தமிழ்த் திரையிசைப் பாடல்களில் கவித்துவம் (2) – ஆர்.அபிலாஷ்

 வைரமுத்து

Image result for வைரமுத்து

கண்ணதாசனுக்கு பிறகு தோன்றியவர்களில் மிக வளமான கற்பனையும் மரபுடன் ஆழமான தொடர்பும் கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து தான். “வானம்பாடி” இயக்க கவிஞர்களிலும் கட்டற்ற கற்பனை வளம் கொண்ட ஒரே எழுத்தாளர் அவர் தான். அதனாலே இன்றும் மு.மேத்தா, தமிழன்பன் ஆகியோரின் கவிதைகளை வைரமுத்துவின் வரிகள் அருகே வைத்துப் பார்கையில் அவை ஒளியிழந்து வயதான நடிகையின் சருமம் போல் தோன்றுகின்றன.
 பா.விஜய், ந.முத்துக்குமார் போன்றோருக்கு ஒரு தனியான கவி ஆளுமை இல்லை. அதனால் அவர்கள் எழுதுபவை மெட்டுக்குக்கான வெற்று வரிகள் மட்டுமே. ஆனால் கபிலன், கார்த்திக் நேத்தா, உமாதேவி போன்றோர் இன்றும் கவி ஆளுமையுடன் பாடல் எழுதுகிறவர்கள். இருசாராருக்கும் உள்ள வித்தியாசம் இது. கவி ஆளுமை கொண்டவர்கள் தம் கவிதைகளின் உலகை கொஞ்சம் கொஞ்சமாய் பெயர்த்து மெட்டுக்கு ஒத்திசையும் தம் பாடல் வரிகளில் குடி வைக்கிறார்கள். ஒவ்வொரு பாடலின் சில வரிகளிலும் அவர்களின் தனித்துவமான பார்வை, மனரேகையின் தடம், சொற்களின் வாசனை இருக்கும். இதை பா.விஜய், ந.முத்துக்குமாரிடம் பார்க்க இயலாது. தனுஷ், சிம்பு, கமலஹாசன் எழுதும் பாடல்களிலும் இருக்காது. அவர்கள் ஜெராக்ஸ் மிஷின்கள். கவிஞர்கள் அல்ல.
வைரமுத்துவின் ஒவ்வொரு வரியிலும் அவரது தனித்துவமான வண்ணம் மிளிரும். அவரது மன அமைப்பின், சிந்தனைகளின், நம்பிக்கைகளின் நீட்சியாக அவ்வரிகள் இருக்கும். “இது ஒரு பொன்மாலைப் பொழுதிலேயே” இது ஆரம்பிக்கிறது. அவரது “அந்தி” எனும் கவிதையின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட வடிவம் அப்பாடல். “வானம் எனக்கொரு போதி மரம்” எனும் வரி அவரது வாழ்க்கை சித்தாந்தம். இயற்கையை உற்று கவனித்தால் வாழ்க்கை வசப்படும் எனும் கற்பனாவாத நம்பிக்கை இது.
 கற்பனாவாதத்தை ஆங்கிலத்தில் Romanticism என்கிறார்கள். பதினெட்டாவது நூற்றாண்டில் இறுதியில் துவங்கி பத்தொன்பதாவது நூற்றாண்டின் முதல் பாதி வரை இங்கிலாந்தை ஆட்சி செய்த கவிதை இயக்கம் கற்பனாவாதம். வெர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், பைரன், காலரிட்ஜ் ஆகியோர் இந்த இயக்கத்தின் பிதாமகர்கள் மற்றும் உபதளபதிகள். இந்த இயக்கம் தான் பிற்பாடு தமிழகத்தில் அறுபது எழுதுபதுகளில் “வானம்பாடி” இயக்கம் எனும் பெயரில் இடதுசாரி சிந்தனைகள், சங்க இலக்கிய, தமிழ் தேசிய தாக்கங்களுடன் உருப்பெற்று தோன்றுகிறது. “வானம்பாடி” இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகள் இயற்கை ஆராதனையும் சுயத்தை உலகின் மையமாக வைத்து வாழ்க்கையை புரிந்து கொள்ளும் பார்வையும்.
