செய்தித்தாளில் விளம்பரம் செய்தது.
“ஒரு நாள் என்னுடன்” -
ஒரு முழு நாளும் என் கூடவே
பயணம் செய்ய ஆசையா?
உடனே தொடர்பு கொள்ளுங்கள்!
அவசரமாய் ஒருவன்
முண்டியடித்து நேர்முகத் தேர்வின்
க்யூவின் முன்னே
சென்று நின்றான்.
நிறைய நேரம் அமைதியாய் கழிந்தது.
யாரும் பேசவில்லை.
”சீக்கிரம் முடியுங்கள்!
எனக்கு நேரமாகி விட்டது”- என்றவுடன்
காலம் அவனை தேர்வு செய்தது.
அந்த நாள்
வெகுசீக்கிரம் எழுந்து தயாராகி
காலத்தின் முள்ளில்
போய் உட்கார்ந்தான்.
ஒவ்வொரு நொடியும்
பயனுள்ளதாக்க அவனுக்கு
வாழ்க்கை கற்றுத் தந்ததாகவும்
தான் நேரத்தை வீணடிப்பதை
விரும்பாதவன் என்றும்
காலத்திடம் சொன்னான்.
”சரி.தொடங்கலாம்” என்றது காலம்.
“என்ன சார், நீங்க ஃப்ரீயா பேசவே மாட்டீங்களா?”
”சரி.தொடங்கலாம்” என்றது காலம்.
நாள் நகர்ந்தது.
எல்லார் வீட்டின்
கடிகாரமும் ஏசப்பட்டது.
அவனுக்கு
என்னமோ போல் இருந்தது.
உலகின் எல்லா விளையாட்டுகளும்
நன்றாக ஆகத் தொடங்கும் போது
காலம் அங்கிருந்து நகர்ந்து விடுவது
அவனுக்கு எரிச்சலை தந்தது.
தூக்கு கயிறு
அவன் முன் ஏறியது
அவன் வயிற்றை கலக்கியது.
நேரத்தின் பேரைச் சொல்லி
குழந்தைகளை அடிக்கும்
பலரை பார்த்து
அவன் வருந்தினான்.
ஆஸ்பத்திரியில் டாக்டர்
இறப்பின் நேரம் குறிக்கும் போது
கொஞ்சம் காலம் நிம்மதியடைந்தது
போல் உணர்ந்தான்.
”ஒக்காந்து ஒக்காந்து கால் வலிக்குது.
கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமா?”
என்றான்.
“சரி, தொடங்கலாம்” என்றது காலம்.
அவன் இறங்கி காலை உதறி
பார்க்கும் பொழுது
காலம் அவனை விட்டு சென்று கொண்டிருந்தது.
எவ்வளவு முயன்றும் அவனால் காலத்தின்
இடைவெளியை கடக்க முடியவில்லை.
பிறகு அவன் வீட்டிற்கு
சென்றான்.
அவன் வீட்டு
வால் க்ளாக்கை பார்த்து...
“என்ன சார், இப்படி பண்ணிட்டீங்க?..”
என்றான்.
அவன் மனைவி அவனை
லூசைப் பார்ப்பது போலப் பார்த்தாள்.
அடுத்த சில வருடங்களுக்கு
பிறகு....
அதே விளம்பரம்.
இன்னொருவன் ஆர்வமாய் பார்ப்பதை
இவன் டீக்கடையில் பார்த்து விட்டு
”அடப் போய்யா! போய் வேலையைப்
பாரு! அங்கன போனா
பாத்ரூம் கூடப் போக முடியாது.”
என்று சொல்லி விட்டு
அவனுக்கும் தெரியாமல்
காலத்துடன்
நடந்து சென்றான்.