ஓயாப்பெரு நடனம் 9 - ஆத்மார்த்தி முதல் கவிதைத் தொகுப்புகள்

  முதல் கவிதைத் தொகுப்புகளைப் பற்றிப் பார்க்கலாம்.சிறுபத்திரிக்கைகளில் ஆங்காங்கே கவிதைகள் வெளியாகத் தொடங்குகையில் ஒரு அல்லது சில கவிதையாவது தனித்து அடையாளப்படுத்தப் பட்டு உற்று நோக்கப்படுகையில் புதிதாய் எழுதவரும் கவிசொல்லி ஒருவர் நின்றுகொள்வதற்கான இடம் ஒன்று உருவாகிறது.

மதபீடங்களையும் கவிதையெழுதுபவர்களையும் எளிதில் பொருத்திப் பார்க்கலாம்.ஒருவரைக் கவிஞர் என்றும் அவர் எழுதுவதைக் கவிதை என்றும் ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் ஒரு அல்லது சில அல்லது பல கவிஞர்கள் சொல்லத் தொடங்குகையில் அவருக்கான வெளிச்சப்பேழை ஒளிரத் தொடங்குகிறது.அந்த முதல் வெளிச்சத்தை அப்படியே பற்றிக்கொண்டு போய் முதல் தொகுப்பு வெளியிடுவது வரையில் நித்ய கண்டம் பூர்ணாய்சு தான்.
              இங்கே கவிஞர்கள் அனேகர்.எது புதுக்கவிதை எது நவீன கவிதை எது கவிதை எது கவிதையே இல்லை என்றெல்லாம் தினவேள்விகளும் ருத்ரதாண்டவங்களும் அன்றாட நிகழ்வுகளாகின்றன.யாராவது யாரையாவது பிடித்து யாககுண்டத்தில் அல்லது பாழுங்கிணற்றில் தள்ளிக் கொலை செய்துகொண்டே தான் இருக்கிறார்கள்.நிராகரிப்புக்களும் போற்றுதல்களும் இவ்விரண்டுமே காரண காரிய நுட்பங்களுக்குப் பின்னதான ஓரு ஆய்வை அடியொற்றித் தரப்படும் விமர்சனமாக இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.சூழலில் இசை நாற்காலிப் போட்டி ஒன்றை சதா நடாத்திக் கொண்டே இருக்கிறார்கள்.உன் சமர்த்து எங்கே ஒரு இடத்தைப் பிடுங்கி அமர்ந்துகொள் பார்க்கலாம் என்ற தொனியில் தான் புதிய கவிஞர்களுக்கான நுழைவிடம் இருக்கிறது.

             இங்கே வாய்வார்த்தையாகவே கவிதைகளைப் போற்றுவதும் நிராகரிப்பதுமாக ஒரு சஞ்சார நடுவே சில முழுக்குகளைப் போட்டுவருகிறாற்போல கவிதை என்றில்லை எல்லா எழுத்துவடிவங்கள் குறித்தும் ஆகப் பெரிய விமர்சனங்கள் பெரும்பாலும் வாய்ச்சொற்களாலேயே நிகழ்ந்துவிடுகின்றன.இன்னொரு பிரச்சினை.ஆன் தி ரெக்கார்ட் ஆஃப் தி ரெக்கார்ட்.ஒரு கவிதைத் தொகுப்பைப் பற்றி ஆஃப் தி ரெக்கார்டில் ஆயிரம் பேச்சுப் பேசுகிறவர் கூட அதையே எழுத்தில் தரச்சொன்னால் தருவதே இல்லை.எழுத்தில் முன் வைக்கப்படும் படைப்புக்கள் குறித்து எழுத்தில் விமர்சனத்தை வைப்பதென்பதை ஒரு பக்கவாட்டுத் தேர்வாகக் கொள்கிறார்களே ஒழிய வாய்வார்த்தையாக அரைகுறை இருளில் கிட்டுகிற அத்யந்தர்களின் சபையில் போகிறபோக்கில் தொகுப்புக்களைக் கவிதைகளை நிராகரித்துப் போவதை ஆகச்சிறந்த பலரும் ஒரு ஆகமமாகக் கடைப்பிடிக்கிறார்கள்.

             தமிழில் சிறுபத்திரிக்கைகள் என்கிற எலும்பும் தோலுமான வெளியின் உள்ளே மட்டும் தான் ஒரு புதிய கவிஞரும் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர்களும் ஒருங்கே தத்தமது கவிதைகளை வெளியாக்கம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.திரும்பத் திரும்ப பத்துப் பத்திரிக்கைகளினுள்ளே கவிதைக்கென ஒதுக்கப்படும் சிற்சில பக்கங்களுக்கிடையே தான் இத்தனை பெரிய எண்ணிக்கையிலான கவிதைகள் பிரசுரிக்கப்படுவதற்கான வாய்ப்பு தொக்கி நிற்கிறது.

