ஓயாப்பெரு நடனம் 8 - ஆத்மார்த்தி






இல்லாமை இயலாமை போதாமை 

  கவிதை என்பதை வானோர் வரம் என்று சொல்பவர்களும் தனக்கு மட்டும் வாய்த்திருக்கும் சிறப்புச்சிறகாக உணர்பவர்களும் அதனைத் தன் சன்னத நிலையில் தன்னறியாது தானெழுதுவதாகப் பிரகடனப் படுத்துகிறவர்களும் உளத்தின் அடிவாரத்தின் தீராத அரிப்பாக அதனை என்னசெய்வதென்று தெரியாமல் பெயர்க்கப் பார்க்கையில் விளையும் ஒன்று என்பவர்களும் சிலுவையைத் தனக்குப் பதிலாகச் சுமக்க வந்த மீட்பர் என்பவர்களும் பாம்பு உரித்துப் போடுவதைப் போலத் தாங்கள் உரித்தெறிகிற சட்டை எனவும் எத்தனை சொல்லியும் துரத்துவதை நிறுத்தாத நாய் எனவும் தன் கட்டுப்பாட்டில் ஒரு போதும் இல்லாத நிழல் மழை இன்னபிற போல அது என்பவர்களும் கடவுள் கிருபை எனவும் சாத்தானின் வசியம் என்பவர்களும் ப்ரியம் என்பவர்களும் வெறுப்பு என்பவர்களும் சூட்சுமம் என்பவர்களும் சூன்யம் என்பவர்களும் அசரீரம் என்பவர்களும் பூச்சியம் என்பவர்களும் இன்னபிற என்பவர்களும் இன்னபிற என்பவர்களும்.....................

                      .....................................சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்கள்.யெஸ்.யூ ஆர் ரைட்.கவிதை என்று நீங்கள் சொல்வது தான் கவிதை.மரபுக்கவிதை வெர்ஸஸ் புதுக்கவிதை என்பதின் உள்ளே நாம் செல்லவில்லை இப்போது.அது வேறு டிபார்ட்மெண்ட்.

                  ஒரு கவிதை கவிதையா இல்லையா..?வெறும் சொற்கூட்டம் கவிதை ஆகாது.போலச்செய்தல் கவிதை ஆகாது.மொழி ஏற்படுத்தும் வெற்று அதிர்வு கவிதை அல்ல.அலங்காரச்சேர்மானங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் எதையும் கவிதை இல்லை என்று மறுதலிக்கலாம்.பிறகு எதுதான் கவிதை..?அது தான் விஷயமே..சுற்றிச்சுற்றித் தான் வரவேண்டியிருக்கிறது.ஹெவியான ட்ராஃபிக்கில் சிக்கிக்கொண்டு எப்படி வெளியேறுவது என்றறியாது மெல்ல மெல்ல எல்லோரையும் திட்டிக்கொண்டே வணங்கிக்கொண்டே நகர்ந்து கொண்டே திரும்பிக் கொண்டே புகுந்து கொண்டே விடுபட்டுக் கொண்டே ஊர்ந்துகொண்டே புன்னகைத்துக் கொண்டே முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் அந்த ஒரு கணம் தான் கவிதை.அது போலத் தான் கவிதையைக் கண்டறிவதுவும்.எது கவிதை இல்லை என்பதைத் திரும்பத் திரும்ப நோக்குவதன் மூலமாக எது கவிதை என்று அடைவது தான் நல்லதோர் வழி.

                     சரி.இதெல்லாம் கவிதை என்று பேசத் தொடங்கும் போதெல்லாம் வேறொரு கதவு திறந்துகொண்டு வேறோரு பூதம் புன்னகைக்கிறது.இரு நான் ஆட்டத்தைக் கலைக்கிறேன் என்று நகுகிறது.அது தான் செப்பனிடுதல்.கவிதை எழுதுகிறவர்கள் யார்க்கும் செப்பனிடுதல் கலைக்குள் பெருங்கவலையாகிற ஒன்று தான்.

