கனவு - டி.என்.ஆர். ராகவேந்திரன்


சற்றுமுன்பிருந்த கொஞ்சநஞ்ச வெளிச்சத்தின் போதே
ஆடைகள் எங்களை விடுவித்திருந்தன
முழுமையின் உச்சந்தந்த மயக்கமா அல்லது
பற்றாமையின் அதிருப்தியா தெரியாது - அவள்
என்னிடத்திலிருந்து விலகி அறையின்
ஒரு பகுதி இருளை மட்டும் அணைத்துக்கொண்டாள்

நிசப்தம்
எங்குமிருள்
வியர்வையும் விந்துங்கூடியடிக்கும் நெடி மட்டுமே
எங்களின்  இருப்பை உறுதி செய்தது
எந்தத் திசையில் அவள்?
எப்படிப் படுத்திருக்கிறாள் அவள்?
மிச்சமிருக்கும் ஆண்மையையும் அவளுள் ஊற்றிட
அவளைத்தேடி பாம்பைப்போலக் கைகள் இருட்டில் அசைந்தன
தட்டுப்பட்ட இடத்திலிருந்து மேல்நோக்கி சென்ற விரல்களை
நெறிஞ்சிமுள்ளென அவளது அல்குல் ரோமங்கள் மென்மையாகக் குத்தின
குத்திய முள்ளினை நொறுக்கிட அழுத்தியபோது

 என் விரல்களைப்பற்றி
தலையை  சொறிந்து கொண்டிருந்தாள்
மகள்
அம்மா எங்கப்பா போய்ட்டாங்க?”
சாமிக்கிட்ட.”