யாருக்கும் தெரியாமல் - வேல்முருகன் .பா

கப்பல் செய்துதரச் சொல்லி
எனது பால்யத்திற்கு
சென்றுவர பாதையிட்டு
பணித்தாள் அவள்

செய்தித்தாளினை
எடுத்துவர சொல்லியதும்
கிழித்து எடுத்துவந்தாலவள்
ஏனென்று புரியவில்லை

செய்தித்தாளினை
சற்றே சதுர வடிவமாக்கி
நான்காக மடித்து
மும்முனையை ஒருபுறமாகவும்
ஒருமுனையை எதிர்புறமாகவும்
மடித்து இழுக்கையில்
காணக்கிடைத்தது கப்பல்

சற்றே ஒழுங்கற்ற
கப்பலின் வடிவம்
சந்தோசம் தரவில்லை
முழுவதும் அவளுக்கு

முயற்சிகள் தொடர்ந்ததும்
முழுமையான
வடிவம் பெற்றது
காகிதக் கப்பல்
அவள் சந்தோசப் புன்னகைபோல்

இனி கத்திக் கப்பல்
செய்யப் பழக வேண்டும் நான்
யாருக்கும் தெரியாமல்