கவிஞர் மனுஷியுடன் ஒரு உரையாடல்


மனுஷி ஒரே ஒரு தொகுப்பு தான் வெளியிட்டிருக்கிறார். “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”. அது வெளிவந்த குறுகிய காலகட்டத்திலேயே முக்கியமான இளம் கவிஞராக பார்க்கப்படுகிறார். இளம்வயது என்றாலும் மிக கனமான துயரமான கேள்விகளை தன் கவிதைகளில் எழுப்புகிறார். அதனால் அவரிடம் இன்மை சார்பில் ஒரு “கனத்த” பேட்டி இங்கே...

இன்மை: உங்கள் கவிதைகளில் ஊடாடும் கருப்பொருள் வாழ்வின் லட்சியங்கள் மீதான கசப்பு, அவநம்பிக்கை, அச்சம் என்பதாக இருக்கிறது. வாழ்க்கை மட்டுமல்ல மரணமே அர்த்தமற்றது என கூறுகிறீர்கள். கடவுளும் சாத்தானும் கூட இருக்கையில் மனிதனுக்கு இருவரையும் தேர்ந்து கொள்ளவோ நிராகரிக்கவோ முடியாமல் போகிறது. ஒன்றையும் ஏற்கவே, மறுக்கவோ, தேர்ந்து கொள்ளவோ கைவிடவோ முடியாமல் போவதன் சிக்கல், குழப்பம் உங்கள் கவிதையில் வெளிப்படுகிறது.
எதையும் நம்பி ஏற்க முடியாத நீங்கள் கவிதையை ஒரு லட்சியமாக ஏற்கிறீர்களா?
கவிதை மூலம் முக்கியமான ஒன்றை இன்னொருவருக்கு சொல்ல முடியும் என நினைக்கிறீர்களா
மனுஷி: என்னுடைய கவிதைகள் எதுவுமே என் வாழ்க்கைக்கு அந்நியப்பட்டவை அல்ல. இந்த வாழ்க்கை எனக்குக் கொடுத்த அனுபவங்களையே நான் கவிதைகளாக எழுதுகிறேன். தொடர்ந்து துரோகங்களையும், ஏமாற்றங்களையும் சந்திக்கின்ற மனம், வாழ்வின் அடுத்தடுத்த நகர்வுகளைக் கடந்தகால அனுபவங்களைக் கொண்டே அணுக வேண்டியுள்ளது. நாம் பழகுகின்ற மனிதர்களிடம் இருந்து பெற்ற கசப்பான அனுபவங்கள் அடுத்தடுத்து சந்திக்கின்ற மனிதர்கள் மீது இவர்களும் இப்படித்தானோ என்பது போன்ற அவநம்பிக்கை உணர்வை உள்ளூர உண்டாக்கிக் கொண்டே இருக்கும். அடுத்து இதுபோன்ற சறுக்கல்களை வாழ்க்கையில் சந்தித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுதான் காரணம். இது எனக்கு மட்டும் இல்லை. எல்லாருக்குமே இதுதான் நிலை. ஆனால், அதைத் தாண்டிதான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. நம்பிக்கை, நம்பிக்கையின்மை இவ்விரண்டுக்கும் இடையில் தான் வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. வாழ்வின் மீதான ஆசையும் மரணத்தின் மீது படிந்திருக்கும் புதிரும்தான் வாழ்க்கையை வழிநடத்திக் கூட்டிச் செல்கிறது. இந்த வாழ்க்கையை, மனிதர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். என்னைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் நான் எதிர்பார்ப்பது எல்லாம் குறைந்தபட்ச அன்பையும், குறைந்தபட்ச உண்மையையும் நேர்மையையும்தான். அது பொய்த்துப் போகிற தருணங்களில் இதுவரை மனதுக்குள் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் ஒரு கண்ணாடி ஜாடியைப் போல உடைந்து நொறுங்குவதைத் தாங்க முடிவதில்லை. அது தருகிற வலியிலிருந்து விடுபட கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். இங்கு இன்னொரு விஷயத்தை நான் சொல்ல வேண்டும். கவிதை எழுத வேண்டும், கவிஞராக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு கவிதைகளை எழுதவில்லை. என்னைச் சுற்றிச் சுழலும் வெறுமையில் இருந்தும் நம்பிக்கை வறட்சியில் இருந்தும் என்னை மீட்டெடுத்துக் கொண்டு  இந்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்க்க விரும்புகிறேன். அவ்வளவுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் என் கவிதை ஒரு வலி நிவாரணி.

