ஆசிரியர் பக்கம்: இசையின் டினோசர் கவிதைகள் - ஆர்.அபிலாஷ்





இசை இவ்வருட சுந்தர ராமசாமி விருது பெறுகிறார். இத்தருணத்தில் அவரது கவிதைளை சற்று அலசி புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.

இசையின் கவிதைகளை படிக்கையில் அவர் சமகாலத்து கவிதை தடத்தில் இருந்து விலகி இருப்பதை காணலாம். இன்றுள்ள அவநம்பிக்கையும், அக்கறையின்மையும் கலந்த பண்பாடு அவரிடம் இல்லை. எதையும் தயக்கமின்றி பகடி மூலம் மேலோட்டமாய் கடந்து போகும் காலத்தில் வாழ்கிறோம். நமக்கு மிக முக்கியமானவை கூட மிக முக்கியமாக சாதாரணமானவை. ஒரு முக்கியமான விசயத்தை கவனத்தோடு பார்த்து அறிந்து உதறி விடுகிறோம். இது இன்றைய மொழியில் ஒரு கொந்தளிப்பை, சிதறலை, அலைவை ஏற்படுத்தி இருக்கிறது.

மாறாக நவீனத்துவ கவிதை அதன் மையத்தில் ஒரு அமைதியை கொண்டது. கோபமாக பேசும் போதும் நவீன கவிஞனிடம் ஒரு கசப்பான புன்னகை இருக்கும். அவன் தனது நிலையமைதியை இழக்காமல் பேசுவான். அவனது பார்வை ஒரு மையமான தேடலை நோக்கி குவியும். அவன் ஒரு நிரந்தரமான, மறுகேள்வியற்ற உண்மையை நம்புவான். கணிசமான நவீன கவிதைகளில் உன்னதம் பற்றின தேடலாக இது இருந்தது. எழுத்தின், ஆன்மீகத்தின், சிந்தனையின் பூரணமான நிலையில் நாம் ஒரு மையமான அமைதியை அடைவோம் என நம்பினோம். இந்த அமைதி ஒரு உன்னதமாக, அனுபூதியாக நவீன கவிதைகளில் இருந்தது.

இன்னும் குறிப்பாக, நவீன கவிதை ஒரு சிதைவில் இருந்து பூரணத்துவத்தை நோக்கி சென்றது. ஆரம்பம் சிதைவாகவும் முடிவு பூரணமாகவும் இருக்கும். இந்த கட்டமைப்பை அல்லது அச்சை நாம் இசையிடமும் காண்கிறோம். சரி இசையின் கவிதைக்கு போகும் முன் பிரமிளின் இரு சிறு கவிதைகளை இதற்கு உதாரணமாக பார்ப்போம்.
1, சைத்ரீகன்

வெண்சுவர்த் திரையிலென்
தூரிகை புரண்டது.
சுவரே மறைந்தது.
மீந்தது காட்சி.
ஓஹோ,
உயிர்த்தெழும் ஒளிக்கு
இருள் ஒரு திரையா?
பாழாம் வெளியும்
படைப்பினை வரையவோர்
சுவரா?

எழுத்து. டிச. 1961

2. பல்லி

கவிதை -
இறக்கத் துடிக்கும் வாலா?
உயிரைத் மீண்ட உடலா?

எழுத்து. செப். 1963.

இரண்டுமே எளிய கவிதைகள் தாம். முதல் கவிதையில் ஒருவர் ஓவியம் வரைகிறார். வரைந்த சுவர் காணாமல் ஆகிறது. ஓவியம் நிலைக்கிறது. “சுவர் இன்றி சித்திரம் வரைய முடியாது என்கிற நடைமுறைவாத பழமொழி தெரிந்திருக்கும். பிரமிள் ஒரு ஓவியம் சுவரின்றி நிற்கும் என்கிறார். ஏனென்றால் அதன் நிலைப்பு நம் கற்பனையில், ஆன்மாவில் இருக்கிறது. இறுதி வரியில் பாழ் தான் ஒரு படைப்பு நிலை கொள்ளும் இடம் என்கிறார். அதாவது படைப்பு சூனியத்தில் தோன்றும் என்கிறார். சூனியம் என்றால் ஒன்றுமில்லை என்றல்ல. நிலைத்த அர்த்தங்கள் அற்ற ஒரு சுதந்திரமான வெளி இந்த சூனியம். எதையும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டியதை பார்க்கலாம் எனும் ஜென் தத்துவம். இதைத் தான் பிரமிள் சுட்டுகிறார். இங்கு கவனிக்க வேண்டியது ஓவியம் எப்படி சுவர் இல்லாமல் ஆகிறது, அதன் மூலம் கவிதை ஒரு சிதைவில் துவங்குகிறது என்பது. அடுத்து, அது பாழ் எனும் முழுமையில் சென்று முடிகிறது.

