ப.திலீபன் கவிதைகள்


               
ஒரு நடிகை கண்ணாடி பார்கிறாள்..

எதேட்சையாய்
தான் குழந்தை நட்சத்திரமாய் நடித்த படத்தை
தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது
இந்த வருட கனவுக் கன்னிக்கு...
பார்த்துக்கொண்டே இருந்தவள்
சட்டென ஒரு கணம் திடுக்கிட்டாள்...
அது தான் இல்லை என்பது போல் தோன்றியது அவளுக்கு...
அக்குழந்தையிடமிருந்து மிகவும் அந்நியமாய் உணர்ந்தாள்...
குழப்பத்தில் எழுந்து நடக்க ஆரம்பித்தவள்
அவளின் பெரிய பெரிய முகங்களைத் தாங்கிய
உள் அறைக்குள் நுழைந்து
கண்ணாடி முன் நின்றாள்...
தன் நிஜ முகத்தை தேடுவதின் பொருட்டு
முகத்தில் மூடியிருந்த கதாப்பத்திரங்களின் முகங்களை
ஒவ்வொன்றாய் கழற்றி எறிந்தாள்...
பணக்காரக் காதலி, ஏழைக்காதலி, வேசிக் காதலி, அன்புக் காதலி என
பலப் பல முகங்கள்...
தீவிர தேடுதலில் தவறுதலாய்
தன் நிஜ முகத்தையும் கழற்றி வீசியிருந்தாள்...
எவ்வளவு தேடியும் தன் முகம் கிடைக்காததால்
களைப்படைந்து அன்றைய கதாப்பாத்திரத்திற்கான முகத்தை
கச்சிதமாய் பொருத்திப் புறப்பட்டாள்...
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என்பது
எவ்வளவு பெரிய அபத்தம்..!


                            மீள்சுற்று

திடீரென
காற்றில் ஆடும் பிளாஸ்டிக் கவர்
மனிதனின் நடமாட்டம் போல்
ஓசை எழுப்புகிறது...
திடீரென
மனிதனின் நடமாட்டம்
பலூனில் விரல் தேய்த்து எழுப்பும்
சத்தம் போல் கேட்கிறது...
திடீரென
பலூனில் விரல் தேய்க்கும் சத்தம்
பெயர் தெரியாத பறவையின்
குரல் போல் கேட்கிறது...
திடீரென
பெயர் தெரியாத பறவையின் குரல்
ரயில் சக்கரம் தண்டவாளத்தோடு முயங்கும்
சத்தம் போல் இருக்கிறது...
திடீரென
ரயில் சக்கரம் தண்டவாளத்தோடு முயங்கும் சத்தம்
காற்றில் ஆடும்
பிளாஸ்டிக் கவர் போல் ஓசை எழுப்புகிறது...
திடீரென
காற்றில் ஆடும் பிளாஸ்டிக் கவர்
மனிதனின் நடமாட்டம் போல்
ஓசை எழுப்புகிறது...
இப்படி இப்படியாக
ஒன்றிலிருந்து இன்னொன்றாய்
பிரிந்து திரிந்து
கலந்து கலந்து
பரவிக் கிடக்கிறது வாழ்க்கை...