நவீன அமெரிக்க கவிதை (4) - ஆர்.அபிலாஷ்காதல் 20 டாலர்கள், முதல் கால்வாசி மைல் தூரம்
-                                              - கென்னத் பியரிங்


சரி தான். நான் உன்னிடமும், உன்னைப் பற்றியும் பொய் சொல்லி இருக்கலாம்
பொத்தாம் பொதுவாய் சில விசயங்கள் அறிவித்திருக்கலாம், சொல்வதானால், ஒருவேளை எல்லா பிரச்சனைகளையும் முடித்து வைக்க மறந்திருக்கலாம்,
உன் ஆர்ப்பாட்டங்களை சபித்திருக்கலாம், ரசனைகளை கேவலப்படுத்தியிருக்கலாம்,
உறவினர்களை அவதூறு செய்திருக்கலாம், உன் நண்பர்கள் சிலருக்கு
அவப்பெயர் வரும் படி பேசியிருக்கலாம்.
ஒகெ.,
இருந்தாலும், திரும்ப வந்து விடு  

வீட்டுக்கு வா. என்னைப் பற்றி சுற்றத்துக்கும் பத்திரிகைகளுக்கும் நீ
தாராளமாய் அள்ளி வழங்கிய அறிக்கைகளை மறந்திட நானும் ஒத்துக் கொள்கிறேன்,
நீ, உன் கற்பனையை, அந்த டெட்ரோயிட்டில் உள்ள பொன்வண்ண கூந்தல் கொண்ட பெண் இருக்கிறாளே, அவளை மறந்ததாய் கொள்,
நமக்கு மேல் மாடியில் வசிக்கும் உன் தோழி,
உன் பல கிராக்குத்தனமான தோழிகளைப் போலன்றி,
பைத்தியமல்ல, கொஞ்சம் புத்திசாலி தான் என நானும் ஏற்கிறேன்
அந்த பாவம் ஸ்டெயின்பெர்க் குடிகாரனோ ஏமாற்றுக்காரனோ அல்ல,
கொஞ்சம் கோணலான, ஏதோ தன் போக்கில் வாழ்ந்து போகிற எளிய மனிதன் என நீயும் ஏற்றுக் கொள்.
(கேட்கிறாயா மூதி, இது தெளிவாக புரிகிறதா உனக்கு?)

நான் உன்னை மன்னிக்கிறேன், ஆம் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான், என்பதால்
அழகாகவும், தாராளமாகவும் விவேகமாகவும் இருப்பதற்கும் உன்னை மன்னிப்பதால்
இன்னும் எளிதாய் சொல்வதானால், நீ உயிருடன் இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்,
நீ நீயாக இருப்பதற்கே உன்னை மன்னிப்பதால்
இன்றிரவு நீ என் முடியிலும் கண்களிலும் இருப்பதால்
இந்த டாக்ஸி கடந்து போகும் ஒவ்வொரு தெருவும் மீண்டும் உன்னை, இன்னும் உன்னையே காட்டுவதால்
இன்றிரவு எல்லா இரவுகளும் கறுப்பாய் உள்ளதாய், எல்லா நாழிகைகளும் கடுங்குளிராய் இருப்பதால்
வெகு தொலைவில், இப்போது, இந்த நிமிஷம், நட்சத்திரங்கள் மிக அருகில் பிரகாசமாய் இருப்பதால்

திரும்ப வா. எல்லா கொண்டாட்டங்களையும் முடித்து வைக்க ஒரு முறை கொண்டாடுவோம் வா.
நமக்கு கீழ் குடியிருப்பில் உள்ள சவ அடக்கம் செய்வோனையும், அலுவலகத்தில் இருந்து சில நண்பர்களையும், வேறு சில நண்பர்களையும் அழைப்போம்.
அதோடு குடியை நிறுத்தி விட்ட ஸ்டெயின்பெக்கையும், மேல்மாடியில் வசிக்கும்
அந்த பைத்தியக்கார பெண்ணையும்,
ஏதாவது புது செய்தி தோன்றப் போகிறதென்றால் சில செய்தியாளர்களையும் அழைப்போம்.