பெடரிக்கோ கார்சியா லோர்க்கா கவிதைகள் தமிழில் ஆர்.அபிலாஷ்


 
குட்டி ஊமைச் சிறுவன்
அந்த குட்டி ஊமைச் சிறுவன்
தன் குரலைத் தேடிக் கொண்டிருந்தான்
(அதை சிள்வண்டுகளின் ராஜா எடுத்திருந்தான்)
குட்டிப் பையன் தன் குரலைத் தேடிக் கொண்டிருந்தான்
ஒரு நீர்த்துளியில்.

எனக்கு அது பேசத் தேவையில்லை;
அதைக் கொண்டு நான் ஓர் மோதிரம் செய்வேன்
தன் சுண்டு விரலில்
அவன் என் மௌனத்தை அணியும் பொருட்டு.

ஒரு நீர்த்துளியில்
குட்டிப் பையன் தன் குரலைத் தேடிக் கொண்டிருந்தான்.
(சிறைபட்ட குரல், வெகு தொலைவில்,
ஒரு சிள்வண்டின் ஆடையை அணிந்து கொண்டது)

 தற்கொலை

(ஒருவேளை அவனுக்கு
ஜியாமெட்ரி தெரியாததனால் இருக்கலாம்)

காலை பத்து மணிக்கு
அந்த இளைஞனுக்கு மறந்து போனது.

அவன் இதயம் நிரம்பிக் கொண்டிருந்தது
முறிந்த சிறகுகளாலும் செயற்கை பூக்களாலும்.

தன் வாயை கவனித்தான்
அங்கு ஒரு சிறுசொல் மட்டும் மீதமிருந்தது.

தன் கையுறைகளை அவன் கழற்றிய போது,
மிக சன்னமான சாம்பல் அவன் கைகளில் இருந்து உதிர்ந்தது.

பால்கனியில் இருந்து ஒரு கோபுரத்தை பார்த்தான்.
தான் ஒரு பால்கனியாகவும் கோபுரமாகவும் இருப்பதாய் உணர்ந்தான்.

கடிகாரத்தின் சட்டகம் பார்த்தே
அது தன்னை கவனிப்பதை நிறுத்தி விட்டதென உணர்ந்தான்.

பட்டு சோபாவில் அவன் நிழல்
நீட்டி பரந்து படுத்திருப்பதை பார்த்தான்.

இறுக்கமாய், ஜியாமெட்ரி போல் ஆன அவன்
ஒரு கோடரியால் உடைத்தான் கண்ணாடியை

அது உடைய, நிழலின் பிரவாகம்
அவன் மாய உலகை வெள்ளக்காடாக்க்கியது.