![]() |
ஒபாமாவுடன் மாயா ஏஞ்சலூ |
அமெரிக்காவின் மற்றொரு கறுப்பின பண்பாட்டு சின்னமான மாயா ஏஞ்செலூ போன
மாதம் 28 அன்று காலமானார். இயக்குநர், திரைக்கதையாளர், நடன கலைஞர், உரைநடையாளர் என
பல பரிமாணங்கள் இருந்தாலும் அவர் பிரதானமாய் தனது “I Know Why Caged Birds Sing” தன்சரிதைக்காகவே அதிகம் அறியப்பட்டார். இதன் வெற்றியைத் தொடர்ந்து
இன்னும் ஆறு தன்சரிதைகள் எழுதினார். தன் ஆரம்ப கால வறிய வாழ்க்கை, விபச்சாரம்,
இரவுவிடுதியின் நிர்வாண நடனம், மார்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் எக்ஸுடன்
சேர்ந்து கறுப்பிட விடுதலை போராட்டம் என பல விசயங்களை பற்றி சரளமாய்
உணர்ச்சிகரமாய் எழுதினார். இவை கறுப்பின இலக்கியத்தில் முக்கிய பிரதிகளாய்
கருதப்படுகின்றன.
![]() |
மார்டின் லூதருடன்... |
இவை போக ஏஞ்சலூ ஒரு நல்ல கவிஞரும் கூட. அவரது கவிதை இறுக்கமானது அல்ல.
எளிய சந்த நயத்துடன் ஒழுகும் தன்மை கொண்டவை. நேரடியான எளிய கவிதைகள் என்றாலும்
கவிதைக்கு தேவையான குறிப்புணர்த்தலும் உண்டு. உதாரணமாய் ”தனியாய்” (Alone) கவிதையை சொல்லலாம். சமூக ஒடுக்குமுறையால் அவதிப்படுகிறவர்களும் சரி
அது அல்லாமல் நன்றாக வசதியாக பாசாங்காக பணக்கார வாழ்க்கை வாழ்கிறவர்களும் சரி, இரு
சாராருக்கும் தனியாய் எதையும் சாதிக்க முடியாது என்கிறது இக்கவிதை.
அப்படி இருக்க நம் மனம் யாருடைய துணையை தேடுகிறது, அத்தனை பேரின் வாதையையும் தீர்க்கக்
கூடிய அந்த துணை யார் எனும் கேள்வியை இக்கவிதை எழுப்புகிறது. நுட்பமாய் கவனிக்கிறவர்களுக்கு ஆழமான மன எழுச்சி தரக் கூடியது இக்கவிதை.
ஏஞ்சலூவின் கவிதையில் சில கத்தியை சொருகுவது போன்ற வரிகளும், அழகான நவீன
ஒப்பீடுகளும் வரும். உதாரணமாய் “ஆண்கள்” கவிதையில் தோள் உயர்த்தி நடக்கும் ஆண்களை
இவ்வாறு குறிப்பிடுகிறார்:
”அவர்களின் தோள்
உயர்ந்துள்ளன
ஒரு இளம்பெண்ணின் முலைகள் போல”
இது தான் உண்மையில் பெண்மொழி என தோன்றுகிறது. ஒரு ஆணை பெண்ணின்
பார்வையில் இருந்து பார்க்கையில் இப்படியான வித்தியாசமான உவமைகள் வந்து விழும்.
இதே கவிதையில் ஆண் வசப்பட்ட ஒரு பெண்ணை ஒருவர் கையில் வைத்திருக்கும் முட்டையுடன்
ஒப்பிடுகிறார். முட்டையை முதலில் அழுத்தாமல் மென்மையாய் பிடிப்போம். ஆனால் நாம்
ஆவேசம் கொள்ள கொள்ள முட்டையின் மீதான இறுக்கமும் அதிகமாகும். ஒரு கட்ட்த்தில்
முட்டை நொறுங்கி விடும், காதலின் இறுதியில் பெண்ணின் நிலையும் இது தான் என்கிறார்.
இது மிக அழகான உவமை. பெண்கள் எப்போதும் உச்சநிலையில் இருப்பதில்லை. ஆனால் காதலின்
நிறைவில் அவர்கள் உச்சம் அடைந்ததும் ஒரு ஆணைப் போல் மீண்டும் சமநிலைக்கு
திரும்புவதில்லை – பொங்கி வழிந்தபடியே இருப்பார்கள். இச்சையில் உச்சத்தில்
இருக்கும் பெண் தன் திருப்தியின்மையால் ஆணை இம்சை செய்வாள், கசப்புடன், வெறுப்புடன்
நடந்து கொள்வாள். இது ஆணின் தவறு அல்ல. பெண் எப்போதும் ஆணால் நிறைவு செய்ய
இயலாதவள், அவள் இயல்பு அப்படி. ஒரு காதல் உறவு பெண்ணை அழுத்தி உடைக்கப்பட்ட
முட்டையின் சீர்செய்ய முடியாத, கசப்பான நிலைக்கு தள்ளுகிறது. தன்னைப் பற்றி தானே
அருவருப்பு கொள்ள செய்கிறது. இப்படி இக்கவிதையின் ஒரு வரி மட்டுமே ஆழமான
சிந்தனைகளை தூண்டுவது.
மேரி ஏஞ்சலூவின் “போதனை” கவிதை மொழியாக்கத்தில் எதேச்சையாக இன்மையில்
இந்த இதழில் இடம்பெறுகிறது (ரா.பாலகிருஷ்ணன் மே மாதம் 2ஆம் தேதியே அனுப்பி
விட்டார்).
மேரி ஏஞ்சலூவுக்கு தமிழ் நிலத்தில் இருந்து ஒரு ஆழ்ந்த அஞ்சலி
- இன்மை ஆசிரியர் குழு
- இன்மை ஆசிரியர் குழு