                    தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட கவிஞர்கள் அதற்குள்ளே பரமசௌக்யமாக இயங்குவதை வெளியே இருந்து பார்க்கையில் சாதாரணமாய்த் தோன்றும்.ஆனால் ஒரு பாணியை உருவாக்குவது என்பது மொழியில் இயங்குகிறவர்களிடையே நிலவக் கூடிய உச்சபட்ச சிரமகார்யமாக நான் உணர்கிறேன்.சாதாரணமல்ல அது.கவிதை எழுதுவது என்பது எண்ணிக்கையில் அல்ல.அரை மணிக்குள் ஆயிரம் கவிதைகளை எழுதிவிடுவதாக நம்புகிறவர்களும் தான் சிந்திப்பதே கவிதையாகத் தான் என்று வெம்புகிறவர்களும் இருந்து தொலையட்டும்.எண்பதாண்டுகளுக்கும் மேலான தமிழ்க்கவிதைப் பரப்பை உற்று நோக்கினால் கவிதைகளின் சொலல் முறைகளில் தனக்கென்று ஒரு சொலல் முறையை வகுத்துக் கொண்டவர்களைப் பற்றித் தனியே பேசலாம்.பேசவேண்டிய பொருள் தான் அது.

                             கவிதை மொழியின் உன்னதமான அடுக்கொன்றை நேர்த்துகிறது.மற்ற எல்லா எழுத்துவடிவங்களில் இருந்தும் தன்னைத் தனித்துக் கொள்கிற
கவிதை தான் தமிழ் என்றில்லை எந்த மொழியாகினும் அதன் உச்சபட்சமான கலைவெளிப்பாடாக மாறுகிறது.இது பிற கலைவடிவங்களின் குறைபாடல்ல.,மற்ற எழுத்துவடிவங்களின் இயலாமையும் அல்ல.மாறாக கவிதை என்னும் கலைவடிவத்தின் உன்னதம்.அப்படியாகிற கவிதைக்கும் பிற இலக்கிய வடிவங்களுக்கும் இடையிலான முதல் வேறுபாடாக இதனைச்சொல்லலாம்.அதாவது கவிதை என்பது முழுவதும் வெளிப்பட்டுவிடுவதான கலைவடிவம் அல்ல.அதன் உட்பொருளும் சொலல்தன்மையும் முடிவுறு நிலையில் இருப்பதற்கான எந்த நிர்ப்பந்தமும் இல்லை.சிறுகதையாவது குறுநாவலாவது கட்டுரையாவது முற்றுப்பெறுவதைப் போல வெளிப்படையாக ஒரு கவிதை முடிந்துகொள்வதில்லை.அப்படி முடித்து வைக்கப்படவேண்டிய எந்த நிர்ப்பந்தமும் கவிதைக்கு இல்லை.நீட்சி என்பதைக் கவிதைக்கு உள்ளே துவங்குகிற ஒன்றாய் நம்மால் கண்டடைய முடிகிறது.பிற கலைவடிவங்களில் நீட்சி என்பது ஒரு படைப்பின் முற்றுப்பெற்ற பின்னதான வாசக அனுபவமாக நம்மால் இரண்டு தனியான அம்சங்களாகக் கருத்தில் கொள்ள இயலுகிறது.கவிதையில் நீட்சி என்பது அந்தக் கவிதை முற்றுப்பெறுவதை நிர்பந்திக்காமல் வாசக அனுபவத்தையும் உட்கொண்டதாக மாறுகிறது.இன்னும் இதனை விரித்தால் ஒரே கவிதை வெவ்வேறு நீட்சிகளைக் கொண்டிருக்க வாய்க்கிறது.அதன் நீட்சியின் சாத்தியங்கள் முடிவிலியாக மாறுவதைக் கவிதையின் உன்னதத்தோடு பொருத்திக் கொண்டால் கவிதைக்கும் பிற எழுத்து முயல்வுகளுக்குமான வித்யாசத்தை உணர உதவுகிறது.
                           கவிதை என்பது உணர்வின் பெயர்த்தல்.அது மொழியின் உதவிகரத்தோடு செய்ய இயலுகிற உன்னதமான கலாமுயல்வு.இவ்விரண்டையும் தாண்டி கவிதை என்பது கவிசொல்லியின் நம்பகம்.அப்படி நேர்கிற எல்லாக் கவிதைகளுமே கவிதைகளா..?இன்னும் சுருங்கச்சொன்னால் எது கவிதை எது கவிதை என்பதற்கு நேரடியாக பதில் சொல்வது எளிதான கார்யமல்ல.சிக்கலை விடுவிப்பனுக்குக் கூடுதலாய்க் கிட்டுகிற சிக்கல் போன்றதது.

