புத்தகத் திருடன் - மனுஷ்ய புத்திரன்

Footprints by prettyfreakjesper

புத்தகத் திருடன்
ஒரு பசித்த பூனையைப்போல
ஓசையின்றி நடந்து
உள்ளே வருகிறான்

நூலகங்களுக்குள்
புத்தக் கடைகளுக்குள்
நண்பர்களின் வீடுகளுக்குள்
எந்த சந்தேகத்திற்கும்
இடமில்லாத வகையில்
அவன் நுழைகிறான்

ஒரு புத்தகத்தை திருடுவது
ஒரு எழுத்தாளன்
இன்னொரு எழுத்தாளனின்
எழுத்தை திருடுவதுபோன்றல்ல
ஒரு இசைக்கலைஞன்
இன்னொரு இசைஞனின்
இசையை திருடுவதுபோன்றதல்ல
ஒரு சினிமா எடுப்பன்
இன்னொருவனின்
சினிமாவை திருடுவது போன்றதல்ல
அவை மேதமையின் ஒரு பகுதியாவிடுகின்றன
அவை கலையின் ஒரு பகுதியாகிவிடுகின்றன.

ஆனால் ஒருவன்
அச்சிடப்பட்ட ஒரு பிரதியை
வெறுமனே திருடுகிறான்
திருடப்பட்ட ஒரு புத்தகத்தை
இன்னொரு புத்தகத்திற்குள்
மறைத்துக்கொள்ளும்போது
திருடப்பட்ட ஒரு புத்தகத்தை
எங்கோ தன் உடலில்
ஆழமாக சொருகிக்கொள்ளும்போது
அவன் மிக அந்தரங்கமான
மனக் கிளர்ச்சியை அடைகிறான்
அது தான் நேசித்த ஒர் உடலை
முதல்முறையாக அடைவதுபோலத்தான் இருக்கிறது

ஒரு புத்தகத்திருடன்
ஒருவனுடைய மிக அரிய ஒரு புத்தகத்தை திருடும்போது
ஒரு குழந்தையின் கொலுசைத் திருடும் கள்வனைப் போல
ஒரு கணம் சஞ்சலமடைகிறான்
ஒரு காதலின் நிமித்தமாக கையெழுதிட்டு
தரப்பட்ட புத்தகத்தை திருடும்போது
அவசரமாக அந்தப் பக்கத்தை கிழித்துவிடுகிறான்

புத்தகத் திருடன்
திருடப்பட்ட புத்தகத்துடன்
வெளியேறிச் செல்லும்போது
யாருடையை கண்களோ
தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றன
என்பதை அறிந்துகொள்கிறான்
அவன் திரும்பித் திரும்பி பார்க்கிறான்
அவனை யாரும் சந்தேகிக்கவில்லை என்றபோதும்
தன்னை பின்தொடர்வது
தன் முதுகுக்கு பின்னால் இருக்கும் கண்களல்ல
அது தான் திருடிய புத்தகத்தின் கண்கள் என்பதை அறிய
அவனுக்கு நீண்ட நேரமாகவில்லை

ஒவ்வொரு திருடனும்
தான் திருடிய பொருளில்
ஏதோ ஒரு ஆதாயத்தை அடைகிறான்
ஆனால்
புத்தகத் திருடன்
இருளில் எந்த நிச்சயமும் இல்லாமல்
நடந்து போகிறான்
தன்னை தற்கொலைப் பாதைக்கு அழைத்துச்செல்லும் 
ஒரு புத்தகத்துடன்
தன்னை பைத்தியமாக்கப்போகும்
ஒரு புத்தகத்துடன்
பாதிப் புணர்ச்சியில் தன்னை மனங்கசந்து அழச் செய்யப்போகும்
ஒரு புத்தகத்துடன்
தனது வீடு தன்னுடையதல்ல என்று உணரச் செய்யப்போகும்
ஒரு புத்தகத்துடன்
தனது வேர்களிருந்து தன்னை துண்டிக்கப் போகும்
ஒரு புத்தகத்துடன்
தனது கடவுளை கொலைசெய்யத் தூண்டும்
ஒரு புத்தகத்துடன்

·