 “வானம் எனக்கொரு போதி மரம்” வரியையே எடுத்துக் கொள்வோம். உலகை அறிவதற்கான பார்வையை வைரமுத்து தான் வெளியில் இருந்து, அதாவது புத்தகம், ஞானிகளின் உரைகள், மரபு ஆகியவற்றில் இருந்து பெறுவதாய் கூறவில்லை. இயற்கையில் இருந்து ஞானோபதேசமாய் பெற்றதாய் கூறுகிறார். அது தான் சரியான அறிதல் என அவருக்கு எப்படித் தெரியும்? இங்கு தான் அகயவயவாதம் (subjectivism) உருவெடுக்கிறது. என் அகத்துக்கும் இயற்கைக்கும் ஒரு நூதனமான, அந்தரங்கமான உரையாடல் நடக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே பரிமாறப்படும் உண்மைகளை வாசகனுக்கு எடுத்துரைக்கிறேன் என்கிறார். இதன் சரித்தன்மையை அதை நேரடியாக இயற்கையிடம் இருந்து பெறும் வைரமுத்து மட்டும் தான் உறுதிப்படுத்த முடியும். ஆக வைரமுத்துவின் அறிதலுக்கு அவர் மட்டுமே பொறுப்பு. அவர் தன்னை கர்த்தர், முகமது நபி போன்ற தீர்க்கதரிசிகளுக்கு இணையாக நினைக்கிறார். இந்த மிதமிஞ்சிய ஈகோயிசம் வானம்பாடி கவிதையின் ஆதார தொனி. வானம்பாடி கவிதை படிக்கும் போது உங்கள் காதுக்குள் “நான் நான் நான்” எனக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
தன்னை அடிப்படையாக வைத்து உலகை கண்டறிவதற்கு “வானம்பாடி” கவிஞனுக்கு உள்ள கருவி அவனது கற்பனை. சாதாரண கற்பனை அல்ல. மிதமிஞ்சிய, நுரைத்து பீறிட்டு கிளம்பும் கற்பனை. அதனால் கவிதையை மு.மேத்தா ”உலகை புரட்டிப் போடும் நெம்புகோல்” என்கிறார். “கடலுக்குண்டு கற்பனைக்கு இல்லை கட்டுப்ப்பாடு, என் தாய் கொடுத்த தமிழுக்கு இல்லை தட்டுப்பாடு” என்கிறார் வைரமுத்து.
தன் கவிதையால் உலகை புரட்டிப் போடலாம் என நம்புவதற்கு ஒரு சாதாரண கண்ணாடியும் ஜுப்பாவும் அணிந்த பேராசிரியரான அக்கவிஞனுக்கு எப்படியான அகந்தை வேண்டும் யோசியுங்கள். நவீன கவிஞன் “நான் இந்த உலகில் ஒரு சாதாரண ஆள். எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை” என நினைத்தால் “வானம்பாடி” கவிஞன் “நானே உலகம், நான் திரும்பினால் உலகமும் கூடத் திரும்பும்” என திமிறுவான்.
நவீன கவிஞனைப் போல் “வானம்பாடி” கவிஞன் தன் அறிவார்ந்த, உளவியல் அவதானிப்புகள் மூலம் வாழ்க்கையை மதிப்பிட முயல மாட்டான். பூடகமான குறியீடு, படிமம் மூலம் தத்துவார்த்தமான வாழ்க்கைப் பார்வையை சித்தரிக்க முயல மாட்டான். அவன் தன் கற்பனையை மட்டும் கொண்டு வாழ்க்கையின் அத்தனை சிக்கல்களும் பதில் காண முடியும் என கிட்டத்தட்ட துடுக்குத்தனமாகவே நம்புவான். வைரமுத்துவின் இந்த வரிகளில் வருவது போல்:
“இனி கண்ணீர் வேண்டாம்
ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள்
கேட்டுக் காதல் செய்க
நம் விண்ணுக்கும் மண்ணுக்கும்
 பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால்
 நன்மை செய்க” (மெட்டுப் போடு, “டூயட்”)
ஒரு கவிதை எழுதினால் எப்படி வாழ்க்கையின் கண்ணீர் தீரும்? வாழ்க்கை அவ்வளவு எளிதானதா என்ன? ஆனால் “வானம்பாடி” கவிஞன் அப்படித் தான் நம்புவான். தன் கவித்துவ சொற்கள் வாழ்க்கையின் பாவங்களை, துக்கங்களை அலம்பி சுத்தம் செய்யும் என கோருவான். ஒரு மிதமிஞ்சிய ஈகோவில் இருந்து, பகல் கனவின் இறுமாப்பில் இருந்து அவனுக்கு இந்த நம்பிக்கை வருகிறது.