கவிதை மூலம் ஏதாவது ஒன்ற இன்னொருவருக்குச் சொல்ல முடியுமா என்று கேட்டீர்கள். அப்படி கருத்துச் சொல்வதாக, அறிவுரை சொல்வதாக இருக்கின்ற கவிதைகள் மீது எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஒரு கவிதை சிறந்த உணர்வை அது துயரமோ, மகிழ்வோ எதுவாக வேண்டுமானால் இருக்கலாம் வாசகர் மனத்தில் தோற்றுவித்தால் போதும். அதன் மூலம் வாசகர் ஒரு அனுபவத்தைப் பெற்றுக் கொண்டால், ஒரு அனுபவத்தை உணர்ந்து கொண்டால் போதும். ஒரு கவிதையின் மூலமாக ஒரு உணர்வை, ஒரு அனுபவத்தை வாசகர் மனத்திற்குக் கடத்தலாம். அவ்வளவுதான். அதைத்தாண்டி கவிதையின் மூலமாக இந்தச் சமூகத்தை மாற்றியமைக்க முடியும், சமூகத்தைத் திருத்த முடியும் என்றெல்லாம் நான் நம்பவில்லை.
இன்மை: சொற்களின் போதாமை பற்றியும் எழுதுகிறீர்கள். இது மொழி மீதான அவநம்பிக்கையாகவும் மாறுகிறது. இந்த மொழி ஒவ்வாமை உங்களிடம் மட்டுமல்ல குட்டி ரேவதி, செ.பிருந்தா போன்ற பல பெண் கவிஞர்களிடம் காணப்படுகிறது
பெண்கள் இயல்பிலேயே மொழி சரளம் கொண்டவர்கள். அதிகம் பேச விரும்புபவர்கள். இருந்தும் மொழி ஏன் ஒரு ஆற்றாமை உணர்வை உங்களுக்கு தருகிறது?
மனுஷி: பெண்கள் மொழிச் சரளம் கொண்டவர்கள் என்றாலும் கூட அவர்களிடம் மௌனம் தான் எஞ்சி நிற்கிறது. இப்போது அவர்களுடைய பேச்சு, மொழி எல்லாம் மௌனத்திலிருந்து முனகலாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. இதுவரை பேசாது அடைகாத்து வைத்திருந்த மௌனங்கள் உடைபடத் தொடங்கி இருக்கின்றன. அது முதலில் புலம்பலாகத்தான் வெளிப்பட முடியும். சமீப காலங்களில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கி இருப்பதையும் நான் பார்க்கிறேன். இங்கு இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. மௌனங்களை உடைத்துப் பேச வேண்டுமெனில் யாருடைய மொழியைக் கையில் எடுப்பது என்கிற கேள்வி முன் நிற்கிறது. ஏற்கனவே எனக்குக் கற்பிக்கப்பட்ட தந்தைமொழியில் இருந்துதான் நான் எனக்கான மொழியை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது. மொழி குறித்த அவநம்பிக்கைக்கும் ஆற்றாமைக்கும் இதுதான் காரணம்.
இன்மை: மொழி உங்களுக்கு அறிவின் அதிகாரமாக தோன்றுகிறதா? மொழி நம் உணர்ச்சிகளை, இயல்பூக்கத்தை ரத்து செய்து விட்டு நம்மை மரக்க வைப்பதாக உணர்கிறீர்களா?
