மீன் பிடித்துக்
கொண்டிருக்கிறார்
’பாஷோ’
துடிப்படங்கும் முன்
தூண்டில் மீனைப்
சோணிப் பூனைகளுக்குக்
கொடுத்து விடுகிறார்
ஒவ்வொரு விளக்காக
அணைத்து இருளை விசாலப்
படுத்துகிறார் ’ஷிகி’
சுருக்கிட்ட நூலுடன்
வெட்டுக் கிளிகளின் பின்னால்
சுற்றிக் கொண்டிருக்கிறார்
’இஸ்ஸா’
தான் வரையும் சோளக் கொல்லை
பொம்மைகள் ஒன்றுகூட
மிரட்டாமல்
சிரிப்பது கண்டு
சிரிப்பாணி பொங்குகிறது ’யாயு’ வுக்கு
பாட்டுக் கேட்கும் ஆசையில்
வரப்போரம் இரவெல்லாம்
அமர்ந்து
நட்ட நாற்றுகளைப்
பிடுங்குகிறார் கொனிஷ் ரைஸான்
பனை மரத்தில் கட்டிய
நெரியைப் பார்த்தீர்கள் மேலே
தென்னை மரத்தில்
கொட்டிய தேள்கள் கீழே
(ஏன் இத்தனை மெலிவாய் இருக்கிறாய் பூனையே
கொழுத்த மீனுக்கான பசியாலா
கொல்லைப்புறக் காதலாலா
-பாஷோ)
(வாண வேடிக்கைகள் முடிந்து
பார்வையாளர்களும் கலைந்து விட்டனர்
ஆஹ், இருள்தான் எவ்வளவு விசாலமாய் இருக்கிறது
-ஷிகி)
(வெட்டுக் கிளியே, உன்
தலைச் சுற்றலுடன் அங்குமிங்கும் துள்ளி
இந்தப் பனி முத்துக்களை
நொறுக்கி விடாதே
-இஸ்ஸா)
(முட்டாள் பூச்சாண்டிப் பொம்மையே
உன் குச்சிக் கால்களின் கீழே பார்
பறவைகள் பயமின்றித் தானியம் திருடுகின்றன
-யாயு)
(நாற்று நடும் பெண்கள்
பாடும் பாட்டில் மட்டும்தான்
சேறு பட்டிருக்கவில்ல
கொனிஷ் ரைஸான்)