பல்லி கவிதை ஒரு கேள்வி கேட்கிறது. கவிதை என்பது பிரபஞ்ச தரிசனத்தில் இருந்து மனிதன் பெயர்த்து எடுத்த சிறு பகுதியா அல்லது என்னதான் அழிந்தாலும் அழியாமல் நிலைக்கும் ஒரு பேருண்மையா? அதாவது கவிதை என்பது கவிஞனின் தரிசனமா அல்லது அதையும் உள்ளடக்கிற அதைக் கடந்த ஒரு பேருண்மையா எனும் தத்துவ விவாதம் இது. அதாவது, பேருண்மையை கவிதையில் காண இயலாது. ஆனால் பேருண்மையின் ஒரு துலக்கமற்ற பிரதிபலிப்பை பார்க்கலாம். பிரதிபலிப்பில் இருந்து கவிதை பேருண்மை நோக்கி நம்மை அழைத்து செல்லும் என்கிறார் பிரமிள். இதிலும் துண்டுபட்ட வால் மற்றும் வாலற்ற உடல் எனும் சிதைவில் துவங்கி ஒரு ஒட்டுமொத்த பூரணத்துவத்தை நோக்கி கவிதை செல்வதை பார்க்கலாம்.

இனி இசையின் இரு கவிதைகளைக் காண்போம்.
1.    
3 கி. மீ

அந்த ஊருக்கு
இந்த வழியே
3 கி.மீ எனக் காட்டிக் கொண்டு
நிற்கும்
கைகாட்டி மரத்திற்கு
அவ்வூரைப் பார்க்கும்
ஆசை வந்துவிட்டது ஒரு நாள்

வாஞ்சை கொண்டு
கிளம்பிய மரம்
நடையாய் நடந்து கொண்டிருக்க

3 கி.மீ. 3 கி.மீ. எனத்
தன்னை பின்னோக்கி
இழுத்துக் கொள்கிறது
அவ்வூர்

2.   வளர்ந்தாலும் நடந்தாலும்


என் தோட்டத்தில்
ஒரு ரோஜா பூத்திருக்கிறது
அதன் கூந்தல் வெகு தொலைவில் இருக்கிறது

ரோஜாவின் கனவில் கூந்தலும்
கூந்தலின் கனவில் ரோஜாவும்
அடிக்கடித் தோன்றி மறைகிறது

கூந்தலை எண்ணி எண்ணி
ரோஜா கறுத்து வருகிறது
கூந்தல் சிவந்து வருகிறது
ரோஜா நடந்து செல்லவோ
கூந்தல் வளர்ந்து நீளவோ
இயலாது

வளர்ந்தாலும் நடந்தாலும்
சென்று சேர இயலாது

மூன்று கிலோமீட்டர் கவிதையில் ஒரு சுட்டித்தனம் உள்ளதை கவனிக்கலாம். இது தான் இசையின் பால் நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் முதல் விசயம். மரம் அந்த 3 கி.மீ தொலைவில் உள்ள ஊரைப் பார்க்க கிளம்புகிறது. ஆனால் அது தன் மீதே அப்பலகையை ஏந்தி இருப்பதால் மூன்று கி.மீ கடந்ததும் அது இன்னும் மூன்று கி.மீ போக வேண்டும் என அந்த பலகை சொல்கிறது. இதைத் தான் இசை ஊர் தள்ளி தள்ளி போகிறது என்கிறார். இது தேடல் பற்றின ஒரு கவிதை. பிரக்ஞை பூர்வ தேடலை பகடி பண்ணுகிறது. கடவுளை மிக உன்னிப்பாய் தேடுகிறவன் எப்போதும் தன்னில் தான் மீண்டும் வந்து முடிவான். மரம் தன் பலகையை உதறுவது போல் பக்தனும் தன் பக்தியை உதற வேண்டும். இக்கவிதை பிரமிளின் பாணியில் ஒரு தேடலை சொல்கிறது. அதே போல் மரம் முதலில் ஊரில் இருந்து தள்ளி இருக்கிறது. இது ஒரு முழுமையின்மை. அது தன்னை முழுமையாக்க பயணிக்கிறது. ஆனால் அது முடிவதில்லை. என்றாலும் கூட ஏன் சாத்தியப்படுவதில்லை, எப்படி சாத்தியப்படும் என நாம் யோசிக்கவும் கவிதையில் இடத்தை உருவாக்குகிறார் இசை. ஒரு மறைமுகமாக பூரணத்துவம் நோக்கிய பயணம் இதில் உள்ளது.