மனுஷி: மொழிதான் எல்லாவிதமான அதிகாரங்களையும் கட்டமைக்கிறது.. மொழி மூலமாகத்தான் எல்லாவற்றையும் நாம் புரிந்து கொள்கிறோம். அதில் அதிகாரம் இருக்கும்தானே. அதேசமயம் இந்த மொழி நம்மை ஒரு மாயைக்குள் தள்ளி விடுகிறது. ஒரு மாய உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் மந்திரம் மொழியிடம் இருக்கிறது. உணர்ச்சிகளை மரத்துப் போகச் செய்கிறது என்று முற்றும் முழுதாகச் சொல்லி விட முடியாது. ஆனால், சிலசமயங்களில் மொழி உணர்வுகளை மரத்துப் போகச் செய்கிறது. ஒரு கவிதை எழுதி முடிக்கப்பட்ட பின் மனதுக்குள் அழுத்திக் கொண்டிருந்த கணம் நீங்கி இலகுவாவதையும், அதுவரை இருந்த ஒருவித வலி மரத்துப் போவதையும் உணரத்தான் செய்கிறேன்.
இன்மை: லட்சியங்கள், நம்பிக்கைகள் மரித்து விட்ட சமூகத்தில், காலகட்டத்தில் வாழ்கிறோம். இன்று ஒரு மனிதன் தனக்கான ஒரு தனிப்பட்ட பொறுப்பை உணர்ந்து, தனதான நம்பிக்கை சார்ந்து இயங்குவது சரியாக இருக்கும் என நினைக்கிறீர்களா? உதாரணமாய், யாருக்கும் உண்மை அறிவதில் ஆர்வமில்லாமல் இருக்கலாம். மீடியா போலித்தனத்தை பரப்பிக் கொண்டிருக்கலாம். உண்மைக்கும் நகலுக்கும் வேறுபாடு தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கலாம். அப்போது ஒரு எழுத்தாளன் தான் உண்மை என நம்புவதை உரத்து கூறி, அதை வெளிப்படுத்த தொடர்ந்து முயன்று கொண்டிருக்கலாமா? இதை தன் வாழ்வின் பொறுப்பு, வாழ்வதற்கான நியாயம் என நம்பலாமா?
அதாவது எல்லா லட்சியங்களும் மரித்து போன பிறகும் தனிமனித பொறுப்புணர்வு ஒரு லட்சியமாக நம்மை வழிநடத்த முடியுமா?
மனுஷி: நிச்சயமாக. இன்றைய காலகட்டத்தில் தனிமனிதன் தனக்கான பொறுப்பு என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம். படைப்பாளனுக்குக் கூடுதல் பொறுப்புணர்வு இருக்கிறது. அடையாளம் சார்ந்து இயங்க வேண்டிய காலகட்டம் இது. படைப்பாளன் தன் படைப்புக்கு உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது நிலைத்து நிற்கும். படைப்பாளனும் நிலைத்து நிற்பான். எனவே, படைப்பாளன் தான் உண்மை என நம்புகின்ற ஒன்றை, தன் வாழ்வோடு பின்னிப் பிணைந்த அனுபவங்களைப் படைப்பாகத் தரவேண்டும். அது இலட்சியமாக, ஒரு நெறியாக இருக்குமா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.
இன்மை: வாழ்வில் நம்பிக்கை இல்லாமல் ஆகும் போது மரணமும் தான் அர்த்தமற்றதாகிறது என்று ஒரு கவிதையில் எழுதுகிறீர்கள். இது ஒரு முக்கிய தத்துவ கண்டுபிடிப்பு. இதை ஒட்டி ஒரு கேள்வி:
வாழ்வில் முழுக்க நம்பிக்கை இழப்பவர்கள் தற்கொலையே செய்யக் கூடாது இல்லையா? அன்றாட வாழ்வில் எதிலும் ஆர்வமற்று, எதையும் கண்டுகொள்ளாமல் எந்திரத்தனமாய் வாழ்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களையும் இந்த (மரணத்தில் நம்பிக்கை இழந்தவர்கள்) வகைமையில் சேர்க்கலாமா?
தற்கொலை செய்பவர்கள் வாழ்வில் மறைமுக நம்பிக்கை கொண்டவர்கள் என கூறலாமா? அவர்கள் வாழ்கிறவர்கள் நோக்கிஅரசியல் தியாகிகள், மனிதவெடிகுண்டுகளைப்  போல், ஒரு சேதி விடுக்கிறார்கள் என கூறலாமா?
