ஆசிரியர் பக்கம்



 ஏன் யாரும் கவிதைத் தொகுப்புகள் வாங்குவதில்லை? - ஆர்.அபிலாஷ்

பதிப்பகங்கள் பற்றி முருகேச பாண்டியன் பெப்ரவரி மாத உயிர்மையில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருக்கு எதிர்வினையாக வா.மணிகண்டனும் ஒரு கட்டுரையை தன் வலைதளத்தில் எழுதி உள்ளார். இருவரும் ஏன் கவிதைகள் இங்கு பரவலாக படிக்கப்படுவதில்லை, ஏன் கவிதைத் தொகுப்புகள் விற்பதில்லை எனும் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்கள்.

வா.மணிகண்டன் இரு காரணங்கள் சொல்கிறார். ஒன்று, இங்கு ஆயிரணக்கான கவிஞர்கள் உள்ளார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு தொகுப்பை பரஸ்பரம் வாங்கினாலே தொகுப்புகள் தாராளமாய் விற்குமே? ஏன் வாங்குவதில்லை? கவிஞர்கள் சககவிஞர்களின் படைப்புகளைப் படிப்பதில்லை என்கிறார். இது சற்றே குழப்பமான வாதம். ஒருவர் கவிஞராக இருந்தாலும் ஒரு புத்தகத்தை வாங்கும் போது வாசகர் தான், கவிஞர் அல்ல. ஒரு கவிஞர் கவிதைத் தொகுப்புகள் தான் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் நாவல்கள் வாங்குபவராக இருக்கலாம். கட்டுரைகளில் ஆர்வம் கொண்டவராக இருக்கலாம். சொல்லப் போனால் ஒருவர் கவிஞராக இருக்கும் பட்சத்தில் கவிதைகள் மட்டுமே வாங்கி வாசிப்பது ஒரு மோசமான பழக்கம். வெறும் கவிதை மட்டுமே வாசித்தால் நம் எழுத்து தேய்வழக்காகி விடும். எழுத்தை புதுப்பிக்க பல துறை சார்ந்த கட்டுரைகள், கதை, நாவல் ஆகியன நிச்சயம் உதவலாம். ஏன் செய்திக் கட்டுரை கூட நல்ல கவிதைக்கு தூண்டுதல் அளிக்கலாம். மனுஷ்யபுத்திரன் செய்திகளைக் கொண்டு பல அற்புதமான கவிதைகளை எழுதி இருக்கிறார். யுவனிடம் அறிவியல் கட்டுரைகளின் தாக்கத்தை, தேவதச்சனிடம் ஜென் தத்துவம் தரும் புது வெளிச்சத்தை காணலாம். நான் எந்த புத்தகக் கண்காட்சி என்றாலும் கவிதைத் தொகுப்புகளை தேடி வாங்குவேன். ஒருமுறை வா.மணிகண்டனுடன் புத்தகக் கண்காட்சியில் சுற்றும் போது அவர் தான் எந்த புது கவிதைத் தொகுப்பை பார்த்தாலும் வாங்கி விடுவதாய் சொன்னார். அவர் அவ்வருடம் நிறைய தொகுப்புகள் வாங்கினதாய் நினைவு. ஆனால் நான் ரொம்ப கராறாய் இருப்பேன். ஒரு இருபது கவிதைத் தொகுப்புகளை எடுத்துக் கொண்டு ஸ்டாலிலேயே அமர்ந்து பொறுமையாய் படித்து தேர்ந்தெடுத்து தான் வாங்குவேன். இதற்காய் இரண்டு மணிநேரங்கள் கூட செலவிடுவேன். இவ்வாறு தொகுப்புகள் வாங்குவதில் ஆளாளுக்கு அணுகுமுறை மாறும். என்னைப் பொறுத்தவரை புத்தகம் வாங்குவது முழுக்க முழுக்க அந்தரங்கமான தேர்வு. அது சமூக சேவையோ கருணை அடிப்படையிலான தேர்வோ அல்ல. எனது மிக நெருக்கமான நண்பர் என்றாலும் கூட பிடிக்கவில்லை என்றால் அவரது தொகுப்பை வாங்க மாட்டேன்.

