ஓயாப்பெரு நடனம் 3

பித்தும் நீட்சியும்




 

 
              பித்து நிலை என்பது கவிதையின் ஆகச்சிறந்த உபகூற்று. எழுத்தில் மட்டுமே பெயர்க்கக் கூடிய மானுடத்தின் தனிமை அனுபவங்களில் ஒன்றாக இதனைச் சுட்டலாம்.திட்டமிட்டு எதையும் எழுதுவதோ கணிணியில் மென்பொருள் கொண்டு கவிதை எழுதிப் பார்ப்பதோ மரபுக்கவிதை என்னும் ஒரு
இலக்கணத்துக்குள் அடங்கியாகவேண்டிய வகைமைக்கு வேண்டுமாயின் சரிப்பட்டு வரலாம்.
மாறாக நவகவிதை இவைகளை ஒருபோதும் அனுமதிக்கிறதில்லை.கவிதை என்பதன் உளவியல்
மிகவிரிவான ஒரு விஷயம்.அதை மெல்லத் தொட்டுத் திருப்பலாம்.


                                                 எழுதிய ஒரு வரியை/சில வரிகளைத் தானே மறுபடி வாசிக்கையில் அதை
எழுதியவன் அயர்ந்து இதை எப்படி எழுதினோம் என்று எவ்வளவு யோசித்தாலும் எதுவுந்தோன்றாது எழுதியதையே வெறித்துக் கொண்டிருக்க நேரும்.எழுதுகிறவன் மூலமாக எழுத்து இயங்குகிறதைப்
புரிந்துகொள்ள இயலும்.இதனைப் பித்து நிலையில் சுலபமாய்ப் பிரதியிடலாம்.எழுதுகிறவனின்
அறியாமையும் மடமையும் மனதின் சிதைவும் நம்பகமும் பயங்களும் தீர்மானங்களும் தனிமையும்
பிறழ்தலும் இன்னபிறவும் வாசிக்கிறவனின் மனதில் சமான அதிர்வுகளைத் தோற்றுவிக்கின்றன.பித்து
நிலை என்பது கவித்துவமாகிறது.மடமை போற்றுதலுக்குரியதாகிறது.

                            
உணர்வுகளை அனுபவங்களை தீர்மானங்களை எழுதப்பட்ட வரிகளுள் பிரதிபலிக்கிறது
கவிதை என்றாகலாம்.இந்த வரியை இங்கே விட்டுவிட்டு நீட்சி என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்.
நீட்சி என்பதை அடிக்கடிக் கவிதைகளோடு தொடர்புறுத்திப் பேசும் சப்தம் கேட்கிறதல்லவா..?நீட்சி
என்பதை எப்படி எடுத்துக்கொள்வது.ஒரு கதை அல்லது குறுநாவல் நாவல் அல்லது கட்டுரை எதற்கும்
நீட்சி இருக்குமா..?இல்லாது போகுமோ..?இருக்குமானால் ஏன் கவிதையில் மட்டும் நீட்சி என்பதற்குப் புனிதஸ்தானம் அளித்துப் பூசிக்கிறார்கள்..?

            
நல்ல கேள்வி.கவிதை என்பது முடிவுற்ற படைப்பா என்பதை முதலில் பேசலாம்.ஒரு கவிதை
இத்தனை வரிகளுக்குள் எழுதிப்பார்ப்பது என்று முன் தீர்மானித்து எழுதவியலுமா..?எழுதக்கூடும்.அல்லது
எழுதி முடித்து எண்ணிப் பார்க்கையில் தான் அது எத்தனை வரிகளில் அமைந்திருக்கிறது என்று தரிசிக்க இயலும்.எத்தனை வரிகளில் எத்தனை சொற்களில் ஒரு கவிதை முடிந்தாலும் கூட அந்தக் கவிதை
நிசமாகவே அங்கே முடிவடைகின்றதா..?என்று சிந்தித்தால் சௌக்கியம் நேரும்.

