முருகம்மாள் கவிதைகள் - ஆ.செந்தில் குமார்






முருகம்மாள்-2
வகுப்பில் மாரியோடு சண்டை
கடன் வாங்கிய ரப்பரை தொலைத்து விட்டாள்
தானிருக்கும் இரண்டாம் பெஞ்சுக்கும் மூன்றாம்
பெஞ்சுக்கும் இடையிலுள்ள இடுக்குகளில் துழாவினாள்
பக்கத்திலிருக்கும் காவ்யாவிடம் கோபப்பட்டாள்
அவள் பையை தேட கொடுக்காததால்
முதல் பெஞ்சில் சாத்தி வைக்கப்பட்டிருந்த தன்
கூடைப்பைக்குள் கைவிட்டு தேடினாள்
தினத்தந்தி உறையிட்ட கணக்கு புத்தகம்
கிழிந்ததே தவிர சிக்கவில்லை
எல்லா புத்தகத்தையும் வெளியே எடுத்துவிட்டு
கூடையை குப்புற கவுத்தினாள்
என்றோ தொலைத்துவிட்டு அழுத இரண்டுரூபாய்
நாணயம் விழுந்து குதித்து சுழன்று அடங்கியது
ஒரு ரூபாய்க்கு புதிய ரப்பரும் ஒரு ரூபாய்க்கு
மிட்டாயும் வாங்குவதென தீர்மானித்துக் கொண்டனர்.


முருகம்மாள்-3
கும்புடிக்கீரை வதக்கி கஞ்சி குடித்திருக்கிறாள்
கத்திரிக்காய் சுட்டு புளித்தண்ணியில் கரைத்து
சோறுடன் கலந்து உண்டிருக்கிறாள்
காணத்துவையலும் எள்ளுத்துவையலும்
கொள்ளைப்பிரியம்
வெறும் வெங்காயத்தை உப்பு மிளகாய் இட்டு
தாளித்தாலும் தேவாமிர்தம்
என்றாவது பண்டிகைக்கு அம்மா செய்யும் இட்லியும்
எள்ளுப்பொடியும் கூட சுவையின் உச்சம்
அன்று அண்ணன் வெளியே அழைத்துச் சென்றிருந்தான்
மழைக்காலத்தில் வெளிவரும் செவிட்டு பாம்பு குட்டியாய்
நெளியும் நூடுல்ஸை பார்த்ததும் எப்படி சாப்பிடுவது
என்று திணறிக்கொண்டிருந்தாள் முள் கரண்டியோடு
வீட்டில் பிடித்து வைத்திருக்கும் பத்திரகாளி அம்மனிடம்
வேண்டிக்கொண்டாள் கண்ணை குத்தாமலிருக்க..