ஒரு சிறு ஐயம் - மிருணா
புத்தகத்தின்  முதல் பக்கம் திறக்கிறது
இதயத்தின் அத்தனை அறைகளிலும்
தாள  முடியாதொரு  நறுமணம் 
பின் உலகின்  விசித்திர ஜன்னல் சதுரங்கள்
ஒவ்வொன்றாய் திறந்து கொள்ளும்
முடிவற்ற   பயணம் மெல்ல ஆரம்பம் ஆகிறது
உள் மனத் துயர் குழந்தை போல வேடிக்கை பார்க்க
பெரும்   பாலைகளின் வெறுமையை  உணர்ந்தபடியோ
ருஷ்ய உறைகுளிரில்  நடுங்கிய படியோ
சித்தார்த்தனோடு படகில் சென்றபடியோ
சுரங்கத்தின்  கரிய சோகத்தை துடைத்தபடியோ
நீதி  வாதுக்களில் மாறி மாறி அமரும் பொழுதோ
காணும் எண்ணற்ற முகங்கள் 
ஒரு திரையரங்கின் அனைத்து  இருக்கைகளிலும்
நன்றாகத் தெரிந்தவர்களின் முகங்கள்  போல
இருப்பின் கதகதப்புக்கு வெம்மை கூட்டுகின்றன.
தீவினையும் நல்வினையும்  
இணைந்துருவாக்கிய பெரும் வெளியில் 
தங்களை நிகழ்த்திக் காட்டுகின்றன
காவிய சோகங்களும் காமிக் சாகசங்களும்
நீதி வேண்டி அங்குமிங்கும் அலைவுறும்  பாத்திரங்கள் 
உலகின் அதிகாரமிக்க நீதிமன்றத்தை உயிர்ப்புக்கு கொண்டு வர  
தீர்ப்பெழுதப்  பேனாவைத் திறக்கும் நீதிபதி
அவர்கள் செய்தது அவர்களால் செய்ததுதானாவென 
சிறு ஐயமுறும் வேளை
புத்தகத்தின் இறுதி பக்கம் தானே மூடிக் கொள் 
நறுமணப் புகை அதனுள் நுழைந்து மறைகிறது.