ஓயாப் பெரு நடனம் 4 - ஆத்மார்த்தி

நிராகரிப்பதற்கு ஒரு கடவுள்

சென்ற அத்தியாயத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்ட அந்தக் கவிதையை எழுதியவர் நகுலன்.

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சத்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை

                   இன்றைக்கு எழுதிக்கொண்டிருப்பவர்களால் மிக அதிகமாக எள்ளலுக்கு உண்டாக்கப்படும் நகுலனின் கவிதையாக மேற்சொன்ன ராமச்சந்திரன் கவிதையை சொல்ல முடியும். பதில் சொல்வதற்கு நகுலன் இல்லாது போன பிற்பாடும் ஒரு கவிதை குறித்த வினவுதல்கள் தொடர்வதென்பது ஒருவகையில் ஆரோக்கியமானது தான்.எந்தக் கவிதையையும் காரணம் சொல்லி
நிராகரிப்பது என்பது வாசகத்துவத்தின் விமர்சனப் பார்வையும் அதனுள் செலுத்தப்பட்ட பின்னரே நேர்கிறது என்ற அளவில் எந்த விமர்சனமும் பொருட்படுத்துவதற்கல்ல.மற்றும் எல்லா விமர்சனங்களும்
பொருட்படுத்துவதற்கே.


        என்னளவில் நகுலனின் இந்த ராமச்சந்திரனா எனும் கவிதைக்கு நான் எம்.ஜி என்று ஒரு தலைப்புக் கொடுத்துப் படிக்கிறேன்.எம்ஜி ராமச்சந்திரனா என்று கேட்டேன். எனத் தொடங்கிப் படித்துப் பார்த்தால் இதழ் விரியும்.மொழியின் அபாய சாத்தியங்கள் புரியும்.இது என்னுடைய அவதானம், என்னிஷ்டம்.

       நகுலனின் கவிதாவுலகம் ப்ரேரணைகளாலும் குற்றச்சாட்டுகளாலும் நிரம்பியது.அவமானங்களை நகுலன் துல்லியமாக உற்றுப் பார்க்கிற கவிதைகளைப் படைத்துவைத்தார்.அவரைப் பொறுத்தளவில்
கவிதை எழுதுவதை மிக அந்தரங்கமான சல்லாபத்துக்குண்டான ரகஸ்யத் தனத்துடன் படைத்தார்.எந்தக் கவிதைக்குள்ளும் முன் நடு பின் சேர்மானங்கள் குறித்த எந்தக் கவலையுமில்லாத கவிதைகள் நகுலனுடையவை.
அவரது வசனகவிதை பாணிக் கவிதைகளைத் தாண்டி மழை மரம் காற்று மற்றும் கோட்ஸ்டாண்ட் கவிதைகள் ஆகியன என்னைப் பொறுத்தவரை கவிதைப் பித்தர்களுக்கான நல்லாரம்பம்.பால பாடம்.மிகவும் எளிதாகக் கடந்து செல்லக் கூடிய இயல்வாழ்வின் வாக்கியங்களாலேயே கவிதைகள் உருவாகும் என்பதை நகுலன் நம்பினார்.
அவரது நம்பகம் பொய்த்துவிடவில்லை.இன்னும் சொல்லப் போனால் அவரது சிற்சில கவிதைகளின் அபாயம் இன்னும் வெளித்தெரியவில்லை என்றே சொல்லலாம்.அவற்றைத் திறந்து கொண்டே இருக்கும் போது எத்தனையாவது திறப்பிலோ அவை வெடித்துச் சிதறும் மாயவாக்கியங்கள் என்பது புரிவதற்கு வரும்.
                   
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்
           
               இந்த நாலு வரிகளைப் பார்க்கலாம்.நகுலனின் ஆகச்சிறந்த கவிதை என நான் சுட்டவிரும்புவது இதனைத்
தான்.மனித வாழ்வினை இத்தனை ரத்னச்சுருக்கமாக வேறெந்த மொழியிலும் யாராவது சொல்லி இருக்கிறார்களா என்று ஆராய்ந்தால் நல்லது.வெறுமனே கடந்து செல்வதற்கில்லை இந்த வரிகள்.இந்தக் கவிதையின் அஸ்திவாரமே இது பன்மைத் தொனியில் நிகழ்வது தான்.காலம் என்னும் காரணி இந்தக் கவிதையில் எத்தனை அழகாகக் கையாளப் பட்டிருக்கிறது என்பது ரசம்.மேலும் இதன் வரிகள் ஒன்றுக்கொன்று மகா முரண்களைக் கொண்டிருப்பது நகுலனின் பேயாட்டம். இருப்பதற்கென்று தான் வருகிறோம்.இல்லாமல் போகிறோம்.இதில் இருப்பதற்கென்று வந்து இல்லாமல் போன பிறகு எஞ்சக் கூடிய ஒரே ஒரு ஒன்று என்ன எனச் சிந்தித்தால் புரியக் கூடும் நகுலன் என்னும் கவிசொல்லியின் சித்துவிளையாட்டு.

