தபால் வாங்க போவது பற்றி - சார்லஸ் புக்காவஸ்கி (தமிழில் ஆர்.அபிலாஷ்)







கூட்டங்கூட்டமாய் புழுக்கள்
ஸ்டிரிப் டீஸ் நடனநங்கைகளைப் போல் ஊர்ந்து சென்று
கரும்பறவைகளால் கற்பழிக்கப்படும்
ஒரு கிறுக்குத்தமான பகல்

வெளியே போகிறேன்
மேலும் கீழுமாய் தெருவில் அலைகிறேன்
முடிவுறாத ஒரு ஜூலை நான்கு பொல
பச்சை ராணுவங்கள் நிறத்தை வெடிக்கின்றன
உள்ளுக்குள் நானும் வீங்கும் உணர்வு,
இனம்புரியாத ஒரு வெடிப்பு, ஒருவேளை
எங்கும்
எதிரி என்றும் யாரும் இல்லையோ
எனும் ஒரு உணர்வு.

பெட்டிக்குள் ஆழத்தில் கைவிடுகிறேன்
அங்கு ஒன்றும் இல்லை
மீண்டும் மூடப் போகிறோம்
என கேஸ் நிறுவனத்திடம் இருந்து
ஒரு தபால் கூட
இல்லை

என் முன்னாள் மனைவியிடம் இருந்து
தனது தற்போதைய மகிழ்ச்சியை
பீற்றிக் கொள்ளும் ஒரு சிறுகுறிப்பு கூட
இல்லை.

மனம் ஏற்றுக் கொண்டு விட்டும்
நம்பாமல்
என் கை தேடுகிறது.
ஒரு செத்துப் போன பூச்சி
கூட இல்லை.
நானொரு முட்டாள், நினைத்துக் கொள்கிறேன்,
இது இப்பிடித் தான் ஆகும்
என முன்னரே தெரிந்திருக்க வேண்டாமா?

எல்லா மலர்களும்
என்னை அகமகிழ வைக்க தாவி எழ
உள்ளே போகிறேன்
 “என்ன வேணும்?”, அப்பெண்
கேட்கிறாள்.
ஒன்றுமில்லை, நான் சொல்கிறேன்,
காலைல என்ன சாப்டீங்க?