இன்று நாம் குறிப்பிடும் கவிதை என்ற
சொல் வெறுமனே ஒரு இலக்கிய வகைமையை குறிப்பிடுகிறதா
அல்லது வகைமைகளுக்கு மீறி இலக்கியம் என்ற பொது
தளத்தில் இயங்குகிறதா என்ற கேள்வி நவீனகவிதைகளை வாசிக்கும் போது ஏற்படுகிறது. இச்சொல்
உரை நடை அல்லது பாடல் என்ற வரைமுறையை மீறி ஒரு பிரதிக்குள் இருக்கும் அழகியலையே குறிப்பிடுகிறது.
ரஷ்ய இலக்கிய மேதை தாஸ்தாவஸ்கி தன் எழுத்துக்கள் உரைநடையாயினும் பீட்டர்ஸ் பெர்க் கவிதைகள் என்றே அழைக்கிறார் .
தன் கரமசாவ் சகோதரர்கள் நாவலில் வரும் ஒரு
பகுதியான கிராண்டு இன்க்விசிட்டரையும் கவிதை என்று தான் அழைக்கிறார். இங்கு மொழி வடிவம் பற்றிய வரையறைகளைத் தாண்டி பிரதியின் அழகியலை காண முனைகிறோம். பிரதிக்குள் கலைஞன் தான் அடைய முயற்ச்சிக்கும் அழகியலே
அதனை கவிதை என அழைக்க நம்மைத் தூண்டுகிறது.
மேற்கூறப்பட்ட கவிதையைப் பற்றிய புரிதலே
சுகுணாதிவாகரின் பாலச்சந்திரனின் இறுதியுணவு கவிதைத் தொகுப்பை புரிந்து கொள்ள
உதவுகிறது. இந்த பார்வையில் இவரது கவிதைகளை வாசிக்கும் போது அவைகளை மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம். மேலும் இவர் கவிதைக்காக எடுத்துக் கொள்ளும் கரு அதன் அதன் அழகியலை இம்மூன்று
வகைகளாகப் பிரதிபலிக்கின்றன. முதல் வகை இவர் கவிதைக்காக எடுத்துக் கொள்ளும் கரு அரசியல்
நிலைப்பட்டதாக இருக்கின்றது. இதில் மொழி தன் கவிதைத் தன்மையை சிதைத்து கொண்டு வெறும்
உரைநடையாக நின்று விடுகிறது. ”அகதி நானோ தேச
மறுப்பாளன்” என்ற கவிதை இதற்கு சிறந்த உதாரணம்.
நான் ஆறுதல்களையோ நம்பிக்கைகளையோ
கொண்டுவரவில்லை.
என் அன்பை சொல்ல விரும்புகிறேன்
அவ்வளவுதான்.
அடிப்படையிலேயே நாமிருவரும்
வேறானவர்கள்.
உனது எதிர்பார்ப்பு
உன் தேசத்திற்கான விடுதலை.
எனக்கோ தேசத்திடமிருந்து விடுதலை
என முடிகிறது. மொழி சார்ந்து எந்த அழகியலையும் நம்மால் இங்கு
காண முடியாது. இக்கவிதைக்கான ஒரே அழகியல் இதில் இருக்கும் வலியும் இழப்பும் மட்டுமே.
வலியின் குரலும் இழப்பின் குரலும் சேர்ந்து மொழியை தன் அழகியல் நிலையிலிருந்து விடுவித்து
சாரமற்ற உரைநடையாக மாற்றுகின்றன. “மண்” கவிதையும் இதே போன்ற வடிவத்தை தாங்கி நிற்கிறது.
இவைகள் தன்னால் எதையும் செய்ய இயலாத ஒருவனின் குரலாகத்தான் இருக்கிறது. அதே நேரத்தில்
தன் கோபத்தை வெளிப்படுத்தும் இடத்தில் கவிதைகள் உருவகங்களால் வீரியமடைகின்றன. “துப்பாக்கிகளின்
மரணம்” கவிஞனின் கோபத்தை முழுவதும் வெளிக்காட்டுகிறது. இங்கு இவரது கவிதை வெறுமனே உரைநடை
வார்த்தைகளாக நிற்காமல் இலக்கிய உத்தியான உருவகத்தால் செரிவூட்டப்படுகிறது.
துப்பாக்கிகள்
அடிக்கடி குறி தவறுகின்றன.