இரண்டாவது கவிதை பிரமிளின் பல்லிக் கவிதையை போன்றது. ரோஜா தரிசனம், கூந்தல் பேருண்மை. ரோஜாவால் கூந்தலை சேர முடியாது தான். ஆனால் அதேவேளை இசை பேருண்மையின் இருப்பையும் ஒத்துக் கொள்கிறார். அதாவது கூந்தல் இன்றி ரோஜா தனியாக இல்லை. அது போல் கடவுள் இன்றி மனிதனும் தனியாக இல்லை.

கீழ் வரும் கவிதை இன்றைய கவிதைகளை போல் விளையாட்டுத்தனமானது. ஆனால் முடிவில் ஒரு உன்னதம் நோக்கிய நகர்தல் உள்ளது. கிறிஸ் கெய்லுக்கு பந்து வீசுமாறு பணிக்கப்படும் கவிதைசொல்லிக்கு கெய்ல் சட்டென சிவனாக தோன்றுகிறார். தன் பந்தை திரும்பி வரவே முடியாதபடி வானத்திற்கு அப்பால் அடிக்க சொல்கிறார். அந்த திரும்பி வராத வானம் தான் பிரமிள் சொல்லும் ஓவியம் வரைகையில் மறையும் சுவர், “பாழாம் வெளி.
க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல்

நான்  இந்த  ஆட்டத்திலேயே  இல்லை
சொல்லப்போனால்  ஒரு  பார்வையாளனாக  கூட  இல்லை
மைதானத்திற்குள்   தரதரவென  இழுத்துவரப்பட்டு
பந்துவீசுமாறு  பணிக்கப்பட்டிருக்கிறேன்
எதிரே  க்ரிஷ்கெய்ல்  நின்றுகொண்டிருக்கிறார்
அணித்தலைவர்  ஓடிவந்து
பந்து  அந்தரத்திலேயே  இடப்பக்கம்  சுழன்று
மறுபடியும்  வலப்பக்கம்  சுழன்று
விழுமாறு  வீசச்சொன்னார்
நான்  அவரது  முகத்தையே  பார்த்தேன்
அவர்  திரும்பி  ஓடிவிட்டார்
எதிரே  க்ரிஷ்கெய்ல்  நின்றுகொண்டிருக்கிறார்
அவரின்  சடாமுடி  ருத்ரதாண்டவனை  குறித்து  நிற்கிறது
அடேய்  சுடலையப்பா.
இந்த  பந்தை  வானத்திற்கு  அடி
திரும்பி  வரவே  வராத  படிக்கு  வானத்திற்கு  அடி.
*
இசையின் கவிதையில் சர்ரியலிசத்தில் வருவது போன்ற அதிர்ச்சிகரமான வரிகள் வரும்.

அரூப விரல்

அப்போது என் முன்னே
இரண்டு விரல்கள் நீட்டப்பட்டன.
ஒன்று கொலை
மற்றொன்று தற்கொலை
நான் இரண்டுக்கும் நடுவே நீண்டிருந்த
அந்த அரூப விரலை பற்றினேன்.
இந்த வரிகளை
அந்த விரல் கொண்டே எழுதுகிறேன்.

