கோசின்ரா கவிதைகள்


1
எதிர்காலத்தின் வாளை உருவி
நிகழ்காலத்தை நேர்வகிடாய்
ஒரு வெட்டு
ஆயிரம் வருடங்களாய் நீண்டு
விடம் கக்கும்
பழைய அடையாளத்தின்
நடு முதுகில் ரத்தம்
பேதம் வஞ்சம் சூழ்ச்சி நெடி அடிக்கும்
அடையாளங்கள் கூக்குரலிடுகின்றன
அடையாளங்களுக்குள்ளிருக்கும்
அடையாளங்களின் அடையாளத்திற்குள்ளிருந்து
வெளியேறுகிறார்கள் மக்கள்
திரும்பவும் பழைய இடத்திற்கு
அடையாளங்களிலிருந்து
அடையாளமற்றதை நோக்கிய இடத்திற்கு..

2
உதடுகளும் முத்தங்களுமிருந்தன
போட்டு வைக்க
காதலை தேடினேன்
சுதந்திரமும் அடிமைத்தனமும் இருந்தன
பயிரிட்டு வளர்க்க
நாட்டை தேடினேன்
சொற்களும் காகிதங்களுமிருந்தன
கொண்டு வைக்க
கடிதத்தை தேடினேன்
இப்பொழுது என்னிடமிருப்பது
குளிர் காலத்தில்
கழற்றிவிடப்பட்ட பனிக்காற்று மட்டுமே
தலையை உடலுக்குள் புதைத்துக்கொண்டு
கவிதை எழுதினேன்
அது வெயிலை பற்றியிருந்தது.

3
திறந்து விடப்பட்ட
எனது தனிமையின் நிலத்தில்
பொம்மைகள்
சுயம் இழக்காத ஒரு கல்
காற்றின் குரலை குடித்து
பூமியையும் வானத்தையும்
நீரிழைகளால் தைக்கும்
மழையிடம் சொன்னது
நான் எறும்புகளின் மலை
எறும்புகளின் மலை மீது
ஏறி இறங்கும்
நூற்றாண்டுகளின் பழமைகள்
கல்லெறிந்து கொல்லும்
தேசத்திலிருந்து திரும்பிய
கல்லின் உடல் முழுவதும்
காயங்கள் அழுகை
கல் சொன்னது
வீசப்படும் போது நினைத்தேன்
நான் ஏன் பூவாக இருக்கவில்லை
ஒரு புல்லாக இருக்கவில்லை
எந்தக் கல் மீது ரத்தம் படிந்திருக்கிறதோ
அந்தக் கல்
மீண்டும் எறியப்படும்
எதிர் திசை நோக்கி
அப்பொழுது மீண்டும் பறப்பேன்
கழற்றி விடப்பட்ட கோபத்திலிருந்து
அது வரைக்கும்

நானும் ஒரு கல் பொம்மைதான்.