலவீனமானது எனது அன்பு”.

“மிகவும் பலவீனமானது
என் அன்பு
ஒரு கண்ணாடிச் சாடியைப் போல
உடைத்தெறியப்பட்டபோதும்
ஒரு பொம்மையைப் போல
உதைத்து விளையாடிய போதும்
நாட்பட்ட மௌனத்திற்குப் பிறகு
உன் காலடியில் வந்து
தஞ்சம் புகும் அது
கடல் அலைகள்
கரை தீண்டி மீள்வதைப் போல.”

”தேவமைந்தனின் காதல்” அன்பின் பின்னுள்ள ஒரு வன்முறையை பேசுகிறது. ஒரு புறம் கூர்நகங்களை தீட்டிக் கொண்டும் இன்னொரு புறம் முத்தமிட்டுக் கொண்டும் காதல் ஒரு துர்பலமான விளிம்பில் உயிர் தரிக்கிறது. அதுவும் உன்னதமான நுண்ணுர்வு கொண்ட ஒரு மனிதனுடனான அன்பில் தீமை அடிக்கடி எட்டிப் பார்க்கும் போது

இரத்தம் சுவைக்கத் தொடங்குகையில் எல்லாம்
 இறுக அணைத்து
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட தேவமைந்தன் நீ என்று
 நினைவுபடுத்த வேண்டியிருந்தது”
 என்கிறார்.

ஒரு உறவு முரடு தட்டி செயற்கையாகிப் போகையில் அந்த அன்பு எங்கு போகிறது? அது பாசாங்கின் விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும். அதை சில நொடிகளாவது விடுவிப்பது எப்படி? உணர்ச்சிகரமான ஒரு சொல்லோ, ஒரு முத்தமோ, ஒரு கண்ணீர் துளியோ அதைச் செய்யலாம். இந்நேரத்தில் தோன்றும் மிக நுணுக்கமான, மென்மையான், தொட்டால் உடைந்து விடுவது போன்ற நீர்க்குமிழி மனநிலையை மிக லாவகமாக பதிவு செய்ய மனுஷிக்கு வருகிறது. இக்கவிதையும் மனுஷ்யபுத்திரனின் பாணியை நினைவுபடுத்துகிறது:

“உன் அறைக்கு வரும்போது
உன்னை முத்தமிட விரும்புகிறேன்.
உன் கன்னத்தை
இரு கைகளால் பற்றி
உன் கண்களிலோ
உன் காது மடல்களிலோ
உன் நெற்றியிலோ
முத்தமிட விரும்புகிறேன்
பால்வாசம் வீசும் குழந்தையை முத்தமிடுவதைப் போல.
அப்படித்தான் முத்தமிட விரும்புகிறேன்
அதை நீ விரும்பவில்லை
என்றபோதும்.
உன் அறைக்கு வரும்போது
உன்னை
இறுக அணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் முத்தமிட்ட பிறகோ
அணைத்துக் கொண்ட பிறகோ
நான் வெளியேறிய பிறகோ
நீ அழக்கூடும்.
வேறென்னவும் நடக்கலாம்.”

உறவின் போதான சந்தேகமும் அச்சமும் அர்த்தமற்ற அதிகார வேட்கையும் விதையை மூடும் மண்ணைப் போல் அன்பை மூடிக் கொள்கின்றன. உறவு பாரமானதாக மூச்சு முட்ட செய்யும் பாசாங்கும் போலித்தனமும் கொண்டதாக ஆகிறது. அந்த கேள்வியை அது எவ்வளவு கேவலமானதாக கீழ்த்தரமானதாக இருந்தாலும் கேட்டு முடிப்பதும், அதற்கான பதிலை, அது எவ்வளவு அவமானத்திற்குரியதாக தோன்றினாலும் சொல்லி விடுவது நல்லது. பிறகு அந்த உறவாடலில் ஒன்றும் இருப்பதில்லை. ஒன்றுமில்லாத விடுபடல் உணர்வு உறவை மீண்டும் தூய்மையாக ஆழமாக மாற்றுகிறது. ஒன்றுமற்றிருப்பது தான் உறவின் உண்மையான சுதந்திரம் என “அந்த கேள்வியை கேட்பாய் என முன்னமே தெரியும்” கவிதை கூறுகிறது:
 மரணம் என்பது தன்னைத் தானே சாப்பிடும் ஒரு குழந்தை என்கிறது “மரணக்குழந்தை” கவிதை.

“அறைக்குள் வந்த மரணத்தை
ஒரு குழந்தையாக்கி அமர வைத்துவிட்டேன்
அசையாமல் அமர்ந்திருந்த அதன் கையில்
சில பொம்மைகளை எடுத்துத் தந்தேன்
விளையாடும் மனநிலையில்
இல்லை
அது
ஒரு வார்த்தையும் பேசவில்லை
அச்சுறுத்தும் மௌனத்துடன்
விழித்துக் கொண்டே இருக்கிறது
இரவில்
அறையின் மின்விளக்கு அணையாமல் இருப்பதை
மரணக்குழந்தை விரும்பவில்லை.
மெல்ல கண்களை மூடுகையில் மட்டும்
முகத்தைப் பொத்தி விளையாடுகிறது”


என ஆரம்பித்து செல்லும் இக்கவிதை மரணம் என்பது முடிவற்ற அழம் கொண்ட படுகுழியாக, தீராப் பசி கொண்ட பெருந்தீயாக இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்களை தாரை வார்க்கலாம் என்பது தவிர மரணத்திற்கு என தனி அர்த்தம் ஒன்றும் இல்லை என்கிறது இக்கவிதை. மரணம் என்பது தன்னைத் தானே புசிக்கும் ஒன்று என்கிறது இக்கவிதை. அப்போது மரணம் தன்னளவில் சாரமற்றதாக, தனக்குள் குவிகிற, தன்னையே உண்டு தன்னை பிரதிபலிக்கிற ஒன்றாக மாறுகிறது. அது வாழ்க்கையை போன்றதாகிறது. இருத்தலியம் வாழ்க்கையை பற்றி கொள்கிற பார்வையை இங்கு மனுஷி மரணம் பற்றிக் கொள்கிறார். இது ஒரு மிக தீவிரமான கவிதை. இச்சரடை பிடித்துப் போய் பல முக்கியமான தத்துவார்த்த கவிதைகளை மனுஷியால் எதிர்காலத்தில் எழுத இயலும்.