ஒரு கவிதையை வெறுப்பது - மனுஷி



ஒரு கவிதையைத் தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருந்தேன்
ஒரு சிறு குழந்தையை 
மரணத்திடம் பறிகொடுத்துவிட்டதைப் போல
மனம் பதறுகிறது
அது என் கவிதை அல்ல
என் குறித்து எழுதப்பட்ட கவிதையும் அல்ல
கணினியில் தட்டச்சு செய்து,
பாதுகாப்பாய் வைக்கச் சொல்லி
என்னிடம் தரப்பட்ட கவிதை
உண்மையில்
அது ஒரு குழந்தையைப் பற்றிய கவிதை
அந்தக் கவிதை
முதன்முதலாக என்னிடம்
வாசித்துக் காட்டப்படவில்லை என்பதாலும்
என்னைப் பற்றி ஒரு வரி கூட 
அதில் இல்லை என்பதாலும்
அந்தக் கவிதையை வெறுத்தேன்
ஒரு கவிதையை
காரணமற்ற காரணத்திற்காக வெறுத்தது
அதுவே முதல் முறை
வேறு சில தருணங்களில்
வேறு சில காரணமற்ற காரணங்களுக்காகச் 
சிலவற்றை வெறுத்திருக்கிறேன்
சிலரையும் தான்
என்னால் வெறுக்கப்பட்டதால்
எவருடைய கண்ணிலும் படாமல்
தற்கொலை செய்து கொண்டதோ
அந்தக் கவிதை?
ஒரு கவிதை 
காணாமல் போவதற்கும்
மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதற்கும்
ஏராளமான காரணங்கள் இருக்கக் கூடும்
என்று நம்புகிறேன்
காணாமல் போன அந்தக் கவிதையை
மீண்டும் நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து
எழுதி விடுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன
அல்லது
அதைவிட சிறந்த கவிதையை
எழுதுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன
இனி
காணாமல் போன கவிதைக்காக 
சில துளி கண்ணீரைச் சமர்ப்பணம் செய்யலாம்