தமிழ்த்திரைப் பாடல்களில் கவித்துவம் (1) – ஆர்.அபிலாஷ்



தமிழில் நவீன கவிதை என்றும் அருகிப் போன மூலிகை போன்ற வஸ்து தான். ஆனால் அதன் வீச்சை இன்று விகடனில் வரும் கவிதைகளில் இருந்து திரைப்படப் பாடல்கள் வரை பார்க்க முடிகிறது. குறிப்பாய் சமகாலப் பாடல்களில் வரும் உவமைகளைச் சொல்லலாம். எழுபது எண்பதுகளில் கவிதையில் உருவகம் பிரதானமாய் இருந்தது. மு.மேத்தாவின் “நெம்புகோல் கவிதை” ஒரு உதாரணம். பிறகு தொண்ணூறுகளில் குறியீடு மற்றும் படிமம். “நடக்கும் இடமெங்கும் பொன்மணல்” எனும் பிரமிள் வரியைச் சொல்லலாம். இப்போது கவிதையின் அச்சாணியாக உவமை இருக்கிறது. நேரடியான, கதைகூறும் பாணியிலான எளிய கவிதை தான் இன்றைய பாணி. நேரடியான கவிதையில் உக்கிரமான உணர்ச்சியை சொல்வதற்கும், அதை எளிமையாக வைப்பதற்கும் உவமை ஏற்றது. சமீப காலத்தில் நினைக்கும் போதெல்லாம் என்னை உலுக்க வைக்கும் உவமை இது.
“வாய்க்குள் உலகத்தை
அடக்கிய கண்ணனைப் போல
உள்ளங்கைக்குள் அடக்குகிறேன்
உன் குறியை” (மனுஷி, “குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்”)
சமகால திரையிசைப் பாடல்களில் வரும் உவமைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று “காத்தோடு தூத்தல் போல போறானே” எனும் அப்பாடலின் துவக்க வரியில் வரும் உவமை. மிக வித்தியாசமான அதே வேளை படத்தின் கதையோடு பொருத்தமான உவமை இது. காற்றடிக்கும் போது தூறல் சேர்த்து போடும் போது ஒரு நூதனமான உணர்வு ஏற்படும். அது காற்றாகவும் இருக்காது, முழுமையான தூறலாகவும் இருக்காது. தூறல் ஆயிரம் ஊசிகளைப் போல முகத்தில் வீசி அறைந்தபடி கடக்கும். அதேவேளை ஈரமேறிய சில்லென்ற காற்று சுகமாகவும் இருக்கும். நம் கண்முன்னே தூறல் மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போவது பார்க்க துக்கமாகவும் இருக்கும். பிரிவுக்கு இதைவிட அழகான உவமை சொல்ல முடியுமா? காதலில் பிரிவிலும் கூட ஒரு சுகமான வலி உண்டு. காதலின் இழப்பை எண்ணி எண்ணி மருகும் போது தன்னை மறந்து அப்பேருணர்ச்சியில் மூழ்கும் கிளர்ச்சி தனியானது. காதல் மனதை விட்டு முழுக்க அகன்ற பிறகு ஒரு வெறுமை தோன்றும். அப்போது தான் இழப்புணர்ச்சி வெறுமைக்கு எவ்வளவு மேலானது எனப் புரியும். அதனால் தான் காதல் காயமாகி முழுக்க ஆறாமல், காந்தும் போது, மனம் வலியில் எரியும் போது காதல் துணையின் வாசனை, உடல் வெம்மை, எண்ணங்கள் அகலாமல் நம் அருகில் வெகு அருகிலேயே இருக்கும். பிரிவும் இணைதலும் இரு துருவமான ஆனால் அதே காதல் உக்கிரம் கொண்ட எதிர் உணச்சிகள். முகத்தில் அறைந்து, துன்புறுத்தி, கண்முன்னே பிரிந்து போனாலும், தற்காலிகமான ஒரு ஆறுதல் தரும் காற்றோடு அடித்துக் கொண்டு போகும் தூறலாக இங்கு பிரிவு சித்திரப்படுத்தப்படுகிறது.