இவ்வாறு வாங்குவது வாசகனின் உரிமை. எந்த எழுத்தாளனும் கடைக்குள் நுழைந்தால் எழுத்தாள அடையாளத்தை இழந்து வாசகனாகி விடுவான். அதனால் கவிஞர்கள் பரஸ்பரம் தொகுப்புகளை வாங்க எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

இரண்டாவது காரணத்துக்கு வருவோம். கவிதைகள் சரியாக முன்னெடுக்கப்படுவதில்லை; அதற்கு காரணம் விமர்சனங்கள் மேலும் மேலும் கவிதையை புரியாத ஒன்றாய் மாற்றுகின்றன என்கிறார் மணிகண்டன். இது முழுக்க உண்மையே. விமர்சனங்கள் ஒன்று ஒரு கருத்தியலை கவிதை மீது திணிப்பதாகவோ, அரூபமான மொழியில் கவிதையை விமர்சிக்கிறேன் என களத்தில் குதித்து குட்டையை குழப்புவதாக உள்ளன. கவிதை அடிப்படையில் மனித மனம், சமூக, அரசியல் வாழ்க்கை பற்றி ஒரு புதுப்பார்வையை தருகின்றன. ஆழமான ஆன்மீக தளம் கொண்ட கவிதைகளும் உண்டு. ஆனால் அவை மிக அரிது. கவிதை விமர்சகனின் வேலை இந்த பார்வையை வாசகனுக்கு கடத்தி விடுவது. முடிந்தவரை இதை எளிதாக செய்ய வேண்டும்.
 மற்றொன்று: கவிதை ஒரு புதிரைப் போன்றதும் தான். கவிதை வாசிப்பதன் சுகம் ஒரு புதிரை அவிழ்க்கும் கிளர்ச்சிக்கு இணையானது. கவிதையை அவிழ்ப்பது புணர்ச்சிக்கு முன் ஒரு பெண்ணின் ஆடையை அவிழ்ப்பதைப் போன்றது. இதை எப்படி செய்வது என கற்க வேண்டும். கற்றுக் கொண்டால் கவிதை நாவல், கட்டுரை நூல்களை விட பல மடங்கு சுகமும் திருப்தியும் தரும். வாசகர்களில் மிக உன்னதமானவன் கவிதை வாசகன். அந்நிலையை அடைய பயிற்சி வேண்டும். விமர்சனங்கள் வாசிப்பதும், கவிதை பற்றின நுணுக்கமான உரையாடல்களை கவனிப்பதும் உதவும். எனக்கு சிறுவயது முதலே முதிர்ந்த வாசகர்களின் பரிச்சயம் கிடைத்தது. அவர்களுடனான உரையாடல் கவிதையை எப்படி ஒரு தாமரை மொட்டைப் போல் திறப்பது என கற்றுத் தந்தது. கவிதை குறித்த ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரைகள், மனுஷ்யபுத்திரனுடனான உரையாடல்கள் பெரிதும் உதவின. கல்லூரியில் ஐந்து வருட ஆங்கில இலக்கிய படிப்பின் போது அறிமுகமான பரவலான கவிதைகள், கோட்பாடுகள், இலக்கிய வரலாறு ஆகியவை கவிதையின் போக்குகளை தொகுத்துக் கொள்ள உதவின.
ஆனாலும் நான் நவீன கவிதை படிக்க ஆரம்பித்து ஏழு வருடங்களுக்கு பின்பு தான் வாசிப்பது சுலபமாயிற்று. அத்திறப்பு சட்டென ஒருநாள் நிகழ்ந்தது. அதற்கு பின்னால் எனது கடுமையான பிரயத்தனமும் பித்தும் இருந்தது. கவிதையை அறிவது என்பது ஒரு பெண் எதோ ஒரு கணத்தில் நம் மீது மையல் கொள்வது போலத் தான். அந்த கணம் ஏன் எப்போது நிகழ்கிறது எனத் தெரியாது. அது சுலபமும் அல்ல. ஆனால் நிச்சயம் நிகழும். காதலும் தொடர்முயற்சியும் இருந்தால்.