                           கவிதை என்பதை கவிசொல்லி எப்படிப் படைக்கிறாரோ அது சரியான அல்லது அந்தக் கவிதையின் ஒரே சிறந்த பிரதியா..?என்று கேட்டால் இல்லை என்பேன்.இல்லை என்று கொள்வது தான் ஆகச்சரி என்று இன்னொரு வாதத்தைத் தொடங்க வேண்டாம்.முதலில் இதனைக் கவனிக்கலாம்.எழுதுகிறவனுக்கும் கவிதைக்குமான உறவு அல்லது உரிமை என்பது என்ன..? எழுதுகிறவன் மட்டுந்தான் அந்தக் கவிதையின் சான்றளிக்கப்பட்ட சட்டபூர்வமான உரிமையாளனா..? ஒரு கவிதையை எழுதுகிறவனுக்கு அப்பால் அதனை வாசிக்கிற வாசகன் அதன் வடிவம் சொலல் முறை அதன் உள்ளீடுகள் கையாளப்பட்ட விதம் படிமம் குறியீடு இன்னபிற ஆகியவற்றில் கொள்கிற முரண்பாடுகள் தொன்மங்களைக் கையாள்வதில் நேருகிற சந்தேகங்கள் ஆகியவற்றை முன்வைக்கிற ஒரே வழி விமர்சனம் தானா..?ஒரு கவிதையில் ஏற்படுகிற பிரச்சினைகளை வெளிக்கொள்வதற்கான ஒரே வழி விமர்சித்தல் மற்றும் எதிர்வினை என்று தான் இருக்கவேண்டுமா..?

                       கவிதை என்பதை எழுதும் முறை என்ன என்பதைப் பற்றி இதுவரைக்குமான நூல்கள் அனைத்தையும் வாசித்துவிட்டு இந்தக் கட்டுரைத் தொடரை நான் துவங்கவில்லை.என் ஐயங்களும் என் அறிதலும் கலந்தே இதனை எழுதுகிறேன். நான் வாசித்தவரை கவிதையியல் குறித்த ஆகச்சிறந்த நூல்கள் என்று என்னிடத்தில் ஒரு சிறிய அதே நேரம் நல்ல பட்டியல் ஒன்று இருக்கிறது.அந்தப் பட்டியலின் எந்த நூலிலும் நவ கவிதையைச் செப்பனிடுதல் குறித்துப் பெரிய அளவில் எந்தக் கட்டுரையும் இல்லை என்பது வேதனையே.

      கவிதையை எழுதுவதென்பதை முன்பே சொன்னாற் போல ஆவி வந்த கார்யமாக முன்வைக்கிற அனைத்தையும் மறுதலிக்காமல் ஏற்றுக்கொள்கிற அதே நேரம் கவிதை என்பது முதல்முறை அல்லது ஒரே முறை எழுதுவதாகச் சொல்வதையும் நம்புவதையும் அறவே மறுக்க விழைகிறேன்.ஒரு கவிதை ஒரே தரத்தில் எழுதப்பட்டாக வேண்டிய வஸ்து அல்ல என்பது அடியேனின் வன்மையான கருத்து.

                 சரி.கவிதையை எழுதுகிறவனுக்கும் அக்கவிதைக்குமான உறவு என்ன..?உரிமை என்ன..?அப்படி எதுவும் இல்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டுப் போய்விடலாம்.எந்த ஒரு கவிதையையும் எழுதி முடித்தவுடன் அதற்கும் எழுதியவனுக்குமான உரிமை முற்றுப்பெறுவதில்லை.அதே நேரம் அப்படி ஒரு கோரலை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை என்பதே சொல்லத்தக்கதாகிறது.இது என் கவிதையாக்கும் என்று கையைப் பிடித்துக்கொண்டே திரிவதென்பது ஆக்கபூர்வமல்ல.மேலும் அது ஒரு கவிதை நிகழவேண்டிய மௌனத்தின் பரப்புக்குள் சப்தமாகத் தன்னை நிறுவ முயன்றுகொண்டே இருக்கிறது.அதன் பின்னதான நிசப்தத்தினுள்ளும் ஒலிப்பதை நிறுத்துவதில்லை.

               ஒரு கவிதை நிசமாக எழுதியவுடன் தன்னை முடித்துக் கொள்வதே இல்லை.இக்கூற்றின் படி நோக்கினால் அதனை எழுதியவனும் அதற்குச் சாத்தியமான வாசகர்களுக்குள் ஒருவனாக மாறுவதே இயல்பாக நிகழ்கிற ஒன்று.மாற்றாகத் தன்னைத் தனித்துக் கொள்ள அதனை எழுதியவன் முயலுகிற எல்லாமுந்தான் அது நிகழவேண்டிய மௌனத்தினுள் விகாரமாய் சப்திக்கிறது.