        
மெய்யாகப் பார்த்தால் அப்படி எந்தக் கவிதையும் முடிவுற்றே ஆகவேண்டும் என்று எந்தப் புற
அல்லது அக நிர்ப்பந்தங்களும் இல்லை என உணரலாம்.ஒரு கவிதையின் ப்ரதானமாக நீட்சியை சுட்ட முடியும்.ஒரு கவிதை எழுதுகிறவனிடமிருந்து விடுபட்டு வாசிக்கிறவனை ஒரு பறவையைப் போல வந்தடைவதாகக் கொள்வோம்.பிரயாண காலத்து வளர்ச்சி என்பது நிச்சயமாக இருக்கக் கூடும் அல்லவா..?
சில மாதங்கள் பறந்த பிற்பாடு அந்த அடைதல் நிகழ்வதாகக் கற்பனை செய்தால் இது புரியக் கூடும்.

           
ஒரு கவிதையின் புரிதல் ஒரே அளவினதாக இருவேறு வாசகர்களின் எண்ணத்தில் இருக்கவே
இயலாது.நான் புரிந்துகொண்டாற் போலத் தான் நீயும் என்று எவரும் இன்னொருவரை நிர்பந்திக்க
இயலாது.இதன் உட்பரப்பில் நுட்பமாக அவதானிக்கையில் இன்னுமொரு விபரம் அவிழ்வதை உணரலாம்.
எழுதிய ஒருவன் கூட ஒரு கவிதை குறித்த புரிதலைக் கோரவோ கொடுக்கவோ இயலாது என்பதே அது.

      
எந்த ஒரு கலைப்படைப்பிலிருந்தும் கவிதையை விலக்கி உயர்த்துவதற்கு அதன் நீட்சிக்கான சாத்தியப்
பாடுகள் முக்கியக் காரணமாகின்றன.புகைப்படம் ஒன்றில் ஒரு மலரின் மலர்தல் கணம் சிறைப்படுவதாக வைத்துக்கொள்வோம்.அப்படிச் சிறைப்பட்ட காட்சியானது நிஜமா என்றால் நிஜம்.ஆனால் அது முன்பிருந்த நிஜமாக மாறுவது எப்போது..? அதே மலரின் வெம்புதல் தருணத்தில்.அதன் பின் அந்த மலர் உதிரும் கணத்தில்
அது முன்னர் நிஜமாகவும் தற்போதைய பொய்யாகவும் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது.இந்த மூன்று தருணங்களில் அந்தப் புகைப்படம் முழு நிஜமாக இருக்க சாத்தியமாகிற ஒற்றைத் தருணமாக அந்தப்
புகைப்படம் எடுக்கப்பட்ட ஒற்றைக் கணத்தைச் சொல்லலாம்.தத்ரூபம் என்பது கவிதையைப் பொறுத்தவரை
ஒரு சிறைப்பட்ட தருணமாக இல்லாமல் நகர்ந்து செல்லும் பறவையின் அலைதல் போல ஒரு அனுபவத்தை நகர்த்திச் செல்கிறது.எழுதப் பட்ட தருணத்திலிருந்தும் எழுதப்பட்ட மனதிலிருந்தும் ஒரு கவிதை தன்னை சுதந்தரித்துக் கொண்டபடி வாசிக்கிறவனுக்குள் புகுந்துகொள்கிறது.வாசிக்கிறவனையும் சேர்த்துக் கொண்டு
அதன் அடுத்த அலைதல் தொடங்குவதை நீட்சி எனச் சொல்ல இயலுகிறது.

           
எல்லாக் கவிதைகளின் கட்டாயமாக நீட்சி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.முடிவுற்ற
கவிதைகளும் வாய்க்கத் தான் செய்கின்றன.அவை விதிவிலக்குகள் எனச் சொல்லத்தக்கவை அல்ல.
மாறாக கவிதை என்னும் பெரும்பரப்பின் உட்கூறாக உப வகைமையாக நம்மால் முடிவுற்ற கவிதைகளைச் சொல்ல முடியும்.முடிவுற்ற கவிதைகளைப் போலவே வட்டக் கவிதை என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.


வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்போல
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை...
பின்னும் உயிர் வாழும் கானல்


இது பசுவய்யா என்றபேரில் இயங்குகையில் சுந்தரராமசாமி எழுதிய கவிதை.வேட்டை என்ற
சொல்லும் கானல் என்னும் சொல்லும் தமிழ்மொழியில் மிக எளிமையாகப் புய்ரியக்கூடிய
வாழ்வியலோடு மிக நெருக்கமான புழக்கத்தில் இருக்கிற சொற்கள் தான் என்பதில் இருந்து
இந்தக் கவிதையின் மேதமை துவங்குகிறது.சிந்தித்தால் இந்தக் கவிதையின் நீட்சியின் அபாரம்
நம்மை வியப்பிலாழ்த்தும்.வேட்டை என்பதில் நம் சூசகங்களை அனுமானங்களைப் பிரதியிடத்
தொடங்கினால் இந்தக் கவிதை மிகப் பிரம்மாண்டமாய்த் தன்னை விரித்துக்கொள்ளும்.தலை
விரித்தாடும் பெருவிருட்சம் போலச்சொல்ல முடிகிறது இந்தக் கவிதையின் நீட்சியை.

                
இதன் ஈற்று வரியான பின்னும் உயிர்வாழும் கானல் என்பதில் ஒளித்து வைக்கப்
பட்டிருக்கும் அதிர்ச்சி மிக உயிர்ப்பானது எனலாம்.வார்த்தைகளைக் கொண்டு வாசிக்கிறவனைக்
கிளர்த்துவதை விடவும் அவனை அயரடித்து விடுகிற குறளித்தனமான கவிதை மொழி சுந்தரராமசாமியினுடையது.மேலோட்டமான வாசிப்பில் மிக எளிமையாய்த் துவங்குகிற
சொற்கள் மிகவும் வேறாய்ப் பலவாய் மாறி விருட்சிக்கும் அவரது கவிதைகள் தமிழ்க்
கவிதைப் பரப்பில் மிக முக்கியமானவை.

இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய் பாசாங்கு செய்யும் நீ
என்னிடம்எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?

சுகிர்தராணி

           
இங்கே ஒரு காட்சியும் அதனூடான கவிசொல்லியின் உணர்வுகளும் வெகு நேரடியான
மொழியில் பதிவுசெய்யப்பட்டிருப்பதை உணரலாம்.பேருந்துப் பயணம் என்னும் தினம்தினம்
எல்லோருக்கும் வாய்க்கக் கூடிய களத்தில் இந்தக் கவிதை நிகழ்கிறது.பெயரற்ற ஒருவன்
கர்ப்பிணிக்கு இடம் தருவதைத் தவிர்ப்பதற்காக சன்னல் வழியே தன் பார்வையை நிலை
கொள்வதை ஒரு பெண் எள்ளுவது போல இக்கவிதை அமைகிறது கூடவே இக்கவிதையின்
நீட்சியில் இன்னும் அவளையும் அவனையும் தவிர அந்தப் பேருந்தில் அமர்ந்து பயணிக்கிற
மற்ற பிறர் மீதெல்லாமும் இங்கே சுட்டப்பட்டிருக்கிற பாசாங்கு என்னும் சொல் வியாபிப்பதை உணரமுடியும்.இந்தக் கவிதையின் முழு பலமும் பாசாங்கு என்னும் ஒற்றைச்சொல்லில்
தாங்கி நிற்பதையும் அந்தச் சொல்லை நீக்கிவிட்டு வேறேதையும் நம்மால் கற்பனை செய்ய முடியாமற்போவதையும் இக்கவிதை அழகுற வெளிப்படுத்துகிறது.
///// 
எந்த சமயத்தில்
எந்தக் கதவு திறக்கும்
என்று
யார்தான்
சொல்ல முடியும்?////

இது யாருடைய எந்தக் கவிதையின் வரிகள் என புத்தகம் புரட்டாமல் ஃபோன்செய்யாமல் மனனத்தில் இருந்து எடுத்துச் சொல்பவர்களுக்கு மட்டும் ஒரு ஷொட்டு.அடுத்த அத்தியாயத்தில் அவர் பற்றியும் அவர் கவிதைகள் குறித்தும் பார்க்கப் போகிறோம்.


தொடரலாம்
அன்போடு

ஆத்மார்த்தி