1.இன்னும் கூட வாழ்வு மிச்சமிருக்கிறது என்று
அறிவிக்கிறது படித்த கவிதை ஒன்று
இன்னும் கூட சாவு மிச்சமிருக்கிறதென்கிறது
மற்றொன்று...
மின்விசிறியின் அமைதி குலைக்கும் சப்தத்தினூடே
வந்து சேர்ந்த குறுஞ்செய்தி
சூழலை மயான அமைதியாக்குகிறது அல்லது
அமைதியை மயான சூழலாக்குகிறது...
மனைவி ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறாள்
மகனும் ஆடித் தீர்த்த களைப்பில்
மகள் ஏதோ ஒரு போட்டிக்கு
காட்சி விரோதமாய்
படம் வரைந்து கொண்டிருக்கிறாள்...
நான் என்ன செய்வது?
கதிரவனின் கற்றை ஒருவன்
கடந்த போதொன்றில்
வாகன விபத்தில் சிக்கி மடிந்து போனான்...
சாவு யதேச்சையானது என்று
கூடிப் பகர்ந்து சென்றோம்.
இப்போது இன்னொருவன் தன்னை
மாய்த்த செய்தி வந்து சேர்ந்துள்ளது
நான் என்ன செய்வது?
இறுதியாக சிலவற்றை நினைவு கூரலாம்...
ஒரு சில யாத்திரைகளிலும்
ஒரு சில கூடுகைகளிலும்
சிரிப்பினாலேயே தன்னை உணர்த்திக் கொண்டிருந்த அவர்கள்
சாகும் போதும் சிரித்திருப்பார்களோ...
இத்தகைய மரணங்களுக்குப் பின்னும்
சாவதற்குப் பாக்கியமற்ற நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நாம் என்னதான் செய்வது?
2.மரணங்களின் அறிவித்தல்கள்
பயங்கரமானவை
அறிவிக்கப்பட்ட மரணங்களைவிட!
நினைவுகளில் சிரித்தே பார்த்த முகங்களை
சாவின் கொடூர மௌனம்
சிதைத்துச் செல்வதைப்
பார்க்காத வரையில் நன்று.
உயிர்த்திருக்கும் ஒரு வீட்டில்
மெதுவாய்ப் படரும்
எட்டுக்கால் பூச்சியின் ஒட்டடைகள்
மரணத்தின் உயிர்ப்பை
ஓயாமல் சொல்லிச் செல்கின்றன!
இறுக மூடப்பட்ட
வீடுகளில்
கெக்கலித்துச் சிரிக்கிறது சாவு!
கொஞ்சமேனும் திறக்கப்பட்ட
சன்னல்களின் வழி
உயிர் பாய்ந்து செல்கிறது
சாவின் மரணம் வேண்டி!
பசுமை சூழ்ந்த வனங்களிலும்
குளிர்மை நிரம்பிய மலைப்பிரதேசங்களிலும்
இனிமை கலந்த பயணங்களிலும்
சதுப்பு வெளிகளிலும்
இன்ன பிற இடங்களிலும்...
இருப்பினும் சாவுக்குத் தெரிவதில்லை
இது நம் நண்பரின் உயிரென்றும்
நமக்கானதென்றும்
நம் பிரியத்துக்குரிய இடமென்றும்
எங்கும் நிகழ்ந்து விடுகிறது அது.
நெருக்கமானவர்களின் சாவின் போதைய
நமது நடவடிக்கைகள் குறித்து
இலக்கண விதிகள் ஏதுமில்லை - என்பது
சாவினைப் பிரியத்துக்குள்ளாக்குகிறது -
மரணம் வாழ்விற்கெதிரான கலகமென்று!
சாவிற்குப் பின் எனது கவிதையின்
முகம் குறித்த அறிமுகம் இல்லையென்பதால்
எனக்குக் கவிதை சாத்தியமாகிறது...
என் மகளின் அடுத்த பிறந்தநாளுக்கு
இனிப்பு வழங்க நானிருப்பேனா என்றோ
ஒரு தசாப்தம் நிறைவுற்ற
தாம்பத்ய நாள் வரை இருப்பேனா என்றோ
யோசிக்கையில்
மரணத்தின் முக்கால் கிணறைத் தாண்டிவிடுகிறேன்.
எப்படி நோக்கிலும்
மரணம் மரிப்பவர்களுக்கானதன்று...
வாழ்பவர்களுக்கானது!
சாத்தியங்களற்ற வாழ்வில்
வாழ்வதை மட்டுமே சாத்தியமாகக் கொண்ட நான்
மரணிப்பதை மற்றொரு சாத்தியமாக்க நேர்கையில்...
சாவு
நம் நேசத்துக்குரியதொன்றாகிறது...
மரணம் எனக்கானது!
3.மரணத்தின் ருசியறிந்த
மற்றொரு பூனை - நமக்கு
குறுக்கே நெடுக்கே அலைகிறது
சாவின் நுனி போன்ற
நாக்கினால் நம்மை
ஸ்பரிசிக்கும்
நப்பாசையுடன்...
கரும்பழுப்பு மற்றும் சாம்பல்
நிறம் கொண்ட மயிர்களடங்கிய அது
பதுக்கிக் கொள்கிறது
கூரிய நகங்களை ஒரு போதில்.
இருப்பினும் வெளிக்காணும்
கோரப்பற்கள்
கூறிச் செல்லும்
நிகழ்வின் பயங்கரத்தை.
வெள்ளை தேவதைகளாலும்
நீண்ட வாலுடைய குருவிகளாலும்
ஆசிர்வதிக்கப்பட்ட எம்மை அது
செய்வதற்கேதுமில்லை என்ற போதும்
தேவதைகளின் சிறகுகள் மொட்டையடிக்கப்பட்டும்
குருவிகளின் வால்கள் கத்தரிக்கப்பட்டும்
கடவுள்கள் செத்துப்போன பின்னர்
செய்வதறியாத எம்மை நோக்கி
சிரிக்கும்
நீண்ட பற்களின் இடுக்குகளில்
சிக்கிக் கொண்டதாய்
இருக்கிறது
மரணத்தின் சதை.