நாகபிரகாஷ் கவிதைகள்

குங்குமம்

வார்த்தைகள் கருக்கொள்ளும்
அர்த்தசாத்தியங்கள் அற்றுப்போன
ஒரு நாளில், மலைகளின் மீதூர்ந்த
காதலோடு பயணம் போயிருந்தேன்

அவையென்றும் தேவைகளை முன்நிருத்தும்,
தேடலைக் கொண்டிருக்கும்
வேடம்தரித்த பயணங்களாயிருக்கும்
அதன் அத்தனை சுமைகளையும்
தூக்கிச் சுமந்திருக்க
சுவாசிக்கக் கற்றிருத்தல் வேண்டும்

அவள் மங்கலங்களை
ஆங்காங்கே தூவிக்கொண்டிருந்தாள்
அவை உபாசகனுக்கு, உபாசிப்பவை
அதில் சிறுதுளி தருவாள்

நிபந்தனையின்பேரிலேயே காரியங்கள்
அத்தனை ஆசையோடு நெருங்கி
ஒரு குறியாக்கம் செய்த
வார்த்தையைத் தந்துபோனாள்

நினைவினை பெற்றேன்
இன்றைய நாள் துவங்கியதே
அவளோடு தான்.
-----
நிறுவுதல்

ஏதேனும் நம்பிக்கைகளில்
ஒளிந்திருக்க பார்த்து
அத்தனையும் கிடந்துச்சிறக்க
அவனுள்ளே புதிதானவற்றை
நிறுவச்செய்கின்றான்
இவ்வுலகு பெரியவர்களுக்கானது
அப்படியிருக்க விதிக்கப்படுவது
எல்லோருக்குமானதல்ல
எனவே, ஒரு தன்னை தனியறையில்
அடைத்திருக்க நிர்பந்தம்
என்றைக்கேனும் அது எட்டிப்பார்க்கையில்
அவன் தீண்டத்தகாகதவனாகிற சமூகம்
ஒரு அடையாளம் வேண்டியிருக்கிறது
முதலிடம் , முடிவிடம்.