                         கவிதைக்கெனவே ப்ரத்யேகமாகச் சில இதழ்கள் கனவிலிருந்து செயல்பாட்டுக்கு நகர்ந்து அவையும் சில நகர்வுகளில் ஓய்ந்தும் போயின.வணிகப் பத்திரிகைகள் தங்களால் இயன்ற இடத்தைக் கவிதைக்கெனத் தர முன் வந்தாலும் அவற்றின் பிரசுரக் கொள்கைகளுக்கு உட்பட்டு தனித்தணிக்கைகளைத் தாண்டி ஒரு கவிதை அவற்றில் பிரசுரிக்கப் படுவது இன்னும் கடினமாக இருக்கிறது.

                     நோட்டுப் புத்தகத்திலோ அல்லது கணிணியின் மாயப் பள்ளத்தில் பீடீ.எஃப் பதிவாகவோ வைத்துக்கொண்டிருக்கும் கவிதைக்கொத்துக்களை எப்போதடா அச்சில் பார்ப்போம் என்ற ஆவலாதி ஒருவரது முதற் தொகுப்பை கனவிலிருந்து நனவு நோக்கிக் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது.

                      முதல் தொகுப்பை எல்லா பதிப்பகங்களும் வெளியிடுகின்றனவா என்றால் அங்கேயும் தணிக்கை கொள்கை இன்னபிற விடயங்கள் வந்து நிற்கத்தான் செய்கின்றன.அவற்றை எல்லாம் தாண்டித் தப்புவது சில தொகுப்புகள்.இல்லாவிட்டால் சினிமாவில் உப்புமாக் கம்பெனிகள் என்பார்கள் அல்லவா..?அதைப் போலவே கவிதைத் தொகுப்புகளைத் தயாரித்துத் தருவதற்கெனவே இருக்கக் கூடிய சிலபல உப்புமா நிறுவனங்களிடம் பேரம்பேசி முதல் தொகுப்பைப் பிரசுரித்து வைத்துக் கொண்டு பார்க்கிற அனைவரையும் விரட்டிச் சென்றாவது ஒரு புத்தகத்தைத் திணித்து விட்டு யாராவது எங்கேயாவது நம் கவிதைகளைப் பற்றி ஒருவரியாவது எழுத பேச போற்ற தூற்ற மாட்டார்களா என்று ஏங்கிச் சாவது தான் முதல் கவிதைத் தொகுப்புகளின் தலையில் எழுதப் பட்டிருக்கும் தேவலிபிஎனக்குத் தெரிந்த வரையில் சுஜாதா கடைசிகாலம் வரை கத்திக்கொண்டே இருந்தார்மனுஷ்யபுத்திரன் துவங்கி நா.முத்துக்குமார் வரை பல கவிஞர்களை சுஜாதா வாயார மனதாரப் பாராட்டினார்அவர்களது உழைப்பின் மீது விழுந்த வெளிச்சம் அவர்.இன்றைக்குக் கல்யாண்ஜி புதியவர்கள் வரைக்கும் பலரையும் மனதிலிருந்து பாராட்டுகிற பெருங்கவி.மனுஷ்யபுத்திரன் குங்குமத்தில் எழுதிய தொடர்பத்தியில் ஒவ்வொரு வாரமும் தனக்குப் பிடித்த ஒரு கவிதையைத் தனித்தெழுதினார்.அவற்றில் பல புதிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றன.

                       இல்லை என்றால் வாழ்நாளின் முக்கால் வாசிப் படம் முடிந்த நிலையில் ஒரு குருபீடத்தில் தன் கவிதைகளைச் சமர்ப்பித்து விட்டு அதை அவர்கள் பிராஸஸ் செய்யும் முறை அலாதியாக இருக்கும் அதை அவர்கள் இரண்டு அல்லது மூன்று நரகாசுரர்களிடம் அனுப்பி வைப்பார்கள்.அந்த நரகாசுரர்கள் தங்களால் முடிந்த வரை அந்த முதல் முயல்வைக் கொத்திக் கிளறி ஏண்டா எழுத வந்தாய் என்று உள்ராக்கிங் செய்து எழுதியவனை நோகடித்து அவன் உயிர் பிரியும் நேரம் சரி பிழைத்துப் போ என்று சொல்லி ஒல்லிப்பிச்சான் தொகுப்பாக அது வெளியேறும்.

                          சில பேர் பெற்ற பதிப்பகங்களின் மூலம் தான் தனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியாக வேண்டும் என்று ஒரு புதிய கவிதைக்காரன் நினைப்பதிலிருந்து தொடங்குகிறது கவிதைகளின் அரசியல்பரமசதுரங்கபதம் ஆட ஆரம்பிக்கிற கணத்தில் இருக்கக் கூடிய அறியாதொருவனாகத் தன் கவிதைத் தொகுப்பு வெளியாகிற தினத்தில் அவன் இருக்க மாட்டான்.