                   இந்த இடத்தில் கவிதைகள் செப்பனிடப்படுகிறதா..?என்ற கேள்வி எழுகிறது.எழுத்தை மற்ற எல்லாக் கார்யங்களைப் போலவே இதுவும் ஒரு வேலை என்று ஆக்குவதல்ல என் நோக்கம்.அதே நேரத்தில் அது வெறும் சன்னதமல்ல.நனவிலி நேரத்து நாட்டியமாகத் தங்கள் எழுத்தை முன் நிறுத்த விழையும் யாரையும் மறுதலிக்கிறேன்.எழுத்தென்பது ஆகச்சிறந்த செயல் தான் என்றபோதும் அது முழுவதும் ஒரு வரைபடத்தின் முதற்புள்ளியில் துவங்குகிற மகா நகரத்தின் கட்டுமானம் போலத் தான்.கண்ணுக்குத் தெரியாத பல தீர்மானங்கள் சூட்சுமங்கள் சூத்திரங்கள் ஆகியனவற்றின் கூட்டுமுயல்வாகத் தான் கவிதையைக் கொள்ள முடிகிறது.ஒருவேளை தத்தமது சன்னதத்தை நனவிலி நேரத்து மொழிப்பொழிவை இன்னும் விடாப்பிடியாக முன்வைக்கிறவர்களும் கூட ஏதோ ஒரு சூத்திரத்தின் இடைக்கண்ணிகள் என்று தான் கொள்ள முடிகிறது.

         கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் எழுதப் பட்டிருக்கிற பல தமிழ்க்கவிதைகள் முன் பழைய காலத்தின் கவிதைகளுடன் ஒட்டாமல் இருப்பதை இங்கே முதலில் சாட்டுகிறேன்.இதே தொடரின் துவங்கு காலத்தில் வேறோரு முயல்வுக்காகக் கடந்த பதினைந்து ஆண்டுகாலத்தில் எழுதப்பட்ட பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்புக்களைக் கையிலெடுத்துப் பலதரம் வாசித்தேன்.மிக அதிகமான தொகுப்புகளை குறிப்பிட்ட காரணங்களுக்காக நிராகரிக்க வேண்டியிருந்தது.அந்தக் காரணங்களை ஒவ்வொன்றாக இதே தொடர் பத்தியில் அலசப்போகிறோம்.முதல் காரணம் ஒன்றைச் சொன்னால் அது கவிதைகளைப் பெரும்பாலும் செப்பனிடுவதே இல்லை என்று சொல்லலாம்.

            செப்பனிடுவது என்றதுமே குதித்துக் கொண்டு முன்வரும் அன்பர்களுக்குச் சின்ன வேண்டுகோள்.தயவு செய்து நான் பேசுகிற உள்ளடக்கத்தின் உள் உங்கள் வினாக்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

       கவிதை என்றாலே முப்பது நாற்பது வரிகள் எழுதியே ஆவது என்று ஒரு சாராரின் நம்பகம் இருக்கிறது.ஆறு ஏழு எட்டு வரிகளில் எழுதப்பட்ட கவிதைகளை மாத்திரம் தொகுத்தால் தமிழின் ஆகச்சிறந்த கவிஞர்களின் ஆகச்சிறந்த கவிதைகளின் தொகுப்பாக அது மலரும்.யாராவது செய்யட்டும்.

                                 எழுதப்பட்ட வரிகளைக் கலைத்துக் கலைத்துப் போடுவது.மொழியைப் பின்னுவதும் சுழல்வதுமான முயல்வுகள்,பெயர்ச்சொற்கள் நிகண்டுகளில் மட்டுமே காணக்கிடைக்கும் புழக்கத்தில் இல்லாத கடினச்சொற்கள் துறைவாரியாய்க் கிட்டுகிற கலைச்சொற்கள் ஆகியவற்றை சார்ந்து எழுதுவது இவை யாவையுமே உயிரின் தொடர்பில்லாத உறுப்புக்களை வைத்துக்கொண்டு மனுஷனை உருவாக்கப் பார்க்கிற செப்பிடு வித்தைக்காரனைப் போலச் செய்வது.இவை எதுவும் கவிதைக்கு உகந்ததல்ல.பலவீனமான முயல்வுகள் பல்லிளிப்பதைப் போலத்தான் கடினம் என்ற பிரயாசையுடன் வார்த்தைக்கூட்டங்களை வைத்துக்கொண்டு எழுதித் தள்ளி இதோ பார் என் கவிதை என்று தொடங்கும்போதே கவிதை என்று தொடங்கிக் கடைசி வரைக்கும் இது கவிதை தான்.ஒத்துக்கொள் என்று கழுத்தை நெரிக்கும் பல கவிதைகள் அயர்வுறச்செய்கின்றன.

