பெண் வாழ்வின் எதார்த்தங்களை மிகையின்றி
இயல்பான சொற்களில், எளிய நடையில் உருவாக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பே முத்தங்களின்
கடவுள். பெண்ணியம் என்பது பார்வைக்குப் பார்வை வேறுபடும் கருத்தாக்கம் என்பதால்,
என் நோக்கில், இவரது கவிதைகளை பெண்ணியப்படுத்துவதில் ஐயமிருக்கிறது. பெண் சமூகத்தில்
இரண்டாம் தர பாலினமாகவே நடத்தப்படுவதையும், கலாச்சாரத்தின் பெயரில் கட்டுப்படுத்தப்படுவதையும்
உடல் மற்றும் உள ரீதியாக புறக்கணிக்கப்படும் நிலையையும் கருத்தில் கொண்ட கவிதைகளின்
தொகுப்பாகவே இது அமைந்துள்ளது.
கவிதைக்கான பேசுபொருள்
என்பது எல்லாமுமாக விரிந்திருக்கும் இன்றைய சூழலில், இவரது கவிதைகள் தனிப்பட்ட இல்லற
வாழ்வியல் அனுபவத்தின் எல்லைக்குள் அமைவதாய் இருக்கிறது. தன் இருப்பை தக்க வைத்துக்
கொள்வதாகவும், எழுத்தின் மூலம் வலி ஆற்றிக் கொள்ளும் போக்காகவும் இவரது கவிதைகளை வகைப்படுத்த
முடிகிறது. இவரது கவிதைகள் காதலின் பல்வேறு குணங்களை இரு வேரு மையக்கருத்தாய் மொழிக்குள்
புகுத்தியிருப்பது சிறப்பு. தன் இருப்பை பொருட்படுத்தக் கோரும் இறைஞ்சுதலும், சக இருப்பின்
தேவையும், அவன் இல்லாத போது உண்டாகும் தனிமையும், தனக்கான வெளி அடைக்கப்படும் போது
உண்டாகும் மனவெழுச்சியின் வெளிப்பாடாக ஒரு மையம் அமைந்துள்ளது. தன் உரிமைகள் மறுக்கப்படும்
நிலையில், புரிந்து கொள்ளத் தவறும் சக துணையின் நிலைப்பாட்டை விமர்சிப்தாகவும், காதலை
துண்டித்து ஆசுவாசம் கொள்வதாகவும் இன்னொரு மையம் இயங்குகிறது. ஆக, காதல் பொய்த்துப்
போகும் தருணங்களின் வெளிப்பாடே இத்தொகுப்பின் ஒட்டு மொத்த மையக்கருத்தாய் உள்ளது.
சமூகம் என்ற விதிக்கு
ஆட்பட்டு சுயத்தைக் கட்டுப்படுத்தும் தேவை, ஆணை விட பெண்ணுக்கு அதிகம் என்றுணர்த்தும்
“மகிழ்ச்சிகளை அனுபவித்தல்” என்ற கவிதை பொதுமைக் கருத்துள்ளதாய் அமைந்துள்ளது.
அத்தனை
சுலபமாய் இருக்கவில்லை
மகிழ்ச்சியை
மகிழ்ச்சியுடன்
எதிர்கொள்வது
எனும் வரிகள் உள்ளூர ஏற்படும் உணர்ச்சிகளை சமூகத்தின் பார்வைக்கு
அஞ்சி கட்டுப்பாடுகளைச் சுமந்த ஒர் இயல்பற்ற நிலையில் வெளிப்படுத்தும் போது , ஒரு குழந்தையின்
இயற்கையான உணர்ச்சி வெளிப்பாடு நமக்கு பெரும் ஏக்கமாகவே இருக்கும் இயலாமையை அழகாய்ச்
சொல்லியிருக்கிறது.
இவரது ”தேவமைந்தனின்
காதல்” என்ற மற்றொரு கவிதை ஆணின் தேவைக்கேற்ற நடத்தையின் போக்கை விமர்சிக்கும் தளமாய்
இருக்கிறது.
காதலை ஏற்றுக்
கொண்ட பிறகு
உன்மத்தமான
அவனது அன்பில்
சில கடிவாளங்கள்
இருப்பதைப் பார்த்தேன்.
பெண் காதலுக்கு இணங்கும் வரை அன்பொழுகும் வார்த்தைகளையே காதலின்
கருவியாய் கொண்டவன், அவனை ஏற்றுக் கொண்ட பின் அவளது இயல்பை மாற்றிக் கொள்ள அதிகாரம்
செய்யும் ஆண்களின் சுயரூபத்தை இயல்பாய்ச் சொல்லியுள்ளார் இக்கவிதையில்.
“விசாரணை”, “அந்தக் கேள்வியை கேட்பாய் என முன்னமே தெரியும்..”
போன்ற கவிதைகள் தன் நிலைக் குறித்த சுயபரிதவிப்பும், சகஜீவியின் நிலைப்பாட்டைக் குறித்த
விமர்சனமாகவும் வந்துள்ளன.
சிறுநீரை
அடக்க முடியாமல் திணறுவதைப் போல
அந்தக்
கேள்வியைச் சுமந்தபடி
நீ திரிந்ததை
நான் பார்ததேன்.
புதருக்குள்ளிருந்து
வெளிவரும் பாம்பென
நீ அந்தக்
கேள்வியைக் கேட்டு முடித்து
ஆசுவாசம்
கொண்டதையும் தான்.
போன்ற வரிகள் சந்தேகத்தினால் ஏற்படும் அரிப்பு நிலையை பொருத்தமான
உவமை கொண்டு சொல்லும் தொனியே இக்கவிதையின் சிறப்பாக இருக்கிறது.
தன் வாழ்வின்
எதிர்மறைச் சூழல்களை எல்லாம் கவிதை மூலமே கையாண்டு தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும்
மனுஷியின் கவிதைகள் அவரது இருப்பை உணர்த்தும் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.
இவரது எதிர்காலத் தொகுப்புகள், இயலாமையும், இறுக்கமான சூழலும் கடந்த, பரந்து விரிந்த
வெளியைக் கொண்டதாக அமையலாம்.