கோசின்ரா கவிதைகள்


1
காமத்தை பருகும் நடை மேடை
தாகங்களுடன் ஊடுருவும்
மந்திர ரயில்
ஆசையின் நீண்டநோய்
தண்டவாளங்களாய் கிடக்க
மாயையின் ஆடையை களைந்து
பருவத்தின் குகைக்குள் நுழைந்த ரயில்
தனிமையை கடந்தது
ஆதாம் ஏவாள் தொடங்கிவைத்த
இருட்டை சுவைப்பவள் ரயிலிலிருந்தாள்
ஒளிப்பூச்சி மனிதன் கண்டு திகிலடைந்தாள்
பார்வையற்ற மன்மதகதவுக்கு
மொழி சொல்லிக்கொடுத்தவள்
தன் உடலெங்கும் கண்கள் முளைத்ததும்
கதவை திறந்து வெளியேறினாள்
சற்று முன் வந்த ரயிலில்
இரவு கனியின் சுவையை
நாவிலிருந்த உதட்டுக்கு மாற்றிக்கொண்டு
அவளுடைய இரவு
இன்னொரு நிலையத்தையும் தாண்டி விட்டது
விடிந்துக்கொண்டிருக்கும் இரவில்
பயணியாகவும்
ரயிலாகவும் இருக்கிறாள்
பகலில் தூங்கிக்கொண்டிருக்கிறது
இரவில் விழித்துக்கொள்ளும்
ரயில் நிலையம்.

2
வயலின் வயிற்றை தடவி கொடுக்கும்
இந்த கவிதையின் வரி
விவசாயின் கரமாக இருக்கலாம்
பயந்த காலத்திலிருந்து வெளிவந்து
கல்லறையின் மீது
படுக்கை விரிக்கும் போராளியின்
அச்சமின்மையாக இருக்கலாம்
எத்தனை புயலுக்கும்
தாக்கு பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்
ஆல மரத்தின் கிளையாக இருக்கலாம்
தற்கொலையை தள்ளிப்போட்டவனின்
நிமிடமாக இருக்கலாம்
சாவையும் தன் வீட்டுக்குள்ளே
குடியமர்த்தி வாழும்
ஒரு நோயாளியின் இரவாக இருக்கலாம்
காமவயப்பட்ட கண்களுக்கு நடுவில்
மாட்டிக்கொண்ட பெண்ணின்
தப்பித்தலாக இருக்கலாம்
எனது அறையின் மூலையில்
இருக்கும் சிலந்தி வலையின்
இன்னொரு முனையாக இருக்கலாம்
எரிந்துக்கொண்டிருக்கும் சூரியனின்
இன்னொரு கோடையின்
சுருக்கெழுத்தாக இருக்கலாம்
மழையின்
ஒருவழி பாதையாக இருக்கலாம்
முத்தமிட்டுக்கொள்ளும் காதலர்களின்
முகத்தை மறைக்கும்
அந்தி இருட்டின் நிழலாக இருக்கலாம்
தடை செய்யப்பட்ட
ஒரு புத்தகத்தின் தலைப்பாக இருக்கலாம்
அந்த வரி இங்கேயே தங்கிவிட்டது
புலம் பெயர்ந்தவனின் நினைவுகளாய்..



3
என்னிடமிருக்கும் கற்களை
வீசிவிடச் சொல்கிறது
காயப்படுத்தும் உன் வார்த்தை
அவமானப்படுத்தும் உன் பழக்கம்
கடைபிடிக்கும் உன் சடங்கு
நிராகரிக்கும் உன் வழக்கம்
உன் திசையிலிருந்து வந்த கற்கள்
மலை போல குவிக்கப்பட்டிருக்கிறது
திருப்பி வீசத் தொடங்கினால்
முடிய பல நூற்றாண்டுகளாகும்
உன்னைப் போலவே பசி
உன்னைப் போலவே காமம்
உன்னைப் போலவே எல்லா உணர்வும்
உனக்கில்லாத வலி மட்டும்
என்னிடம் தனித்து
அந்த வலியை
புரிந்துக்கொள்ள முடியுமெனில்
உன் புரிதலே கடைசி வரி
இந்தக் கவிதைக்கு.