அன்புசிவனுக்கு அஞ்சலி - கணேச குமாரன்




கவிஞர் அன்புசிவன் கவிதை மீதும் சக கவிஞர்கள் மீதும் அலாதியான அன்பும் அக்கறையும் கொண்டவர். அவர் தன் 53 வது வயதில் காலமாகி நிரப்ப முடியாத வெற்றிட்த்தை ஏற்படுத்தினார். இவரின் கவிதைகள் தனிமனித உணர்வுகளை அந்தக் கண பதற்றங்களை  பதிவு செய்பவை. சமூகக் கவனம் குறித்த இவரின் கவிதைகள் கூட ஒற்றை மனிதன் வாயிலாக வெளிவந்தவையே. ஆனந்தவிகடன், கல்கி, யாவரும் டாட் காம் போன்றவற்றில் வெளிவந்த இவரின் கவிதைகள் அன்பையும் கருணையும் யாசித்து நிற்கும் எளிய மொழியில் வெளிப்படுபவை. உதாரணமாய் ஒரு கவிதை:
சுடும் நினைவுகள்

குற்றவுணர்வில்  மௌனம்
நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

 
தவறின்
அடிவேரைத்தேடிக்கொண்டிருக்கிறது
அவஸ்தை மனம்.

கனன்றுகொண்டிருக்கும் துயரத்தின்
கனல் சுட்டுக் கொண்டிருக்கிறது
அருவமாய்.

சுயதண்டனைக்கான தீர்ப்பை
எதிர்நோக்கிக் காத்திருக்கிறது
குற்றவாளிக்கூண்டில் மனசாட்சி.

எது ஆற்றிவிடக்கூடும்
இதயத்தின் வலியையென்று
எங்கெங்கோ உழல்கிறது தேடல்.

கையறு நிலையில் தீர்வுகளைத்
தேடிக் களைத்துப் போய் மீண்டும்
துவண்டு விழுகிறது வாழ்க்கை.
மெளனம் தன்னை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

ஒருவித கையறு மன உணர்வினை வெளிப்படுத்தும் இக்கவிதை எல்லா வரிகளிலும்  ஒரே பொருளை வெளிப்படுத்தினாலும் எழுதுபவனையும் வாசிப்பவனையும் இணைக்கும் துல்லியமான புள்ளியை விட்டு விலகவில்லை. இதுவே கவிதையின் இந்த கவிதைக்காரனின் வெற்றி.  அன்புசிவனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.