                               நகுலனின் வார்த்தைகள் குறித்துத் தனியே யாரேனும் ஆய்வு செய்யலாம்.அவர் கவிதைகள் எதிலும் வலிந்து புனையப் பட்ட ஒரு சொல்லையாவது கண்டறிவது இயலாது.நகுலன் ஒருவகையில் தமிழ்க்கவிதைப் பரப்பில் நவகவிதையின் ஆரம்பத்தில் நிகழ்ந்த தீர்க்கமான கவிதை இயக்கம்.

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்து கொண்டிருக்கிறது
எல்லாம்
                     நகுலனின் இந்த ஒரு கவிதையை அபத்தங்கள் நிரம்பித் ததும்பும் மனிதவாழ்வின் இருள் கணங்கள்
எல்லாவற்றிலும் பொறுத்திக் கொள்ள முடிவதை வியக்காதவர்களை நாய்கள் கடித்துக் குதறட்டும்.நாம் நகுலன் போற்றுவோம்.

நவ கவிஞர்களில் ஒருவரான முகுந்த் நாகராஜன் எழுதி மூன்றோ நான்கோ தொகுதிகள் வந்திருக்கின்றன என நம்புகிறேன்.,முகுந்த் நாகராஜனின் எழுத்துக்களில் மிக லேசாக நகுலனின் பாதிப்பு இருப்பதை இரண்டொரு சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன்.இதனை ஒரு பெரும்பாராட்டாகவே முன் வைக்கிறேன்.முகுந்த் நாகராஜன் அலாதியான சில கவிதைகளை எழுதி இருக்கிறார்.அவரது கிருஷ்ணன் நிழல் என்னும் கவிதைத் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்தது.அதில் இருக்கும் ஒரு கவிதை

மரமுதிர் காலம்

அதிகாலை நடை பழகும் போது
இரவு பெய்த மழையில்
விழுந்து கிடந்த
பெருமரத்தைப் பார்த்தேன்.
வழியில் உள்ள மரங்களை எல்லாம்
உற்றுப் பார்த்துக் கொண்டே
வீடு வந்து சேர்ந்தேன்.
கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படவில்லை


இந்தக் கவிதையை எத்தனை முறை வாசித்தாலும் அனேக இடங்களில் புதிய திறப்புக்களை நேர்த்திக் கொண்டே இருப்பது சிறப்பு.ஒரு இறுதி ஊர்வலத்தின் எல்லா முகங்களிலும் படர்ந்திருக்கும் பொதுப்படையான திகைப்பை திடுக்கிடுதலை இக்கவிதை ஏற்படுத்துவது இதன் மகாவெற்றி. முகுந்த் நாகராஜனிடம் இருந்து இன்னமும் எதிர்பார்க்கலாம். வரும்.

சன்னமான தனிமையான ஒரு மனத்தின் உடைதலைக் கவிதைப்படுத்தியவர்களுள் ஆனந்த் முக்கியமானவர். இவரது காலடியில் ஆகாயம்”, அவரவர் கைமணல் ஆகியவையும் அளவில்லாத மலர் என்னும் தொகுப்பும் சொல்லத்தக்கவை. ஆனந்தின் மொழி வெகு மென்மையான சிதைவை வெளிப்படுத்துவது. அபூர்வமான சில கவிதைகளை ஆனந்த் படைத்துக் காட்டினார்.

   ஆனந்தின் மாடிப்படி என்னும் கவிதை இங்கே

மாடிப்படி

மாடிப்படியில்
ஏறிக்கொண்டும்
இறங்கிக் கொண்டும்
இருக்கிறார்கள் அனைவரும்

ஏறிக்கொண்டும்
இறங்கிக்கொண்டும்
இருக்கிறது மாடிப்படி

இந்தக் கவிதையின் இரு பத்திகளுக்குள் இருக்கும் மௌனத்தின் மீது உற்று நோக்கினால் அசாத்தியமான கலைடாஸ்கோப் சித்திரங்களாக விரியும் பிம்பங்கள் கணக்கற்றவை.அஃறிணையின் உயிர்த்தன்மையை விளங்கிக் கொள்ளும் கவிதைகளை மிக அந்தரங்கமான கவிதை முயல்வுகள் எனக் கொண்டாடலாம். தகும். போலி செய்ய முடியாத அபூர்வங்களாக விரியும் இக்கவிதைகள் எப்போதும் ரசிக்கத் தக்கவை.மேற்சொன்ன கவிதை அவற்றில் ஒன்று.புத்தகப் பரிந்துரை
    கவிதை எழுதுவதன் மேல் தீராப்ரியம் அல்லது நோய்மை கொண்டவர்கள் படிப்பதற்குச் சில புத்தகங்களை வரிசையாகப் பரிந்துரைக்க உத்தேசம்.

1.புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை எழுதியவர் பாலா. அகரம் வெளியீடு ஐந்தாம் பதிப்பு 2011 ஜனவரி விலை ரூ 100..இன்னுமோர் நாள்
***************************

தும்பிக்கை நுனியில்
பெற்றுக்கொண்ட
நாணயத்தை
உயரத் தந்துவிட்டு
குழந்தையை ஆசீர்வதித்து
சமர்த்தாய் நடைபழகும்
இதே யானைதான்
இதே பாகனை.


         
                                                                                                            தொடரலாம்,
                                                                                                               ஆத்மார்த்தி