என்னால் சொல்ல முடிவதேயில்லை - வேல்முருகன்.பா.


 

அழகு பெண்களைக் கண்டதும்
அனிச்சையாய் கண்கள்
திரும்புகிறது என்கிறேன்
எனக்கும் தான் 
என்று நீ சொன்னதேயில்லை

புகைத்தலில் ஒரு
புதுஇன்பம் இருப்பதை
சொல்லிச் சொல்லிச்
சிலாகித்தேன்
எனக்கும் தான் 
என்று நீ சொன்னதேயில்லை

மது அருந்துதல்
மனதைத் திறந்து
மாசகற்றுகிறது
என எப்போதும்
பிதற்றுகிறேன் 
எனக்கும் தான் 
என்று நீ சொன்னதேயில்லை

விலைமகளிர் சகவாசம்
விந்தினை வெளியேற்ற
மட்டுமில்லை என்கிறேன்  
எனக்கும் தான் 
என்று நீ சொன்னதேயில்லை

அருகே உயர்பவனைப் பார்க்கையில்
உள்ளே காழ்ப்புணர்வதும்
வெளியே நடிப்பதுமாகிய
செயல்கள்போல நிரம்பச் செய்து
நடிக்கின்ற
உன்னை நல்லவன் என
உலகம் சொல்வதாய்
சொல்கிறாய்

வெளிப்படையாய் இருக்கும்
என்னையுந்தான் என்று
என்னால் சொல்ல முடிவதேயில்லை