கவிதைசொல்லியின் முன் இரு தேர்வுகள். ஒன்று கொலை. இன்னொன்று தற்கொலை. இரண்டு வகை மரணங்களுக்கு இடையே மூன்றாவதாய் ஒரு மரணம் வருகிறது. அது உன்னத படைப்பு நிலை. நிலைத்த படைப்பு அனுபவம். அதில் நீங்கள் அழிந்தபடியே இருக்கலாம். அதேவேளை அழியாமலும் இருப்பீர்கள். இக்கவிதையும் மரணம் எனும் சிதைவில் ஆரம்பித்து படைப்பு எனும் பூரணத்தில் முடிகிறது.

நளினக்கிளி கவிதையில் நெடுஞ்சாலையில் செல்லும் லாரியில் இருந்து ஒரு கிளீனர் வழி வேண்டி கை நீட்ட அந்த சைகை இசைக்கு பிரபஞ்ச உண்மையை நோக்கி உன்னத பயணத்திற்கான “ஒரு அற்புத நடன முத்திரையாக தோன்றுகிறது.

ஆனால் சமகால கவிதைகள் இதற்கு மாறாக சிதைவில் ஆரம்பித்து சிதைவிலே முடிகிறது.
உதாரணமாக பா.சரவணனின் “மரணத்தில் கால்கள் எனும் இக்கவிதையை பாருங்கள்.


மரணத்தின் கால்கள்தான்
எவ்வளவு மென்மையானவை


நேற்று
சாலையில் இறந்து கிடந்த
பூனையைப் போலவோ
அன்று
ரயில் நிலைய நடைபாதையில்
தவறி விழுந்து
மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தவனைப் போலவோ
தண்டவாளங்களிடையே
கருத்த துண்டங்களாய்க்
கிடந்தவளைப் போலவோ
ஆகிவிடாமல்

யானைபோல் குனிந்து
கால் மடக்கி
ஏறியபின்
எம்மை
வலிகாமல் தூக்கிச்செல்லும்
மரணத்தின் கால்கள்தான்
எவ்வளவு மென்மையானவை

மரணம் நம்மை அவ்வளவு சல்லிசாக ஆக்குகிறது. நாம் இறந்த பின் காலமும் அவ்வளவு சத்தமின்றி கடக்கிறது. இந்த மென்மையில் ஒரு குரூரமும் தவிப்பும் உள்ளது. ஆனால் மரணம் நம்மை தூக்கி எங்கே போகிறது என்பதில் இக்கவிதையில் எந்த குறிப்பும் இல்லை. மரணம் நம்மை தூக்கி செல்கிறது அவ்வளவு தான். இதுவே இசை என்றால் மரணம் நம்மை தும்பிக்கையில் தூக்கி வானத்திற்கு அப்பால் எறிவதாக எழுதி இருப்பார்.

அன்பரசு ஷண்முகத்தின் “உருமாறும் குதிரை கவிதையை பாருங்கள்.
மெல்லிய ஸ்பரிசங்கள்
குறும்புப் பார்வைகள்
தள்ளிவிட்டுக் கொண்டு
எதிரெதிரே உட்கார்ந்து
காய்கள் நகர்த்த
தயாராக இருக்கிறோம்
குதிரையை ஒரு கட்டம்
நகர்த்தி சிறு புன்னகை
பரிசளிக்கிறாய்.
பெரும்வெளியை கடக்கும ;
வேட்கையுடன் குதிரையாகி
போனோம்.
மாறி மாறி குதிரைகள்
சென்றுகொண்டேயிருந்தன.

ஒரு சதுரங்க ஆட்டமாக வாழ்க்கையை இக்கவிதை பார்க்கிறது. “பெரும்வெளியைக் கடக்கும் வேட்கையுடன் குதிரையாகி போட்டியிட்டு ஓடுகிறார்கள். ஆனால் இந்த விளையாட்டு சதுரங்கத்தின் விதிமுறைகளுக்குள், எளிய சதுரங்களின் எல்லைக்குள் முடிகிற ஒன்று. மாறி மாறி போட்டியிட்டு ஒருவரை ஒருவர் தாண்டி செல்வது அன்றி வாழ்க்கை பயணத்தில் எந்த இலக்குமில்லை என இக்கவிதை சுட்டுகிறது. இன்றைய வாழ்க்கையும் இது போல் விளையாட்டுக்கான விளையாட்டாக மாறி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுபுது விதிமுறைகளையும், பரபரப்புகளையும், கற்பனை பயங்களையும் உருவாக்கி வாழ்வின் அர்த்தமின்மையை கடக்க முற்படுகிறோம். இந்த நுட்பமான சித்திரம் இக்கவிதையில் உள்ளது. இக்கவிதை “பிரபஞ்ச ஆட்டத்துடன் சதுரங்க ஆட்டத்தை இணைப்பதில்லை என்பதை கவனிக்கலாம். இது ஒரு எளிய ஆட்டம். சுவாரஸ்யத்திற்கான, விறுவிறுப்புக்கான ஆட்டம். எந்த உயரிய இலக்கும் அற்ற ஆட்டம். ஏனென்றால் இன்றைய வாழ்வில் நாம் எந்த உயரிய இலக்கையும் நம்புவதில்லை.