 ஆங்கில ரொமாண்டிக் கவிஞனான வெர்ட்ஸ்வொர்த் தன்னுடைய Tintern Abbey கவிதையில் இயற்கையை நுணுகி பார்க்க நேர்ந்த தருணத்தை கடவுளை அறிந்த சந்தர்ப்பமாக சித்தரிக்கிறார். ஒரு குழந்தையாய் இருக்கையில் மனிதன் இயற்கையிடம் மிக நெருக்கமாய் இருக்கிறான். களங்கமற்று உலகை தரிசிக்கிறான். ஆனால் பின்னர் வளர வளர அறிவும், லௌகீக அனுபவமும் அவனை களங்கம் கொள்ள செய்கின்றன. அவன் மீண்டும் குழந்தையானால் மட்டுமே புனிதமாக மாறி நிம்மதி கொள்ள முடியும். அதற்கு அவன் இயற்கையிடம் திரும்ப வேண்டும். அறிவையும் பிரக்ஞையையும் துறந்து தன் கற்பனையை மட்டும் துணையாகக் கொண்டு வாழ்க்கையுடன் ஒன்றிப் போக வேண்டும் என்கிறார். இதைத் தான் வைரமுத்து வேறு சொற்களில் “இது ஒரு பொன்மாலைப் பொழுதில்” சொல்கிறார். அது ஒரு சாதாரண பாடல் அல்ல. “வானம்பாடி” கவிதை இயக்க சித்தாந்ததின் பிரகடனம். வைரமுத்து எனும் கவிஞனின் அகச்சித்திரம். ஒரு எழுத்தாளனாக அவரது curriculum vitae.
வைரமுத்துவின் பாடல்களில் சில வரிகளில் ஒரு நல்ல கவிதைக்கான அற்புதமான திறப்பு இருக்கும். ஆனால் அதை ஒரு முழுமையான வானம்பாடி பாணி கவிதையாக வளர்த்தெடுக்காமல் இருக்க கவனம் காட்டுவார். சட்டென பாடல் வணித்தன்மையும் சிலுசிலுப்பும் கொண்டு அடர்த்தியை இழந்து ஒரு சாதாரண ரசனைப் பாடலாக மாறும். இதை அவர் வணிக வரவேற்புக்காக வேண்டுமென்றே செய்கிறார் என்பது வெளிப்படை.
 அவரது பாடல்களில் அவர் உருவாக்கும் இந்த திறப்புகளிலேயே குறிப்பிடத்தக்கவை ஏராளம். இத்தொடரின் எதிர்கால அத்தியாயங்களில் ஒரு சிலவற்றையாவது வைரமுத்துவுக்காக ஒதுக்கினால் மட்டுமே அவரது கவி ஆளுமைக்கு நாம் ஓரளவாவது நியாயம் செய்ய முடியும். இப்போதைக்கு “ஜெண்டில்மேன்” படத்தில் வரும் “என் வீட்டுத் தோட்டத்தில்” எனும் பாடலின் கவித்துவமான இடங்களைப் பற்றி மட்டும் பேசி இந்த அத்தியாயத்தை முடிப்போம். தமிழின் சிறந்த திரைப்பாடல்களில் ஒன்று அது.
“என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்
உன் பெயர் சொல்லுமே”
காதலிக்கும் போது “பாலும் கசந்ததடி படுக்கை நொந்ததடி” எனும் முரண் உணர்வுக்ள் ஏற்படுவது, பார்க்கும் இடமெங்கும் காதலிப்பதவரின் முகம் தோன்றுவது ஆகியவை காதல் சூழலுக்கான தேய்வழக்கு பிரயோகங்கள். இவை வராத சினிமாவே இல்லை எனலாம். ஆனால் காதலில் இருப்பவர்கள் தாராளமாக பாலுண்டு படுக்கையில் தூங்குவார்கள். ரோட்டில் போகிற கிழவியை பார்த்தால் கிழவியாகத் தான் தோன்றும், காதலியின் உருவம் அங்கு தோன்றாது. ஆனால் மற்றொரு லயிப்பு உணர்வு எப்போதும் இருக்கும். ஏக்கத்தின் கசப்பும் தவிப்பும் எப்போதும் மனதை ஆக்கிரமிக்கும். இன்னும் நுணுக்கமாக பார்த்தால் இந்த உலகமே நாம் தான் எனத் தோன்றும். “நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம்” எனது பல வடிவங்கள் தானா என கேட்க தோன்றும். அது ஒரு விதத்தில் உண்மையும் தான். எப்படி?
