ஓவிய வகுப்பில் பசுக்கள் - புக்காவஸ்கி (தமிழில் ஆர்.அபிலாஷ்)






நல்ல பருவகாலம்
நல்ல பெண்களைப் போல –
அது பெரும்பாலும் நிகழாது
நிகழ்கையில்
பெரும்பாலும்
நிலைக்காது.
ஆண் இன்னும் நிலையானவன்
மோசமானவன் என்றால்
அவன் அப்படியே இருக்க
வாய்ப்பதிகம்,
அல்லது நல்லவன் என்றால்
அப்படியே தொடரவும் கூடும்,
ஆனால் ஒரு பெண்ணோ
குழந்தைகளால்
வயதால்
உணவுப்பழக்கத்தால்
உரையாடலால்
உடலுறவால்
நிலவால்
வெயில்
அடிக்காமல் இருப்பதால்
அல்லது அடிப்பதால்
நல்ல வேளைகளால்
மாறுவாள்.
ஒரு பெண்ணை சீராட்டி தாலாட்டி
அன்பால்
நிலைக்க வைக்க வேண்டும்
ஆனால் ஒரு ஆணோ
வெறுக்கப்படுவதால்
மேலும் வலுவானவாய் ஆகிறான்.

இன்றிரவு ஸ்பேங்கிளர்ஸ் பாரில் குடித்துக் கொண்டிருக்கிறேன்
ஓவிய வகுப்பில் முன்பு நான் வரைந்த
பசுக்கள் நினைவுக்கு வருகின்றன
அவை பார்க்க நன்றாக இருந்தன
இங்குள்ள எதையும் விட நன்றாக
இருந்தன. ஸ்பேங்கிளர்ஸ் பாரில் குடித்துக் கொண்டிருக்கிறேன்
எதை நேசிக்க எதை வெறுக்க என வியந்தபடி,
ஆனால் விதிமுறைகள் இனி இல்லை:
என்னை மட்டுமே
நான் நேசிக்கவும் வெறுக்கவும் செய்கிறேன் –
அவை எனக்கு வெளியே நிற்கின்றன
மேசையில் இருந்து விழுந்து உருண்டு செல்லும்
ஒரு ஆரஞ்சைப் போல; நான் முடிவு செய்ய வேண்டியது
இது தான்:
என்னை கொல்லவா அல்லது
என்னை நேசிக்கவா?
எது துரோகம்?
தகவல் எங்கிருந்து
வருகிறது?


புத்தகங்கள் உடைந்த கண்ணாடித் துண்டுகள்:
என் குண்டியைக் கூட அவற்றால் வழிக்க மாட்டேன்
இருட்டிக் கொண்டு
வருகிறது, பார்?
(நாங்கள் இங்கு குடித்தபடி பேசிக்
கொள்கிறோம், பரஸ்பரம்
பரிச்சயமுள்ளவர்களாய் தெரிகிறது.)
ஆகப்பெரிய மடி கொண்ட பசுவை வாங்கு
ஆகப்பெரிய புட்டம் கொண்ட பசுவை வாங்கு.
துப்பாக்கியை தோளில் சாய்த்து சலூட் அடி.

மது ஊற்றுபவர் என்னை நோக்கி ஒரு பீர் புட்டியை உருட்டுகிறார்
அது ஒரு ஒலிம்பிக் குறுந்தொலைவு ஓட்டப்பந்தய வீரனைப் போல்
பாரில் ஓடுகிறது
என் கைகளாகிய ஒரு ஜோடி இடுக்கிகள்
அதை நிறுத்தி தூக்குகின்றன,
மந்தமான சபலத்தின் தங்க மூத்திரம்,
அதைக் குடித்து
அங்கே நிற்கிறேன்
பசுக்களுக்கு இந்த பருவச்சூழல் நல்லதல்ல
ஆனால்
அந்த பச்சை வைக்கோல் கண்ணை
தீற்ற
என் தூரிகை தயார்
துக்கத்தால் நிறைகிறேன்
பீரை ஒரே மூச்சில் குடிக்கிறேன்
இன்னொரு பெக்
சீக்கிரம் தரக் கேட்கிறேன்
மேலும் இதைத் தொடர்வதற்கான
துணிவும் அன்பும் பெற