                            செப்பனிடுவது ஒரு கலை.ஒரு கவிதை சொல்லப்பட்ட முறை அது நிகழ்ந்த விதம் அதன் வடிவம் அதனுள் இருக்கிற சொற்கள் என எல்லாமும் எல்லாமும் ஒருதடவைக்குப் பலதடவை வாசித்து சீரமைத்து மாற்றியெழுதி அடித்துத் திருத்தி அதன் பின் அதன் சிறப்பான வடிவம் ஒன்று கிட்டுவதுடன் முடிகிற நுட்பமான முன் தீர்மானம்.அது ஒரு கட்டிடத்துக்கான வரைபடம் போன்றது.கவிதை என்பதன் கார்ய நேர்த்தி அதனைச் செப்பனிடுவது.பெரும்பாலான நவ கவிஞர்கள் தத்தமது கவிதைகளைச் செப்பனிடுவதே இல்லை என்பது தான் வேதனை.

                     இது என் கவிதையாக்கும்.இதற்கு நான் மட்டுந்தானாக்கும் பெற்றவன்.இதனை எப்படிக் குறை சொல்லப் போயிற்று..?ஏன் திருத்த வேண்டும்..?நான் சொல்லி இருப்பது ஆகச்சிறந்த வடிவம் இல்லை என்றாலும் பரவாயில்லை.இது தான் என் கவிதை.இதனை ஏன் திருத்தி அமைக்கவேண்டும்..?எனக் கண்மூடித் தனமாகக் குற்றம் சொல்பவர்கள் பலரைச் சமீபத்திய ஆண்டுகளில் சந்தித்து வருகிறேன்.பெரும்பாலானவர்கள் சுயவலியாக சுயத்தில் பிறர் நேர்த்தும் அவமானமாகத் தங்கள் கவிதை மீதான செப்பனிடுதல் சார்ந்த சாட்டை கொள்வதைத் தொடர்ந்து கவனிக்கிறேன்.இல்லாவிட்டால் செப்பனிடுவதையே தங்கள் கவிதைகள் மீதான முதல் விமர்சனமாகக் கொள்பவர்களையும் பார்க்க முடிகிறது.அவர்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை.கவிதை என்பதன் விமர்சனம் வேறு.அதன் மீதான செப்பனிடுதல் வேறு.வேறெந்த கலைவடிவத்துக்கும் கவிதைக்குமான ஆதார வித்யாசம் ஒன்று இங்கே கவிதைக்குத் தலைவலியாக மாறுகிறதைக் கூர்ந்து நோக்கலாம்.

                   சிறுகதையோ அல்லது நாவலோ எழுதி முடித்ததும் எழுத்துப்பிழை மட்டும் பார்த்தால் போதுமாகிறது.அதே போன்ற எழுத்துப்பிழைகளை மட்டும் கவிதைகளை எழுதியவர்களும் புரிந்துகொண்டு அனுமதிக்கின்றனர்.வினோதம்.நாவலோ சிறுகதையோ முற்றுப்பெற்ற படைப்பாக வாசகனுக்குக் கிட்டுகிறது.அங்கே வடிவம் சார்ந்த சொலல் முறை சார்ந்த பெருங்குழப்பம் ஏதும் நேர்வதில்லை.ஆனால் கவிதை அவ்வாறல்ல.அது முடியாமுடிவாகவே ஒரு வாசகனுக்குள் நிகழ்கிறது.அதற்கு முந்தைய படைப்புகாலப் பிரயத்தனமாக வெறும் எழுத்துப்பிழை நீக்கம் மட்டும் போதுவதில்லை.இந்த நுட்பமான இருளினுள்ளே தான் கவிதையைச் செப்பனிடுதல் அவஸ்யமாகிறது.,கச்சிதம் என்ற வார்த்தைக்கு முன்னால் இருக்கக் கூடிய ஒழுங்கின் தேவை வேறு கவிதை என்பதே ஒழுங்கறுதல் தானே என்பதன் உள்ளே இருக்கும் ஒழுங்கு வேறு.இங்கே சொல்லப் படுவது கச்சிதம்.எப்படி ஒரு கவிஞரை இன்னொரு கவிஞருடன் ஒப்பிட இயலாதோ அதே போலத்தான் ஒரு கவிதையை இன்னொன்றுடன் ஒப்பிடவும் இயலாது. இங்கே எந்த ஒப்பிடலும் சுட்டப்பெறவில்லை. மாறாக ஒரு கவிதையின் செயல்தளத்தின் உயிர்ப்பாக அதனைச் செப்பனிடுதல் நேர்வது அவசியம்.