ஒரு பனியில் துலங்கின ரோஜாவைப் பார்த்தால் ஏன் அழகு என தோன்றுகிறது? அதன் பளீரென்ற சிவப்பு நிறம், மிருதுவான இதழ்கள், தண்ணென்ற உணர்வு, வாசம் இவையாவும் உங்கள் ரசனையின் பகுதி. உங்கள் ரசனையை பூவில் பார்ப்பதனால் தான் பூ அழகு. பூவில் இந்த குணங்கள் இருப்பதால் நீங்கள் அதை ரசிக்க வில்லை. ஏன் பூவுக்கு கீழே முள்ளும், பூனை மயிர்கள் அரும்பிய தண்டும் தான் இருக்கும். அவை ஏன் உங்களை ஈர்க்கவில்லை. ரோட்டோரம் காய்ந்து கிடக்கும் மலத்துண்டு ஏன் ரசனையை தூண்டவில்லை? பூ இந்த உலகம் பற்றின உங்கள் அழகிய பார்வையின் ஒரு வெளிப்புற வடிவம். அந்த பூ உங்கள் மனதின் ம்ற்றொரு வடிவம். உங்களுடைய மாற்று மனம். அது நீங்களே தான்.
இப்போது காதல் மனநிலைக்கு மீண்டும் வருவோம். காதலிக்கும் போது பூ மட்டுமல்ல நாம் அதுவரை ரசிக்காத பல பொருட்கள் மீது ஒரு லயிப்பு ஈர்ப்பு தோன்றும். ஜில்லென்ற மண்தரை, காற்றில் அலைந்து நெளியும் ஜன்னல் திரை, நீரின் சப்தம், ஒரு பாத்திரம் விழுந்து உருளுகிற ஒலி கூட உங்களுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தும். யாரோ ஒரு குழந்தையை கையில் ஏந்தி நடப்பது பார்த்தால் மனம் நெகிழும். துள்ளல் நடையும் தொங்கும் காதுகளும் மிளிரும் கண்களுமாய் ஓடி வரும் நாய்க்குட்டி பார்த்தால் எடுத்து தடவத் தோன்றும். சாலையோரம் நிற்கும் செடிகளின் தழைகளை வருடிக் கொண்டு நடக்க பிடிக்கும். இந்த உணர்வு காதலியின் மீதுள்ள ஆசையும் அன்பும் ஏற்படுத்துகிற மனநிலையின் நீட்சி அல்ல. இது வேறு.
 காதல் நமக்குள் இந்த பிரபஞ்சம் மொத்தத்தை நேசிக்கும் மனநிலையை சட்டென ஏற்படுத்துகிறது. வீடு, வீட்டிலுள்ள பொருட்கள், வீட்டுக்கு வெளியே உள்ள இயற்கை, ஆகாயம் எல்லாமே உங்களின் மற்றொரு பகுதி என தோன்றும். அவை உங்கள் மனதின் தூல வடிவங்கள் என நம்புவீர்கள். ஒவ்வொன்றையாய் தொட்டுப் பார்த்து “இது நான் இது நான்” என சொல்லத் தோன்றும்.
சொல்லப் போனால், உள்ளொடுங்கி இருக்கிற ஆட்கள் கூட காதலிக்க தொடங்கினால் வெளியுலகை நேசிக்க தொடங்குவர்கள். அறையில் முடங்கிக் கிடக்காமல் திறந்த வெளியில் மனிதர்கள், ஜீவராசிகள் மத்தியில் திறந்த மனதோடு திரிய விரும்புவார்கள். முட்டையை உடைத்து வெளியே வருகிற குஞ்சு “அட நம் உலகம் இவ்வளவு பெரிதாக வெளியே இருக்கிறதா?” என வியப்பது போல் நெகிழ்வீர்கள். இந்த உன்னதமான ஜென் நிலைக்குள் நம்மை கொண்டு போவது தான் காதலின் சிறப்பு. அதனால் தான் வானம்பாடி கவிதை நம்மை மீண்டும் மீண்டும் காதலிக்க தூண்டுகிறது. காதலிக்கும் போது மனிதன் தாயுமானவரைப் போல் இயற்கையை தன்னுடைய ஒரு உறுப்பாக எண்ணி தோய்ந்து உருக கற்கிறான். ஒரு சங்கக் கவிதையில் புன்னை மர நிழலில் தலைவியுடன் முயங்க எத்தனிக்கும் தலைவனை நோக்கி அவள் கூறுகிறாள்:
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிதுவளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வைஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே… ” (நற்றிணை 172)