முருகேச பாண்டியன் இதே பிரச்சனையை எழுதுபவனின் பக்கம் இருந்து பார்க்கிறார். அதாவது, கவிதை புரியாதது வாசகனின் குறைபாடல்ல; மோசமான கவிதைகள் தான் இதற்கு காரணம் என்கிறார். மோசமான கவிதை என்றால் வீரியமற்ற செயற்கையான தட்டையான கவிதைகள். இத்தகைய கவிதைகள் வாசகனை துர்நாற்றம் வீசும் ஒரு வாயைப் போல் துரத்தி விடுகின்றன. என்னால் முருகேச பாண்டியனின் கருத்துடன் முழுக்க உடன்பட முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் தோன்றின சிறந்த இளங்கவிஞர்கள் பத்துக்கும் மேற்பட்டவர்களை என்னால் பட்டியலிட முடியும். தமிழ் கவிதைக்கு வளமான மொழி. இங்கு நல்ல கவிஞர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை யுவன், தேவதேவன், தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் போல் தனித்துவமான குரல்கள் உருவாகாமல் இருக்கலாம். ஆனால் இத்தகைய கவிஞர்கள் கடுமையான கலாச்சார அழுதத்தின் விளைவாகத் தான் தோன்றுகிறார்கள். அவ்வளவு தீவிரமான, யாகசாலை போல எரிந்து கனலும் ஒரு வாசிப்பு, விவாதச் சூழல் இங்கு இப்போது இல்லை. இதைத் தான் முருகேச பாண்டியன் சுட்டிக் காட்டுகிறார்.
முன்பு இளம் எழுத்தாளர்கள் அடிக்கடி மூத்த எழுத்தாளர்களை சந்தித்து இலக்கியம் குறித்து உரையாடி வந்தார்கள். இந்த உரையாடல்கள் வழி ஒரு பண்பாட்டு பரிமாற்றம் நடந்தது. கவிதை மரபுடனான தொடர்ச்சி இருந்தது. இன்று அந்த மரபு துண்டுபட்டு விட்டது. இன்றைய கவிஞர்களுக்கு மூத்த கவிஞர்களுடன் பழக்கம் இல்லாதது போகட்டும், மூத்த கவிஞர்களின் கவிதைகளிடம் கூட பழக்கம் இல்லை. எழுத்து இன்று முழுக்க சுயவெளிப்பாட்டு கருவியாகி விட்டது. அதை ஒரு உளவியல், ஆன்மீக, அரசியல், பண்பாட்டு விசாரணையாக நாம் நினைப்பதில்லை. தன்னைப் பற்றி எழுதினால் போதும் என நினைக்கிறவன் எதையும் படிக்க வேண்டியதில்லை. இரண்டு மூன்று தொகுப்பு வெளியிட்ட சில கவிஞர்கள் கூட முக்கியமான கவிஞர்களை ஆழமாக வாசிக்காதவர்களாக இருக்கிறார்கள். இப்பிரச்சனை சிறுகதை, நாவல் போன்ற துறைகளிலும் உள்ளது தான்.

விரிவான ஒரு பண்பாட்டுத் தளத்தில் பார்த்தோமானால் கவிதை என்று  மட்டுமல்ல, வாழ்க்கையில், வேலையில், உறவுகளில், கலைகளில் எங்கும் அடிப்படைகளை அறிந்து கொள்ளாமல் நேரடியாக களமிறங்குவது மோஸ்தராகி விட்டது. ஒரு பெண்ணை புரிந்து கொள்ளாமலே காதலித்து திருமணம் செய்து கொள்கிறோம். ஒரு சாமியார் என்ன சொல்கிறார் என கவனிக்காமலே அவரிடம் சீடராக சேர்ந்து விடுகிறோம். எதற்கும் அவகாசமில்லை; அவசரம்! அவசரம்! கவிதையிலும் இந்த மனநிலை தான் பிரதிபலிக்கிறது.

