கோசின்ரா கவிதைகள்

1
உதிர்ந்து போன இலையை
வாவென கூட்டிசெல்கிறது
காற்று
பாறை மேல் விழுந்த மீனை
எழுந்து அழைத்துக்கொள்கிறது
தொடரலை
கடந்து போன நாளை
திரும்ப கூப்பிடுகிறது
நினைவு
தடவிக்கொடுக்கும்
பார்வையற்றவனின் கைகளில் ஏறி
பார்க்கிறது
இறந்தவனின் கண்கள்.

2
யாருக்கும் தெரியாமல் இருக்க
வெளிச்சத்தை
வெளிச்சத்தில் மறைத்து வை
இருட்டை
இருட்டுக்குள் ஒளித்து வை
ஆன்மீகமும் வரலாறும்
இப்படித்தான் சொல்லிக்கொடுத்தது
சொல்லிக்கொடுத்த வரலாறு
ஏன் தள்ளாடுகிறது
வெளிச்சத்தின் வீதிகளில்
இருட்டின் சிலை
ஏன் திறக்க வேண்டும்
வெளிச்சத்தின் கதவுக்குள் கேட்கிறது
ஹே ராம்
இருட்டின் கதவுக்குள்ளும் கேட்கிறது
ஹே ராம்
ஒண்ணும் புரிய வில்லை
ஹே ராம்.
3
மேசை மீது ஆரஞ்சு பழம்
தூரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது
உடனிருந்த பழங்களை பிரித்துதான்
எடுத்து வரப்பட்டது
யார் பிரித்தது
முதலில் தோட்டக்காரன் பிரித்தான்
பிறகு மொத்த வியாபாரி பிரித்தான்
பிறகு அது சில்லரை வியாபாரியின்
கைகளுக்குள் வந்தது
இப்பொழுது என் முறை
என் அதிகாரத்துக்குள் இருக்கிறது
நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
சில நாட்களுக்கு முன்புவரை
கண்களை அகல விரித்து
பார்த்துக்கொண்டிருந்த ஆரஞ்சு
இப்பொழுது கண்களை சுருக்கிய படி பார்க்கிறது
அதற்குள் ஆயிரம் யோசனைகள்
தன் உடல் எப்போது இரண்டாக
பிளக்கப்படுமென்றா
தன் தோல் எப்போது உரிக்கப்படுமென்றா
நிரந்தரமற்ற
வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டிருக்கிறது
என் மேசையின் சதுரத்தின்
சிறைக்கொட்டத்தில்
தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் 
ஒரு கைதியின் மன நிலையோடு.
4
பெண்ணை பற்றிய கவிதை மாளிகைக்கு
அலங்கார
வார்த்தைகள் தேவை
பந்தல் மற்றும் தோரணங்கள்
வாசல்கள் கதவுகள் சன்னல்களுக்கும்
அழகிய அர்த்தமுள்ள
கண்ணாடி வார்த்தைகள் தேவை படுகின்றன
அழமும் வேண்டுமென்பதால்
அத்தாட்சி சான்றிதழ் தேவை
முன் அனுபவம் என்று சொல்லிக்கொண்டு
வந்து கொண்டிருக்கின்றன சில வார்த்தைகள்
புதுப்புது வார்த்தைகளும்
வேறொரு கவிதைக்கு போக வேண்டிய
வார்த்தைகளும் வழி மாறி வந்தன
நிலா வெயில் மல்லிகை கலசம்
நிலம் வானம் வரப்பு உதடு சவாரி
புத்தகம் பனி ஆடு நதி அம்மணம்
அச்சம்  இருட்டு நாணம் மாமிசம் புத்தகம்
கவிதை கழுதை ரகசியம் பலவீனம்
காடு கட்டில் மலர் தொப்புள்
தீக்குளிப்பு அருவி விவாகரத்து
தனிமை சிற்பம் தேர் மேகம்
இரவு கண்ணாடி முக மூடி வெற்றிடம்
மூடப்பட்ட ஆசை
திறந்து வைத்த உடல்
கொட்டிக்கிடக்கும் உயிரெழுத்துக்கள்
நிர்வாணம் பொழியும் மழை
அழகு கூட்டிவந்த கைதிகள்
உடைந்த மெய் எழுத்துக்கள்
பூட்டு எதிர்பதம் தொகுதி கணக்கு
நடந்து போகும் தாவரம்
வரிசை முடியவில்லை
வரிசையில் நிற்கும் வார்த்தைகளுக்கு
டோக்கன் கொடுக்கப்படும்
வரிசை முடிந்தவுடன்
பெண்ணை பற்றிய
இந்தக் கவிதை தொடங்கி விடும்.
5
திசம்பர் மாதத்து
பனி பூவின் நிறத்திலிருக்கும்
குட்டிக்குதிரையே
என்னை சந்தோஷப்படுத்து
கால்களை ஆட்டி நடனமாடு
போர் களத்தில் அடிப்பட்டு வீழும்
குதிரையை பார் 
தலையை அறுத்து விசுவாசம் காட்டும்
மனிதர்களை பார்
இந்த பாறைகள்
வெடி வைத்தவுடன் தகர்ப்பதை பார்
அதன் வாழ்வு தூள் தூளாக சிதறுவதை பார்
அது கண்ணீர் வடிப்பதுமில்லை
வலியால் கதறுவதுமில்லை
பாறையிடமிருந்து கற்றுக்கொள்
கொஞ்சம் இரு ஏறிக்கொள்கிறேன்
தூரங்களை பற்றி பயப்படாதே
பூமிக்குள்தான் ஓடிக்கொண்டிருக்கிறாய்
ஈரேழு நாற்பத்தெட்டு உலகங்கள் காத்திருக்கின்றன
உன் தாய்க்கு
வாயில் நுரை தள்ளி விட்டது
அதன் கால்கள் ஓடி ஓடி
காய்த்து விட்டது
முதுகு சுமந்து சுமந்து
அதன் கடமை வற்றி விட்டது
அதன் வாழ்க்கையில்
சில நிமிடங்களே மிச்சம்
அது பிரார்த்தனைக்கு இருக்கட்டும்
இனி உன்னுடைய காலம்
குட்டிக்குதிரையே ஓடு
ஓடு ஓடிக்கொண்டேயிரு
இன்னும் சில யுகங்கள்தான் பாக்கி.

6
எனக்கு மதமென்பது
என்னுடைய அந்தரங்க உறுப்பை போல
அதை வெளிப்படையாக
உன்னிடம் காட்ட வேண்டியதில்லை.