குளிரும் நிலவொளியில்
எல்லா எதிர் பாலும்
அழகாய்த் தெரியுமோ
எதிர்படும் எல்லா
நாய்களும்
இணையாய் தெரியுமோ
இணைகூடும் இடத்தை
எது எப்படி
முடிவெடுக்கும்
ஆளரவமற்ற தெருவில்
நடுநிசியில்
எதைப்பார்த்து
குரைக்கின்றன
பத்தடிக்கூண்டில் தூங்கும்
பெருநாயின் கனவில்
யார் யார் என்னவாக
வருவார்
தன் குட்டி நாயை
எப்படி அறியும்
தகப்பன்
வெறிநாயின் கண்களுக்கு
திரைக் கதாநாயகனின்
இரட்டைவேடம் போல்
இரண்டிரண்டாய்த்
தெரியுமாம்
நல்லவனைக் கடிக்குமா
கெட்டவனையா
செத்த பின்
சொர்க்கமா நரகமா
மறுபிறப்பு உண்டெனில்
மனிதனாக விரும்புமா
வாயில் சிக்கிய
தேங்காயான
இந்தக் கவிதையை
முடிப்பது எப்படி
வாலை இடுக்கி ‘வவ்…வ்’
என்றா
குரலை உயர்த்தி ‘லொள்’
என்றா…