சுந்தர ராமசாமி கவிதையின் கலை: நேர்மையான எளிமையான அறிமுக நூல் - ஆர்.அபிலாஷ்
மேற்கில் – குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்காவில் - ஒரு எழுத்தாளன் பற்றி படிக்கவே ஏராளமாய் நல்ல நூல்கள் இருக்கும். ஷேக்ஸ்பியர் தான் எழுதியதற்கு ஆயிரம் மடங்கு கட்டுரைகளும் நூறு மடங்கு நூல்களும் அவரைப் பற்றி உண்டு. இவை ஒரு வீட்டை அடைவதற்கான வெளிச்சமிட்ட சுத்தமான விரிவான பாதை, அழகான படிக்கட்டுகள் போன்றவை. ஏதோ ஒரு காரணத்துக்காக இந்தியர்களுக்கு ஆளுமைகளை அலசி புரிந்து பதிவு செய்வதில் விருப்பமில்லை. இங்கு நாம் எழுத்தாளன் பற்றின தொன்மங்கள், வாழ்மொழி கதைகளை உருவாக்கவே பிரயத்தனப்படுகிறோம். தமிழின் மிக முக்கிய கவிஞர்களான பிரமிள், நகுலன் போன்றோருக்கு சில தனிக்கட்டுரைகள் தவிர முழுமையான விளக்க, விமர்சன நூல்கள் இல்லை. அந்த கொடுப்பினை சுந்தர ராமசாமிக்கு உள்ளது. அவரைப் பற்றின சில நல்ல நூல்களை காலச்சுவடு வெளியிட்டு வருகிறது. சு.ரா பிற எழுத்தாளர்களைப் பற்றின தன் நினைவுகளை அசைபோட்ட நூல்களின் வரிசையையும் அவரை அறிவதற்கான நூல்களாகவே பார்க்கலாம். ராஜமார்த்தாண்டன் எழுதிய “சுந்தர ராமசாமி கவிதையின் கலை” அது போல் ஒரு நூல். அது அவரது கவிதைகளை கொண்டாடுவதற்கு, அசைபோடுவதற்கு, கொஞ்சம் அலசுவதற்கு, எளிய அறிமுகங்கள் கொடுப்பதற்கு முனைகிறது.
நூலின் சில இடங்களில் சுந்தர ராமசாமியுடனான தனிப்பட்ட உரையாடல்கள் வழி அவரது படைப்புலகை அணுக முயல்கிறார் ராஜ மார்த்தாண்டன். இவை நூலுக்கு ஒரு கூர்மையை வெளிச்சத்தை தருகிறது. குறிப்பாய் புதுமைப்பித்தனின் அங்கதக் கவிதைகளை சு.ராவின் பாணியுடன் ஒப்பிடும் இடங்கள், சு.ராவின் நகம் பற்றின கவிதை ஏற்படுத்தின பாதிப்பு ஆகியவை சுவாரஸ்யமானவை. மண்ணாந்தை கவிதையின் பிரசுரம், அதை ஒட்டின சர்ச்சையை குறிப்பிடும் போது இக்கவிதையை (ராஜமார்த்தாண்டன் கூறுவதற்கு மாறாக) நாம் நகுலன் கவிதைகள் மீதான பகடியாக பார்க்கலாமோ என தோன்றுகிறது. ஒரிஜினல் ஆந்தையை தேடுகிறார் சு.ரா. ஆனால் தேவையின்றி போலி மண்ணாந்தைகள் அவரது பிரக்ஞையில் நுழைந்து தொந்தரவு பண்ணிக் கொண்டே இருக்கின்றன. நகுலனின் கவிதைகளில் மனித தோற்றங்கள் போலிகள் எனும் குறிப்பு இருந்து கொண்டே இருக்கும். நகுலனை தான் மண்ணாந்தை என்கிறார் என்றால் அவரை போலி தத்துவவாதி என சு.ரா கூறுகிறார் என்றும் பார்க்கலாம். ஆனால் சு.ரா இதை பின்னர் மறுக்கிறார். நகுலனும் இக்கவிதையை பாராட்டுகிறார் என ராஜமார்த்தாண்டன் கூறுகிறார். சு.ராவின் கண்ணியமும், நகுலனின் வெகுளித்தனமும் காரணமாக இருக்கலாம். ஆனால் நமக்கு இது புது பார்வையை தருகிறது.
