இன்பா சுப்பிரமணியம் கவிதைகள்



இப்பவும் நான் அழுவது தெரியாதுங்களுக்கு 

----------------------------------------------------------

மரணிக்கின்ற தருவாயில்
இது இறுதி மூச்சு என்பதைச் சொல்லி 
கண்களும் மனசும் ஒரே நேர் கோட்டில் இணைந்து 
என் இறப்பை வெளிப்படுத்தும் 
இருதயம் முதலில் விடை பெற 
பின் ஒவ்வொன்றாய் ஓய்வு பெறும் 
நான் அல்லாமல் உடல் படுத்திருக்கும் 
ஆணுக்கு ஐந்து பெண்ணுக்கு எட்டு என 
கட்டுக்கள் கட்டப்பட்ட பின்னர்  
கோடி போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு  இருக்கும் 
அதுவரை உடல் மீது தீண்டா ஈக்கள் 
இதழ்க்  கடையோரம் மொய்க்கும்

பதிறி  எடுத்து பணிப்பெட்டிக்குள் வைத்து விடாதீர்கள் 
இனி வேர்க்காது எனக்கு 
வெளியில் இருக்கட்டும் அந்த உடல் 
உங்களை அனைதுக்கொள்ளவும்
உச்சி கோதவும் காத்திருந்தேன் 
உங்களுக்கான உலகில் 
எனக்கான அந்த சிறு நேரம் இன்றி போய் விட்டது
இயலுமெனில் என் உச்சி கோதி 
நெத்தியில் உங்கள் கரங்களை 
ஆதூரமாய்  சற்று நேரம் வையுங்கள் 
சதா புண்னகை போர்த்தி இருந்த என் முகம் 
உங்கள் கண்ணீரையும் 
அன்பையும் பூசிக் கொள்ளட்டும்


இப்பவும் நான் அழுவது தெரியாதுங்களுக்கு

---------------------------------------------------------------------------------------------


தூக்கணாங் குருவிக்கூடு
--------------------------------------------------

அண்டத்தை விழுங்கிவிடும்
எத்தனிப்பில் விரிகிறது எனது விழிகள் 

தெற்கே ஒவ்வொரு மரமும் 
நடனம் பயின்ற மாணவரைப் போல் 
லயத்தோடும் தாளத்தோடும்  ஆடுகின்றன .  
நானங் கொண்ட சூரியனும்
காதலில் தவிக்கும் பறவைகளும்  
உண்டதை அசைபோடும் கால்நடைகளுமென 
தேர்ந்த ஓவியன் வரைந்த 
படத்தைப் போலவே காட்சி விரிகிறது 

அரச  மரத்தின் கீழ்க்  கிளையில் 
தூக்கணாங் குருவிக்கூடு தொங்க 
வாய் மட்டும் வெளியே நீட்டி சிறுபறவை கீசுவது 
ஓவியனின் சிறப்போவியம் 
சிகப்பு பச்சை மஞ்சள் மற்றும் மர வண்ணம் 
இது தவிர பெயர் அறியா வண்ணங்களில் 
வரையப்பட்டிருந்தது அந்த இயற்கை ஓவியம் 

இதில் என் நிறம் என்ன? 
இதில் எது நான்?