 அதாவது இந்த புன்னை மரத்தை என் தமக்கை என்று கூறித் தான் என் அம்மா வளர்த்தாள். நானும் அதை அப்படித் தான் கருதுகிறேன். இப்போது என் தமக்கை அருகே வைத்து என்னை நீ அணைப்பது வெகுவாக கூச்சத்தை ஏற்படுத்துகிறது என்கிறாள். விளையாட்டுத்தனமாய் அவள் இவ்வாறு கூறுவதாயும் பார்க்கலாம். ஒருவேளை தலைவனின் துடுக்குத்தனத்தை கேலி பண்ண, அவனை சீண்ட என பல காரணங்களுக்காக அவள் கூறி இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அந்த மரத்தை தன் உறவாக, தன் வாழ்வின் ஒரு பகுதியாக பார்க்கிற மனநிலை முக்கியமானது. இம்மனநிலை இன்று நம் பண்பாட்டில் இல்லை. ஆனால் இன்றும் காதலிக்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன் வீட்டுத் தோட்டத்து மரத்தை தன் உறவாக, தன் உடலின் உறுப்பாக தான் காண்பார்கள். இந்த நற்றிணைப் பாடல் அந்த அபூர்வமான ஜென் மனநிலையைத் தான் சித்தரிக்கிறது. தன்னை ஒரு மரத்தில், மண்ணில், கற்களில் பிரதிபலித்து உணர்கிற ஒரு பெண்ணின் காதலை அறிய அவளிடம் கேட்க வேண்டியதில்லை. அவள் வீட்டுத் தோட்டத்து பூவைத் தீண்டினால் நீ அவளைத் தான் தீண்டுகிறாய். அவள் வீட்டு ஜன்னல் கம்பியில் கை வைத்தால் அவள் தோளைத் தொடுகிறாய். காற்றில் கைகளை விரித்து அளைந்து நிற்கும் தென்னங்கீற்றின் ஒவ்வொரு விரல் நுனியிடம் கேட்டாலும் அது அக்காதலை சொல்லும். அகமே புறமாக மாறுகிற காதல் மனநிலையை வேறு எந்த கவிஞனும் தமிழ்ப்பாடல்களில் பதிவு செய்ததில்லை.
”சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத் தானே வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே”
 இது கொஞ்சம் நவீன கவிதை போல் தொனிக்கும் உவமை. சொல்லுக்கும் அதன் பொருளுக்குமான உறவை ஒரு உணர்வுக்கும் அதன் வெளிப்பாட்டுக்கும் பொருத்துகிறது. ஒரு சொல்லுக்கு ஒரு அர்த்தம் உண்டு என நம்புகிறோம். ஆனால் எந்த அர்த்தமும் அச்சொல்லுக்கானது அல்ல. பயன்பாட்டின் போது ஒரு சொல்லின் பொருள் முற்றிலும் மாறி வேறொன்றாக ஆகலாம். ஆக சொற்களுக்கும் பொருளுக்குமான உறவு தற்காலிகமானது, செயற்கையானது என்கிறது நவீன மொழியியல் கோட்பாடு. அடிப்படையில் சொற்கள் அர்த்தத்தை கொன்று விடுகின்றன. “எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்” என ஒரு பெண்ணைப் பார்த்து மிகுந்த மன உத்வேகத்துடன் சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த அடுத்த நொடி “நாம் நினைத்ததை சொல்லவில்லையோ?” எனத் தோன்றும். இன்னும் வேறேதேனும் சொற்கள், உவமைகள் கொண்டு சொல்லி இருக்க வேண்டுமோ என வியப்பீர்கள். அதனால் தன் குழந்தைகளை கொஞ்சும் போது வெற்று ஒலிகள், குதப்பல் சத்தங்கள், நாமே உருவாக்கும் அர்த்தமற்ற செல்லப் பெயர்கள் தரும் திருப்தியை வழமையான சொற்கள் தராது.

ஆத்மார்த்தமான எந்த உணர்வையும் நம் மொழியால் வெளிப்படுத்த முடியாது. சொல்லி முடித்த அடுத்த நொடி சொன்னதன் பொருள் செத்து விடும். அதனால் தான் காதலர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். எந்த நோக்கும் அற்று பொருளும் அற்று ஏதேதோ கதைத்தபடி இருப்பார்கள். எவ்வளவு பேசினாலும் போதாது. ஏனென்றால் எவ்வளவு பேசினாலும் தாம் உணரும் காதலின் சிறிதளவு கூட வெளிப்படுத்திய திருப்தி இராது. அதனால் தான் இப்பாடலில் வரும் காதலி “சொல்லுக்கும் தெரியாமல் சொல்ல” முயல்கிறாள். ஆனால் ஒரு சொல்லுக்குள் இருந்து உண்மையான பொருள் வெளிப்பட முடியாமல் தவிப்பது போல் அவளும் தன் உணர்வை சொல்ல முடியாது தவிக்கிறாள். ஏனென்றால் சொன்ன மறுநொடி தான் நினைத்தது அதுவல்ல என அவளுக்கு தோன்றித் விடும்.