துப்பக்கிகளின்
தொண்டைக்குழியில்
தோட்டாக்கள் சிக்கிக்கொள்வதால்
துப்பாக்கிகள்
தாங்கள்
பேச நினைத்ததைப்
பேச முடிவதில்லை.
இதில் முழு கவிதையையும் துப்பாக்கியாக மனித உணர்வுகளை தன்மீதேற்றிக்கொண்டு
கவிஞனின் கோபத்தை வெளிக்காண்பிக்கின்றது. இந்த அதீதக் கோபம் வெறும் எழுத்துக்களால்
மாத்திரம் சாத்தியமாகாது. உருவகம் மாத்திரமே இதனை சாத்தியமாக்குகிறது. இதே போன்ற கோபத்தின்
வெளிப்பாட்டை ஈழத்து கவிஞர் நுஃமானின் “துப்பாக்கியே உனக்கு
மூளை இல்லையா” என்ற கவிதையில் உணர முடியும்.
சுகுணாதிவாகரின்
இரண்டாவது வகையான கவிதைகள் பாவக்கனியை ருசித்ததின் விளைவால் ஏற்பட்ட கலகத்தின் குரல்கள்.
இக்கலகக் குரல் எப்போதும் கடவுளின் இருத்தலை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் குரலாக
இருந்து வருகின்றது. இந்த கலகமே ஒரு பிரதிக்கான அழகியலை உண்டாக்குகிறது. பக்தி மாத்திரம்
ஒரு பிரதிக்கு அழகியலை கொடுக்கிறதில்லை கடவுளுக்கெதிரான கலகக் குரலும் பிரதியின் அழகியலை
மேம்படுத்துகிறது. இந்த வகையில் புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்”
சிறுகதையை ஒரு கவிதையாகத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது. ”கோப்பைகளின் உலகம்” என்ற
கவிதையில்,
களைப்பும் அயர்ச்சியும் ஓங்க
நாற்காலியில் சாய்ந்த கடவுள்
விசும்பி அழத் தொடங்கினார்.
புணராமலே பிள்ளை பெற்றுக்கொண்டிருப்பதனால்
தன் குறி துருப்பிடித்திருப்பதாய்ப்
புலம்பத் தொடங்கினார்.
என்று கடவுள் என்ற கற்பிதம் பகடி செய்யப்படுகிறது. இங்கு
பகடி என்ற இலக்கிய உத்தி உடனடி புரிதலாக இருப்பினும் அதன் ஆழத்தில் கடவுள் என்ற கற்பிதத்தை
மீறி கடவுளின் இருப்பை தேடும் வேட்கையாகத்தான் “அனேகமாய்க் கடவுளின் எண் 1234567 ஆக
இருக்கலாம்” போன்ற கவிதைகள் இருக்கின்றன.
இவரது கவிதைகளில்
அழகியலை அடைய உறுதுணையாக இருக்கும் மூன்றாவது வகையான கருப்பொருள் மரபையும் நவீனத்தையும்
உருக்கி ஒரே வஸ்த்துவாக்குவதாகும். ”காலப்பெயர்ச்சி” இதற்கு ஒரு உதாரணம்.
இன்னும் ஆப்பிள்
நியூட்டன் தலைக்கு
வந்துசேரவில்லை.
இடையில் கைப்பற்றியிருந்த
ஆதாம்
ஏவாளுக்குக் கடிக்கக்
கொடுத்தான்
என்று தொடர்ந்து,
கோபமுற்ற கண்ணகி
தன் இடது முலையைத் திருகி
வீசி எறிந்தபோது
பொத்தென்று ஆப்பிள்
நியூட்டன் தலையில்
விழுந்தது.
என முடிகிறது.
இதில் மரபும் நவீனமும் ஒன்றிணைந்து கவிதையை ஒரு விநோத அழகியலாக
மாற்றுகின்றன.
இவ்வாறு கவிதை
என்பதை வெறுமனே இலக்கியத்தின் ஒரு வகைமையாகக் காணாமல் வகைமைகள் என்ற வறையறைகளை மீறி
படைப்பை ஒரு பிரதியாக அணுகி அதனுள் இறுக்கும் அழகியலை காண்பதே இன்றைய தேவையாக இருக்கிறது.
இதன் அடிப்படையில் பாலச்சந்தரனின் இறுதியுணவை வாசிக்கும் போது தமிழ் நவீனக்
கவிதைகளில் அழகியலை அடைய உறுதுணையாக இருக்கும் மேற்க்கூறிய கருப்பொருட்களை நம்மால்
கண்டடைய முடிகிறது.