மனுஷி: மரணத்திற்குப் பிறகு இந்த வாழ்க்கை என்னவாகும் என்கிற கேள்வி சிறுவயது முதற்கொண்டே என்னை அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. இறந்தபிறகு பிறவிகள் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதற்கும் ஒரு முடிவு இருக்குமா? இறுதியில் என்னவாகும் இந்த உலகம்? இந்த உலகம், பிரபஞ்சம் இதெல்லாம் அழிந்து போனால் எஞ்சுவது என்னவாக இருக்கும்? இப்படி இன்னும் இன்னுமான கேள்விகள் என்னை அச்சுறுத்திக் கொண்டே இருக்கும். என்னை அச்சுறுத்தும் இந்தக் கேள்விகளைச் சரியாக மனத்தில் உள்ளவாறே சொல்ல முடியவில்லை. அது உண்டாக்கும் அச்சம் மட்டும் குறையவே இல்லை. பதிலும் கிடைக்கவில்லை. இந்தக் கேள்விகளில் இருந்து தப்பிக்க வேண்டியே சிறுவயதில் கதைப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிப்பின் ஊடாக எப்போதுமே நான் ஒரு கற்பனை உலகத்தில் உருவாக்கிக் கொண்டேன். அந்தக் கதையில் வருகிற கதைமாந்தர்கள் என் கனவை ஆக்கிரமிப்பார்கள். அது சுவாரஸ்யமான அனுபவம். ஆனாலும் கூட இந்தக் கேள்விகள் சவ ஊர்வலங்களைப் பார்க்கும்போது, கண்ணீர் அஞ்சலி புகைப்படங்களைப் பார்க்கும் போதும் விபத்துகளைப் பார்க்கும்போதும் கேள்விப்படும்போதும் வந்து அதே அச்ச உணர்வை ஏற்படுத்தும். மரணம், மரணத்தைப் பற்றிய சிந்தனை எனக்கு அச்சம் தருகின்ற ஒன்று. அதேசமயம், நண்பர்களின் மரணமும், தெரிந்தவர்களின் மரணமும்
          ஆனால், கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளில் மரணம் குறித்த என் சிந்தனை கொஞ்சம் மாறி இருக்கிறது. ஊடகங்களும் பத்திரிகைகளும் காவல்துறை விசாரணைகளும் மரணத்தைக் கொஞ்சம் வேறு மாதிரியாகப் யோசிக்க வைத்தது. குறிப்பாக தற்கொலை மரணங்களும், கொலைகளும். அப்போது ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. இந்தச் சமூகத்தில் தற்கொலை செய்து கொள்வதற்கான சுதந்திரம் இல்லை. தற்கொலை செய்து கொண்டால் அந்தக் குறிப்பிட்ட நபர் கடந்த 6 மாதங்களில் அல்லது 1 வருடத்தில் யார் யாருடன் பேசினார், யாராவது அவரை மிரட்டினார்களா, அதுவும் பெண்ணாக இருந்தால் இன்னும் இன்னும் அதிகமான விசாரணைகளும் வதந்திகளும் இருக்கும். அந்தரங்கம், இரகசியம் என்று எதுவுமே ஒரு தனிமனிதனுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதைச் சில கொலைகளும் தற்கொலைகளும் உணர்த்தின. தற்கொலை செய்து கொண்டபின் உடன் பழகியவர்களுக்கு ஏகப்பட்ட மன உளைச்சல் விசாரணை என்ற பெயரில். பழகிய பாவத்திற்காக இத்தகைய மன உளைச்சலை அவர்கள் அனுபவிக்கை வேண்டுமா? இப்படி யோசிக்க ஆரம்பித்த பிறகு தற்கொலை செய்து கொள்வது கூட அயற்சி தரக் கூடிய ஒன்றாக ஆகிவிட்டது.
இன்னொன்று தற்கொலை செய்து கொள்பவர்கள் நிச்சயமாக யாராவது காப்பாற்றிவிட மாட்டார்களா என்ற ஒரு துளி நம்பிக்கையோடு தான் தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். தற்கொலை செய்பவர்கள் வாழ விரும்புகின்றவர்கள்தான். ஆனால், தான் நினைத்தபடியான வாழ்க்கை வேண்டுமென பேராசை கொண்டவர்கள்தான் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வாழ்க்கையை அதன்போக்கில் வாழ்பவர்களை வாழ்பவர்கள் என்று சொல்ல முடியுமா? அவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான். இருப்பதற்கும் வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.