பணமரத்தில் நெறி கட்டும் - பா.சரவணன்



துள்ளித் துள்ளி நடக்கும் சுந்தரி
அலுவலகம் எங்கும்
வீசிச் செல்கிறாள் வனப்பை

மேளாலரின் மூடிய அறைக்குள்
இயங்கும் ஏ.ஸியில்
குளிர்ந்து கிடக்கிறது
கர்வம்

போனில் சத்தமிட்டுக்கொண்டிருக்கின்றனர்
விற்பனைப் பிரதிநிதிகள்
உணவிருக்கும் தாயின் வாய் பார்த்து
கத்தும் குஞ்சுகள் போல்

இண்டர்காமின் இரு முனைகளில்
யாரும் கவனிக்காதபடி
வழிந்துகொண்டிருக்கிறது காதல்


கவனிப்பாரற்ற மூலையில்
கண்ணாடி போட்ட கிழவனின் திரையில்
ஓடிக்கொண்டிருக்கிறது நீலப்படம்

புறங்கையை நக்கும்
பேரம்
கசிந்துவிடாதபடி
மூடப்பட்டிருக்கின்றன சில அறைக்கதவுகள்

மாதத்தில் ஒருநாள்
கிடைக்கும் தேனின் பங்குக்காக
ஒன்றின்மேல் ஒன்று ஏறி விழுந்து
கட்டிடக் கூட்டில்
வேலை செய்யும் தேனீக்களில்
சில காணாமல் போகின்றன
அல்லது செத்துப்போகின்றன
சுவடின்றி

ஓய்வுபெறக் காத்திருக்கும்
தொலைபேசி பேசும் பெண்
அரைத்தூக்கம் போடும் மதிய வேளையில்
எங்கோ ஓரிடத்தில்
ஊஞ்சலாடும் சாத்தானின் வால் போல்
ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது
கம்பனியின் பங்குச்சந்தை மதிப்பு.