  முன்னுரை பெறுவது என்பது இன்னொரு மகா சிக்கல்.யாரிடம் முன்னுரை வாங்குவது என்பதில் தொடங்கி வாங்கி முடித்து அச்சுக்கு அனுப்பும் வரையில் நேர்கிற காத்திருப்புகள்.முன்னுரை என்பதை இயங்கிக் கொண்டிருக்கும் ஒருசில கவிஞர்கள் மீதான அன்புத்தொல்லையாக நிர்பந்தமாகத் தான் பெரும்பாலும் பார்க்க நேர்கிறது.இங்கே தமிழில் கவிஞர்கள் அனேகர்.பதவி உயர்வு பெற்ற பெருங்கவிஞர்கள் பலரும் புதியவர்களை ஊக்குவிப்பதோ ஒரு வார்த்தை உற்சாகப்படுத்துவதோ கூடக் கிடையாது.அப்படி நிருக்கையில்  முன்னுரை எழுதுவது என்பது வெகு சிலரே செய்கிறார்கள்.அவர்கள் போற்றுதலுக்கு உரிய பெருமான்கள்.

                  முதல் கவிதைத் தொகுதி வெளியான பிற்பாடு அதற்கொரு அறிமுகம் மற்றும் முதல் விமர்சனம் வரையிலான பின் தொடர்தல் பெரும் பத்திரிக்கைகளில் அவற்றைப் பற்றிய சேதிகளை இடமாக்கச் செய்ய வேண்டிய முயல்வுகள் இலக்கியக் கூட்டங்களில் பத்துப் புத்தகங்களில் ஒன்றாகத் தன்னுடையதையும் உட்படுத்துதல் என ஒரு முதல் கவிஞனுடைய கடமைகள் பொறுப்புகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன.இவற்றையெல்லாம் தப்பாமல் செய்துகொண்டே அடுத்த தொகுப்புக்கான கவிதைகளை இன்னும் தேவ அச்சத்துடன் எழுதத் தலைப்படுகிற கவிஞர்கள் மட்டுந்தான் அடுத்த நிலை ஆட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.மற்றவர்கள் செத்தொழிகிறார்கள்.

            முதல் கவிதைத் தொகுப்பு என்கிற பதத்தினுள் நுழைவதற்கு முன்பாக இங்கே கடந்த எண்பது ஆண்டுகளாய் நவகவிதை குறித்த கவிதையியல் சார்ந்த புத்தகங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிக மிகக் குறைவே என்று புரிய நேர்கிறது.ஆந்தாலஜி எனப்படுகிற தொகுத்தல்கள் கவிதைத் தோரணங்கள் தமிழில் மிகமிகக் குறைவாகவே இருக்கின்றன.எழுத்தில் பெயர்க்கப் பட்ட விமர்சனங்கள் தமிழில் மிகமிகக் குறைவாகவே இருக்கின்றன.ஆனால் கவிதைகள் மட்டும் ஆயிரக்கணக்கில் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றனமௌனம் என்று ஒரு சொல்.அது அச்சமாகவும் எள்ளலாகவும் விரதமாகவும் வீர்யமாகவும் க்ரூரமாகவும் கருணையாகவும் இருந்துவிடுவதற்கான எல்லா வாய்ப்புக்களும் இருப்பதைப் போலவே கவிதைகள் குறித்த நுட்பங்கள் கவிதைகள் குறித்த விமர்சனங்கள் கவிதைகள் குறித்த தொகுத்தல்கள் இவை மூன்றும் அருகியே இருக்கின்றன.இவை நல்லதல்ல.

               ஒரு தொகுப்பு நேராக இலக்கிய சூழலுக்குள் நுழைந்துவிடமுடியாது.ஒரு கவிஞனை டீல் செய்வதைப் போல நூறு கொலை செய்தவனைக் கூட நடத்தமாட்டார்கள்.அத்தனை தனியான எதிலும் சேராத நடைமுறைகள் இங்கே இருக்கின்றன.முதல் கவிதைத் தொகுப்பை எழுதியவுடன் இலக்கியத்தின் இரண்டாவது ராகிங் ஆரம்பமாகிறது.

             கடந்த பதினைந்து ஆண்டுகளில் முதல் அல்லது ஒரே தொகுப்புக்களை எழுதி வெளியிட்டபின் இரண்டாவது தொகுப்பு வரைக்கும் நகராமல் போன கவிஞர்களின் பட்டியல் மிகப் பெரியது.அதைத் தாண்டி இன்னமும் அடித்து ஆடிக்கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே.

