சுப்ரா கவிதைகள்


நம்பிக்கை .

456
எட்டாவது குறுக்குத் தெரு
குறிஞ்சி நகர்
பலமுறை போய் வந்த முகவரிதான் .
வேகாத வெயிலில்
அலைந்து திரிகிறேன் .
திசைகள் மாறாவிடினும்
வீடு வந்து சேர வில்லை இன்னும் .
கேட்கப்படும் ஒவ்வொருவரிடமிருந்தும்
வெளிப்படுகின்றன
வெவ்வேறு விதமான வழிகாட்டுதல்கள் .
பசி மறந்து நடக்கின்றேன்
வழி தவறி விடக்கூடாதேயென்ற
பதட்டத்துடன் .
தெரிந்த அடையாளங்கள்
தேய்ந்து போயிருந்தன .
காலத்தின் ஓட்டத்தில்
நகரம் மாறித்தான் இருக்கிறது .
கதவிலக்கம் மாறியிருக்கலாம் ;
தெருப் பெயரும் மாறியிருக்கலாம் ;
குறிஞ்சி நகர் கூட வேறொரு
நகராக மாறியிருக்கலாம் .
தளராது நடக்கிறேன்
நண்பன் மாறியிருக்க மாட்டான்
நட்பும் மாறியிருக்காதென்ற
அசைக்க முடியா நம்பிக்கையோடு .

2  சாத்தியங்கள் .

இப்படியும் எழுத இயலும் எனக்கு
இப்படியுமெழுத இயலுமெனக்கு
எனக்கு இப்படியும் எழுத இயலும்
எனக்கிப்படியும் எழுதவியலும்
எழுத இயலும் எனக்கு இப்படியும்
எழுதவியலும் எனக்கிப்படியும்
எழுத எனக்கு இயலும் இப்படியும்
எழுதவெனக்கு இயலுமிப்படியும்
எப்படி எழுதினாலும்
அவரவர் கவிதை
அவரவருக்குரியதாகவே இருக்கிறது .

3  இழப்புகள் .

சென்ற வேகத்தில்
நின்று கவனிக்காமல் போன
வழியோரத் தும்பைப் பூக்களும்
பக்கத்துத் தெரு
கடைசி வீட்டின் பல வண்ண
செம்பருத்தி மலர்களும்
வீடு திரும்பி தளர்ந்து சாய்ந்த கணத்தில்
மனதிற்குள் பூத்துக் குலுங்கிய போதுதான்
உணர்ந்து கொண்டேன்
இழந்து விட்டோமென்று நினைக்குமெதுவும்
இழக்கப்படுவதில்லை
வாழ்வில் என்ற உண்மையை .