இப்பாடலில் வரும் வேறு சில உவமைகளைப் பார்ப்போம்.
“மழையில் நனஞ்ச காத்தப் போல,
மனச நீயும் நனச்சுபுட்ட”
காற்று அதன் இயல்பில் ஈரமற்றது. அது மழையில் ஈரமேறி கனக்கிறது. பிறகு வெயிலடிக்க ஈரத்தை இழக்கிறது. மண்ணைப் போல் ஈரத்தை தனக்குள் ஆழத்தில் பதுக்கி வைக்க காற்றால் முடியாது. காற்று பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எதையும் சொந்தம் கொண்டாட முடியாது.
”டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா”
இது மிக வித்தியாசமான ஒரு உவமை. இதுவரை தேயிலை வாசனையை பிடித்தவரின் வாசத்தோடு ஒப்பிட்டு யாரும் எழுதி நான் எங்கும் இலக்கியத்தில் கூட படித்ததில்லை. பாடலாசிரியரின் ஒரு தனிப்பட்ட ரசனை சார்ந்த அவதானிப்பாக இதைப் பார்க்கலாம். இவ்வுவமை எனக்கு பிடிக்க காரணம் டீ தூளின் மனதை கிளர்த்தும் வாசம். அடுத்த முறை அடுக்களைக்கு போனால் டீ டப்பாவை திறந்து முகர்ந்து பாருங்கள். சட்டென மனதை தூக்கி விசிறி அடிக்கும் அந்த வாசனை. ஒரு காதலனின் வாசனையும் இதைத் தானே செய்யும்!
“மூக்கணாங் கவுரப்போல உன்னெனப்பு…
அடகாக்கும் கோழி போல என் தவிப்பு”
இரண்டாவது உடமையான அடைகாக்கும் கோழியுடன் ஒப்பிடுகையில் முதல் உவமை மூக்கணாங் கயிறு சற்று எதிர்மறையானது. மாட்டின் மூக்குத்துவாரத்தை அறுத்தபடி அதைப் பிணைக்கும் கயிறு வலியுடன், ஒடுக்குமுறையுடன் சம்மந்தப்பட்டது. ஆனால் காதலும் ஒரு விதத்தில் மூக்கணாங்கயிறு தானே. அதை நம் நினைவுகளை மெல்ல மெல்ல அறுத்து அந்த வலியுடனே நம்மை பிணைக்கக் கூடியது. பிரிந்த காதலின் எண்ணங்கள் நினைக்க நினைக்க வலியை பெருக்கும். ஆனால் அதனால் அதை நினைக்காமல் இருக்க மாட்டோம். கட்டப்பட்ட கயிறை இழுத்துக் கொண்டே இருக்கும் மாட்டைப் போல் மனம் தன்னை மீண்டும் மீண்டும் வலிக்குள் ஆழ்த்திக் கொண்டிருக்கும். வலி நிரம்பிய நினைவுகளை மீண்டும் மீண்டும் எழுப்பி அதில் ருசி காணும். காதல் தோல்வி அல்லது பிரிவை அறிந்தவர் எவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். யோசித்துப் பார்த்தால் எவ்வளவு உக்கிரமான, அனுபவ ஆழம் கொண்ட உவமையாக இருக்கிறது இது!
 “வாகை சூடவா” படத்தில் உள்ள இப்பாடலை எழுதியவர் கார்த்திக் நேத்தா. இவர் நவீன கவிதைகள் எழுதுபவர், நவீன இலக்கியம் அறிந்தவர். குறிப்பாக இவருக்கு ஹைக்கூவில் ஈடுபாடு அதிகம். இளைய தலைமுறை பாடலாசிரியர்களில் மிக தனித்துவமும் திறமையும் கொண்டவர் நேத்தா. சேலம் மாவட்டம் சின்னனூரை சேர்ந்தவர். “தவளைக்கல் சிறுமி” இவரது கவிதைத் தொகுப்பு.
அடுத்த மாத பகுதியில் மற்றொரு பாடலாசிரியரின் வரிகளைப் பார்ப்போம். நன்றி.