             நாலு வரியோ நாற்பது வரியோ எதை எழுதினாலும் அதைக் கவிதை என்று முன்வைத்துக்கொண்டு பிடிவாதம் பிடித்துக்கொண்டிருப்பது அராஜகம்.

ஒரு கவிதை சிறந்த ஒரு கருப்பொருளை ஒரு காட்சியை ஒரு இன்ப துன்ப சமானத்தை ஒரு காலத்தை ஒரு நிகழ்தலை ஒரு வெறுமையை ஒரு இயற்கையை ஒரு செயற்கையை ஒரு இதை ஒரு அதை ஒரு இன்னொன்றை இவை போன்ற சிலதை இவை போன்ற பலவற்றை மொத்தமாகவும் தனித்தனியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சேர்த்தும் பிரித்தும் சொல்லியும் சொல்ல முயன்றும் சொல்லாமலும் தொடங்கியும் முடிந்தும் முடியாமலும் தொடர்ந்தும் இன்னும் பலவாறும் விரிவதாக இருந்துவிடக் கூடும்.ஆனாலும் இவை எல்லாமும் ஒரு கவிதையின் ஆகச்சிறந்த கவிதையாய் நேர்கிறதா என்று கேட்டால்.............சிக்கலான கேள்விதான்.என்னளவில் பதினைந்து ஆண்டுகளில் வெளியாகிய பல கவிதைமுயல்வுகளில் எழுதுகிறவர்களின் அவசரத்தைப் பார்க்க முடிகிறதுநிறைய கவிதைகள் தட்டையாக சிக்கலாக பின்னிப்பின்னி சுழன்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.எப்படிச் செப்பனிடுவது தவிர்க்கப் படவேண்டியவை என்னென்ன என்பதை விரிவாக அடுத்த அத்தியாயங்களில் பார்க்கலாம்.

எனக்குப் பிடித்த கவிதை 

உயிர்

நான்கு நாட்களாக
கிழிபடாமல் இருக்கும்
நாட்காட்டியில் தொடங்கி
அறைக்கதவின் உட்பக்கத்தாழ் தொட்டு
சுழலாத மின்விசிறியின் 
உச்சிக்குச் சென்று
இறுகித் தொங்கும் நைலான் கயிற்றின் 
வழி கீழிறங்கிப் படரும்
தன் வாழ்விடத்தின் வாசலை
பின்னத்தொடங்குகிறது அச்சிலந்தி
பிதுங்கிய அவ்விழிகளின் மீது.

இதனை எழுதியவர் கணேசகுமாரன் புகைப்படங்கள் நிரம்பிய அறை என்னும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெறுகிறது.இந்தக் கவிதையின் சொல்லல் முறை வசீகரம்.ஒரு அவிழ்க்கப்பட்ட அதிர்ச்சியை அதிகரித்துக்கொண்டே செல்வது மகாகடினம். இதன் ஈற்று வரியை மட்டும் நீக்கி விட்டு வாசிக்கும் யார்க்கும் நன்றாய்ப் புரியும் இது ஒரு தற்கொலை செய்துகொண்டவனின் அறையை ஒருகணம் காட்சிப்படுத்த விழையும் கவிதை என்பது.அச்சிலந்தி என்பதோடு இக்கவிதை முடிந்திருந்தாலும் கூட தற்கொலை செய்துகொண்டவனின் அறை பற்றிய அந்தக் காட்சியை முழுவதுமாக தரிசனப்படுத்தி விடுகிறது என்றாலும் ஈற்று வரியான பிதுங்கிய அவ்விழிகளின் மீது என்பது வாசகனுக்குள் பெயர்க்கும் அதிர்வு உச்சபட்சம்.இக்கவிதையை மகா வீர்யமான ஒன்றாக மாற்றுவது இதன் ஈற்றுவரி.நான் வாசித்த தற்கொலை குறித்த கவிதைகளில் சிறப்பான ஒரு கவிதை இது.

தொடரலாம்.