சமகால கவிதைகள் தமக்கு இலக்காக ஒரு முழுமுற்றான உண்மையை தீர்மானித்துக் கொள்வதில்லை. அவை வானத்திற்கு அப்பால் ஒரு பயணம் இருப்பதாய் நம்பவில்லை. இவ்விதத்தில் தான் இசையின் கவிதைகள் வேறுபடுகின்றன. இப்படித் தான் இசை ஒரு கவிஞராக நம் காலத்தில் தனித்து, சற்று தனியாக நிற்கிறார்.

இசைக்கு நகைமுரணமும் சுயபகடியும் கலந்த பாணி அற்புதமாக கைவருகிறது.

ஒரு கழிவிரக்க கவிதை

ஒரு கழிவிரக்க கவிதை
கண்ணைக் கசக்கிக் கொண்டு
என் முன்னே வந்து நிற்கிறது
அதன் மேனியெங்கும் கூந்தலின் துர்நாற்றம்
ஊசிப்போன வடையை தின்று வாழும் அதை
கண்டாலே எரிச்சலெனக்கு.
போய்த்தொலை சனியனே
கண்ணெதிரே இருக்காதே…”
கடுஞ்சொல்லால் விரட்டினேன்.
காலைத் தூக்கிக் கொண்டு
உதைக்கப் போனேன்.
அது தெருமுனையில் நின்று கொண்டு
ஒருமுறை திரும்பிப் பார்த்தது
நான் ஓடோடிப் போய் கட்டிக் கொண்டேன்

கவிதைசொல்லி கழிவிரக்கத்தை வெறுக்கிறார். அதனால் அதை திட்டுகிறார். துரத்துகிறார். ஆனால் பிறகு அவருக்கு கழிவிரக்கத்தின் மீதே கழிவிரக்கம் தோன்றுகிறது. அது அன்பாக மாறுகிறது. எனக்கு குழு அரசியல் பிடிக்காது என கூறுபவர்கள் ஒரு குழுவாக மாறுவார்கள் இல்லையா? எதிர்க்கலாச்சார எழுத்து என்று கலாச்சார எழுத்தை மறுப்பவர்கள் அதையே ஒரு கலாச்சாரமாக மாற்றுகிறார்கள் இல்லையா? இந்த முரணைத் தான் கிண்டல் செய்கிறார் இசை.


நம் காலத்து நுண்ணுணர்வு இல்லாவிட்டாலும் இசை ஒரு முக்கியமான கவிஞன். ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவின் பாணியை கடைபிடிக்கிறவர் தான். நாம் அவரது பல பாடல்களை ரசிக்கிறோமே! இசை நமக்கு பிரமிளையும், ஆத்மாநாமையும், பிச்சமூர்த்தியையும், அப்பாஸையும் நினைவுபடுத்துகிறார். அந்த மரபின் நீட்சியாக, சினிமாத் திரையில் இருந்து வெளிக்குதித்த டினோசராக அவர் இருக்கிறார். அவரை பார்ப்கார்ன் கையுடன் அட என வியந்தபடி ரசிக்கிறோம். அவரது டினோசர் முட்டையை இங்கு கண்டடைய முயற்சி செய்திருக்கிறேன். இந்த எளிய மிருகங்களின் காலத்தில் நமக்கு பிரத்யேகமாய் டினோசர்களை பிடிக்கிறது. எனக்கும் இசையை பிடிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்!