உதிக்கும் செஞ்சூரியன்
நிறமழித்து எழுதி அழித்தெழுதி
அலையும் அலைகளில்
எச்சில் நுரைகளில்
பொங்கித் ததும்பும்
சங்குகளும் சிப்பிகளும்.
ஒரு ரொமாண்டிக் கவிதைக்கான தொடக்கம்
கிழித்தெறியப்படுகிறது.
விரல் நக அழுக்கால் ஆன
கவிதையால் சூல் கொண்டன
சங்குகள்.
காற்றில் ஒளிரும் மணல் துகள்களினூடாக
நீ என்ன சாதி என்றொருவன்
கேட்பானாயின்
முத்தின் நொறுங்கல்களாய்
சிதறி ஒடுங்கும் குரல்கள்
ஒரு வேளை டீக்காக
சங்கு விற்கும் கிழவனிடம்
பேரம் பேசுகையில்
உதிக்கும் செஞ்சூரியன்
ஒரு கோடி கைதட்டல்களுடன்.
பிரளயம் நோக்கியிருக்கிறேன்
ஒளியற்ற இருண்ட பெருவெளியில்
பிழம்பெனத் தகிக்குமென் உடல்.
தேர்ந்து செதுக்கிய மூங்கில்
துளைகளின் இசையினின்று
பரவிப் படரும் சருமம்.
பிறந்த குழந்தையின் மெலிய
கவிச்சை மணம் ஊறும்
அடர் ரோமமற்ற
என் சரி பாதியில் பிளந்து
உட்புகும் ஐப்பசி வெள்ளத்தில்
முழுகிச் செத்த
உறை விந்து விடலையின்
'வீச்'சென
பல்லற்ற குழந்தை
துயில்கையில் கத்தும் போது
பிரளயம் நோக்கியிருக்கிறேன்.