இரண்டு அத்தியாயங்கள் அவர் சு.ரா மரபு குறித்து கூறியதையும், சு.ராவுக்கு மரபில் ஆர்வமில்லாது இருந்தது அவரது குறைபாடு என ஜெ.மோ கூறியதையும் மறுக்க ராஜமார்த்தாண்டன் பலவீனமாய் முயல்கிறார். இவ்விடங்களில் அவருக்கு பொதுவாக விமர்சன துறையில் பயிற்சி இல்லாதது புலப்படுகிறது. ராஜமார்த்தாண்டன் தமிழ் மாணவர். அவர் நவீன விமர்சன முறைகளை ஊன்றி கற்கவும் இல்லை. அதனால் சு.ரா மரபின் தொடர்ச்சி தேவையில்லை எனக் கூறியதை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. பழைய இலக்கியங்களை முரணின்றி படிக்க முடியவில்லை என சு,ரா சொல்கிறார். அதன் பொருள் பழைய இலக்கியத்துக்கு இன்று பொருள் இல்லை என்றல்ல. இன்றைய சில சிக்கல்கள் இக்காலத்துக்கே உரித்தானவை. உதாரணமாய் நம்பிக்கை இழப்பு, அமைப்புகள் தனிமனிதனை சுரண்டுவது, கட்டுப்படுத்துவது ஆகியவை. இவற்றை நாம் பழைய இலக்கியத்தில் பார்க்க முடியாது. இதைத் தான் சு.ர சொல்ல வருகிறார். ஆனால் ராஜமார்த்தாண்டன் இது புரியாமல் பழைய இலக்கியத்தில் உள்ள இழப்பு, துக்கம், அன்பு ஆகியவை எக்காலத்துக்கும் பொருத்தமானவை என நிறுவன மரபிலக்கிலக்கிய உதாரணங்களை கத்தை கத்தையாய் அடுக்கி பேசிக் கொண்டே போகிறார். இப்படி ராஜமார்த்தாண்டன் கையில் சு.ரா குருடர்களிடம் யானை போல் அவ்வப்போது அவஸ்தைப்படுகிறார்.
ஜெ.மோ சு.ராவுக்கு மரபில் பிடிப்பில்லை என கூறும் போது அவரது ஆதங்கம் அவருக்கு மரபில் ஆர்வமில்லை என்பது மட்டுமல்ல. தேவதேவன் போல் ஆழமான மரபுசார் ஆன்மீக கருத்துக்கள் சு.ராவிடம் இல்லை என்பது தான். எல்லோரும் தேவதேவனாக இருக்க அவசியம் இல்லை. சிலர் மரபில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். ஆனால் ராஜமார்த்தாண்டன் சு.ராவுக்கு கம்பனிலும், இளங்கோவிலும் அர்வம் இருந்ததை நிறுவ வீணே போராடுகிறார். மேலும் ஜெ.மோ மரபு எனும் போது இந்து மேலாதிக்கத்தையும் தான் உணர்த்துகிறார். ஜெ.மோவின் அரசியல் ராஜமார்த்தாண்டனுக்கு புரியவில்லையா அல்லது அவர் நிஜமாகவே வெகுளி மாதிரி நடிக்கிறார தெரியவில்லை.
மிச்ச புத்தகமெல்லாம் ராஜமார்த்தாண்டன் சு.ராவின் தனிக்கவிதைகள் பற்றின குறிப்புகள். இவை ஆழமான அலசல்கள் அல்ல எனிலும் ஒரு பார்வை என்ற வகையில் வாசிக்க அழகானவை. ஏற்கனவே சு.ராவின் கவிதைகள் பழகினவர்களுக்கு இவை பல நினைவுகளை கிளர்த்தும். சு.ரா பற்றின சுகுமாரன், அரவிந்தன் ஆகியோரின் மேற்கோள்களும் வருகின்றன. சு.ரா ஆய்வாளனுக்கு இவை உதவும். பொதுவாக சு.ரா பற்றி நம் இலக்கிய தளத்தில் உள்ள பல அபிப்ராயங்களின் தொகுப்பாகவும் இந்த குறிப்புகளை பார்க்கலாம். “வாழ்வின் அபாரமான தேடலை நோக்கிய பாய்ச்சல்” போன்ற அரூபமான பிரயோகங்கள் அலுப்பூட்டினாலும், சு.ரா மீதான பக்தி இடையூறாக இருந்தாலும் ஒரு சு.ரா வாசகனின் களங்கமற்ற அணுகுமுறையாக இக்குறிப்புகள் வலுப்பெறுகின்றன.
மேலும் பல கவிஞர்களுக்கு இது போன்ற அறிமுக நூல்கள் எழுதப்பட்ட வேண்டும். அதற்கு அவர்கள் சாகிற வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.