சக்தி ஜோதி கவிதைகள்



1. ஆதிவாசனையின் ஊற்று

வெயில் தினங்கள்
தகிக்கும் காமத்தைப் போல
எப்போதுமே அடர்ந்திருகின்றதென
ஆதிவாசனையை  வியர்வையென
உணர்ந்த கணத்தில்
நினைத்துக் கொண்டாள் 

ஒவ்வொரு இதழாக மடல்விரியும் நினைவு
எண்ணிக்கையற்று விரிந்துக் கொண்டே இருந்தது

தீரா அன்பில் கிளர்ச்சியுற்ற மனதிலிருந்து
துவங்கும் விரல்களுக்கு
கரும்பாறைக்கு உள்ளிருந்து 
குளிர்மையின் நீரூற்றை பொங்கச் செய்கிற
வல்லமை உண்டு என்பதை
அறிந்துகொண்ட கணம் அது

எந்த கணத்திலும்
அந்த நீர்மையின் குளிர்மை  வற்றிவிடாமல்
பார்த்துக்கொள்கிற சொற்கள் யாரிடத்தில் உள்ளதோ
அவர்களே வெயிலினை உணர்ந்தவர்களாக இருக்கமுடியும்
என்பதையறிந்த அவள்  சுரந்து கொண்டேயிருந்தாள் .

2.
அன்பின் காலம்
உள்ளுக்குள் நீரூற்றைப் பிரசவிக்கும்
அணைப்பொன்றை வழங்கினான்

உடலுறுப்புக்களில் இயக்கம் இழந்தவனை 
முதிர்வில் சுருங்கிய தோலுடைய ஒருவனை
நோய்மையில் நம்பிக்கையிழந்தவனை
தோல்வியில் துவளும் வேறு ஒருவனை
குழந்தைகளின் புழுதி புரண்ட கால்களை
என ஆகாயத்திருக்கும் பூமிக்கும் மத்தியில்
அன்பில்  இரங்கும் யாவருக்கும்
அவனில் பொங்குகிற தண்ணீரின் குளிர்மையை
பரிசளிக்கத் தொடங்கினாள்

மழைக்காலம்
காற்றுக்காலம்
பனிக்காலம்
ஒன்றும் இல்லை

அவளுக்கு
ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறது
அன்பின் காலம்.