'பாண்டிய' உபதேசம் - சுதீர் செந்தில்






வானத்தில் இருந்து
பூமியில் படர்ந்தன நீல வண்ணக்கதிர்கள்

உறக்கத்தில் இருந்தவர்கள்
இருள் விலக விழித்துக்கொண்டார்கள்

முடியாட்சி வேண்டுமென போராட்டம் துவங்கியது
உறங்கி விழித்தவர்களும் இணைந்து கொண்டார்கள்

போராட்டத்தை எதிர்கொள்ளவியலா
அரசு
போராளிகளின் கோரிக்கைகளை ஏற்று
முடியரசு தீர்மானத்தை நிறைவேற்றியது

முடியரசின் வழக்கப்படி
அரசரை தேர்ந்து எடுக்க
பட்டத்து யானையிடம் மாலை கொடுக்கப்பட்டது

தாரை தப்பட்டை பரிவாரங்கள் உடன்
ராஜ கம்பீரத்தோடு புறப்பட்டது
திசைகளெங்கும் திரிந்தலைந்து
இறுதியில் அந்த நிலத்தை
கண்டடைந்தது பட்டத்து யானை

பரிவாரங்கள் வெகுவாக களைத்துப் போனாலும்
அரசரைக் காணும் ஆவலில் இருந்தார்கள்
பட்டத்து யானையோ
சற்றும் களைப்படையாமல்
மீண்டும் நகரத்தொடங்கியது

அன்றைய பகலில்
வழக்கமான மலை அடிவாரத்தில்
காட்டிக்கொடுக்கப்பட்ட அரசர்கள்
மறைந்து வாழ்ந்த
ஒரு பாறையில்
முருகேசபாண்டியரோடு லாகிரியில் இருந்தேன்

ரெமி மார்டினோடு ரஷ்ய வோட்கவையும்
கியூபாவில் இருந்து வரவழைக்கப்பட்ட
பகார்டி ரம்மையும்
நாட்டுச் சாராயத்தோடு
கலந்து அருந்திக் கொண்டிருந்தோம்

இலக்கியத்தில் துவங்கி
அரசியல் வழியாக
தத்துவங்களின் தோல்வி சோசலிசத்தின் வீழ்ச்சி
என நீண்ட பேச்சுகளின்
கசப்பை கடக்க முயன்று கொண்டிருந்தோம்

அப்போதுதான்
பட்டத்து யானை
பரிவாரங்கள் சூழ
ஆரவாரத்தோடு எங்களை நோக்கி
வந்தது
ஓர் ஆட்டுக்குட்டி வருவதுபோல

நாங்கள் சுதாரித்து எழுந்தோம்
அதன் கண்கள்
அன்பின் சுடரால்
ஒளிர்ந்து கொண்டிருந்தன

சற்றும் குழப்பம் அடையாமல்
என் கழுத்தில்
மாலையை அணிவித்தது

நாட்டின் அரசரானதை
அறியாமல் மயங்கிச் சரிந்தேன்


விழித்தெழுந்த இரவில்
நவீன உடையில்
முருகேசபாண்டியர் நடந்ததை விளக்கினார்

ஒரே நாளில்
எல்லாம் மாறிவிட்டது என்றார்
நீ நாட்டின் அரசனாகி விட்டாயெனவும்
தான்தான் கலாசார கமிஷார் எனவும் சொன்னார்

இரவு
பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பதையொட்டி
நாட்டு மக்கள்
கொண்டாட்டத்தில் இருப்பதாகவும்
பட்டமேற்று கொண்டவுடன்
என்ன பேசப்போகிறேன் என்பதை
கேட்க மக்களோடு
தானும் ஆவலாக இருப்பதாகவும் சொல்ல

ஏதும் புரியாதவனாக
ஒரு போத்தல் மது
கிடைக்குமாவென கேட்டேன்
மேலும் தலை வலிக்கிறது என்றும் சொன்னேன்
அரச பதவியில் நாட்டமின்றி

என்னை கடிந்து கொண்ட
முருகேசபாண்டியர்
எனக்கு 'அருளிய'பின்
நான் பட்டமளிப்பு விழாவிற்கு தயாரானேன்

நவீன அத்தாணி மண்டபத்தில்
காரல் மார்க்சின் பெயரால்
அரசராக
பட்டமேற்று கொண்டபின்

நான்
ஆற்றிய பேருரையை கேட்ட
அனைவரும் வரவேற்று மகிழ்ந்தனர்
உரையின் இறுதியில்
நாடு முழுக்க பூரண மது விலக்கை
அமுல்படுத்தும் ஆணையில் கையெழுத்திட்டு
அறிவித்தேன்

மறுநாள் அவசரமாய்
என்னை எழுப்பிய கலாசார கமிஷார்
நாட்டு மக்கள்
மீண்டும்
போராட்டத்தை துவக்கிவிட்டார்கள் என்றும்
இராணுவதால்கூட போராட்டத்தை
கட்டுப்படுத்த இயலவில்லை என்றதோடு

மதுவிலக்கை
உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும்
முடி அரசில்
தங்கள் சுதந்திரம் பறி போய்விட்டதாகவும்
மீண்டும்
குடி அரசை அமுல்படுத்த வேண்டும் எனவும்
கேட்கிறார்கள் என விளக்கினார்

நான்
மிகுந்த அயர்ச்சியுடன்
ஒரு போத்தல் உயர் வகை மதுவும்
இரண்டு மதுக் குடுவையும்
கொண்டுவர ஆணையிட்டேன்

அதிகாலையில்
'குடி' அரசு மீண்டும் மலர
'பாண்டிய' உபதேசத்தை சொல்லத் துவங்கினார்

நவீன சாணக்கியர் முருகேசபாண்டியனார்.