இன்றும் மூத்த எழுத்தாளர்களை நேரடியாய் சந்தித்து உரையாடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து அதெல்லாம் வெற்று அரட்டையாக இருக்கிறது என்பது தான் பிரச்சனை. எதையும் கற்காமல், உழைத்து அடையாமல், தனக்கு எல்லாம் தெரியும் எனும் அகந்தை இன்று எடுத்த எடுப்பிலே இளம் எழுத்தாளனுக்கு வந்து விடுகிறது. இதுவும் இந்த காலகட்டத்தின் பிரச்சனை தான். நாம் பவர்ஸ்டார்களின் காலகட்டத்தில் அல்லவா வாழ்கிறோம்!

இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. முருகேச பாண்டியன் பரிந்துரைப்பது போல் எழுபது, எண்பதுகளில் போல எழுத்தாளர்கள் தீவிரமாய் உரையாடல் மேற்கொள்வது இனி சாத்தியமா எனத் தெரியவில்லை. வா.மணிகண்டன் சொல்வது போல் ஒரு கவிஞனின் புத்தகத்தை இன்னொருவன் வாங்குவது போல் ஈமு கோழி வணிக கனவுகளுக்கும் நடைமுறை மதிப்புள்ளதாகத் தெரியவில்லை.

இறுதியாக ஆனால் முக்கியமாக நாம் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். கவிதைத் தொகுப்புகளில் விற்பனை சோர்வு என்பது உலகு தழுவிய போக்கு. உலகின் அனைத்து மொழிகளிலும் கவிதை இரண்டாம் பட்சமாகத் தன இருக்கிறது. குறைவான பிரதிகள் வெளியிடப்பட்டு விற்கப்படாமல் இருக்கின்றன. மாறாக, நாவலுக்கு எங்கும் அமோக வரவேற்பு உள்ளது. இது ஏன்?
கவிதை ஒரு காலத்தில் கிட்டத்தட்ட எல்லா விசயங்களுக்குமான வெளிப்பாட்டு கருவியாக இருந்தது. சோதிடம், காமசூத்திரம், இதிகாசம், தத்துவம், அரசியல் விதிமுறைகள் அனைத்தும் கவிதையில் எழுதப்பட்டன. ஆனால் அறிவியலின் எழுச்சியுடன் அறிவுத்துறைகள் பெருகிட, எந்திரமயமாக்கலின் விளைவால் புத்தகங்கள் அனைத்து மக்களுக்கும் போய் சேரும் நிலை தோன்றிட உரைநடை இதற்கு மேலும் பொருத்தமான வடிவம் ஆகியது. அதீத உணர்வெழுச்சிகளின் பால் மக்கள் நம்பிக்கை இழந்தனர். தர்க்கமும், தகவல் சார்ந்த அறிவும் முக்கியத்துவம் பெற்றது. உலகம் முழுக்க மக்கள் நடைமுறை அறிவுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தொடங்கினர். மீபொருண்மை (metaphysical) தேடல்கள் காலாவதி ஆகின. மதம் வீழ்ந்தது. கடவுள் மறக்கப்பட்டார். பதிலுக்கு மத நிறுவனங்களூம் குருமார்களும் போற்றப்பட்டனர். இந்த சூழலில் இயல்பாகவே கவிதையும் வீழ்ந்தது. “கடவுள் இறந்து விட்டார்” என நீட்சே அறிவித்த போது கவிதை இறந்து விட்டது என ஏதோ ஒரு மூலையில் கவிஞனும் உணர்ந்தான்.

கவிதை இன்றும் முக்கியமானது தான். அனைத்து எழுத்து வடிவங்களுக்கும் தாய் வடிவம் அது தான். ஆனால் அது உலக மக்களின் பண்பாட்டு மையத்தில் இருந்து விலகி விட்டது. நாம் இன்று கவிதையின் அந்திம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் வருந்தவோ ஆவலாதிப்படவோ ஒன்றும் இல்லை. அந்திமக் காலம் மாலையில் மெல்ல மெல்ல கூம்பத் தொடங்கியிருக்கும் தாமரையைப் போல அழகானது தான். கவிதையை போற்றவும் கொண்டாடவும் இப்போதும் நேரமுள்ளது.