          என்னைப் பொறுத்தவரையில் தான் என்ன மாதிரியான கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்ற முன் கவனம் பெரும்பாலானவர்களிடம் கிடையாது.ஜூகல் பந்தி போல முதலில் பலதரப்பட்ட கவிமாதிரிகளை எழுதித் தள்ளி அதன் பின் அவற்றில் எதெல்லாம் தேறுமென்று ஒரு அடைப்பைப் போட்டு அவற்றை மட்டும் தொகுப்பாக்கிக் கொள்வது ஒரு வசதியாக மட்டுமல்ல ஒரு உபகரணமாகவும் இருக்கிறது.முதல் கவிதைத் தொகுப்பைப் பற்றிய தேவையான புரிதலைக் கற்பிப்பதற்கு இங்கே யாரும் தயாராக இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

                               கவிதை என்பதும் தொகுப்புகள் என்பதும் எண்ணிக்கையில் அல்ல.ஆனால் எண்ணிக்கை சார்ந்தே ஒரு கவிஞன் தன்னை முன் வைத்துக் கொள்கிறான்.அடையாள அணிவகுப்பில் ஒரு குறிப்பிட்ட குற்றத்தை யார் செய்திருக்கக் கூடும் என்ற யூகத்தில் நிறுத்தி வைக்கப்படும் குற்றந்தேர்ந்தவர்களின் வரிசை போல அவனை எண்ணிக்கை பிய்த்துத் தின்னுகிறது.

                   முதல் கவிதைத் தொகுப்பிற்கான சுய உரைகள் ஸ்வாரசியமானவை.அவற்றின் பின் அட்டை வாசகங்கள் இன்னும் சொல்லத் தக்கவை.எனக்கொரு ஆசை உண்டு.தமிழில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியான எல்லாக் கவிதைத் தொகுதிகளில் இருந்தும் அவற்றின் பின் அட்டை வாசகங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வரவேண்டும் என்பதே அது.யார் தலையில் வேண்டுமானாலும் அடித்துச் சத்தியம் செய்வேன்.ஒரு துப்பறியும் நாவலின் அதே ஸ்வாரசியத்தை அந்தப் புத்தகம் நேர்த்தித் தரும்,ப்ளர்ப் எனப்படும் மேலட்டை ஆசீர்வாதங்கள் அத்தனை இனிமையானவை.இவை எல்லாவற்றையும் யாரோ ஒருவர் முதலில் தீர்மானிக்கிறார்.அவரோடு எந்தத் தொடர்பும் இல்லாத பிற மற்றவர்களும் கூட அதையே மௌனவெறியுடன் பின் பற்றுகிறார்கள்.மீறல் என்பதனுள் இயங்கக் கூடிய இந்த மீறாமை கூர்ந்து நோக்கவேண்டியது.இவற்றுக்கு அப்பால் ஒரு எழுத்துக்காரன் அவன் கவிஞனோ கதைஞனோ அவன் மீது அடுத்த வெளிச்சம் எதாவதொரு விருது.அது வந்து சேரும் வரை அவனது இரண்டாம் அனாதைக் காலம் நீண்டுகொண்டே போகிறது.

         கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்திருக்கக் கூடிய முதல் கவிதைத் தொகுப்புக்களில் என்னளவில் சிறந்த தொகுதிகள் பட்டியலைத் தரலாம் என நினைக்கிறேன்.

   1. பொருளற்ற சொற்கள் ராஜ்குமார் ஸ்தபதி

   2. கைப்பற்றி என் கனவுகேள் சுகிர்தராணி

   3. மிதக்கும் மகரந்தம் எழிலரசி

   4. என்றுதானே சொன்னார்கள் சாம்ராஜ்

   5. காற்று கோதும் வண்ணத்துப் பூச்சி இசை

   6. நாம் பேசிக்கொண்டிருந்த போது பெய்திராத மழை மயூமனோ

   7. துறவி நண்டு எஸ்.தேன்மொழி

   8. தெய்வத்தைப் புசித்தல் செல்மா ப்ரியதர்ஸன்

   9. நாகதிசை ராணி திலக்

  10. உரத்துப் பேச ஆழியாள்

  11. எரிவதும் அணைவதும் ஒன்றே போகன் சங்கர்

  12. குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள் மனுஷி

  13. என் பெயர் ஜிப்ஸி நக்கீரன்

  14. காயசண்டிகை இளங்கோ கிருஷ்ணன்

  15. மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கதிர்பாரதி

  16. வெயில் தின்ற மழை நிலாரசிகன்

  17. தப்புகிறவன் குறித்த பாடல் லிபி ஆரண்யா

  18. நீர்முனி கணேசகுமாரன்

  19. கடலுக்குச் சொந்தக்காரி மரகதமணி

  20. காலங்களைக் கடந்து வருபவன் சுஜாதா செல்வராஜ் 


தொடரலாம்