பூனை முகத்திலான நண்பன் - பிரசாந்த்



ஆறு மணி அலார்ம்
மிக சன்னமாய் பின்னனியில் ஒலிக்க
பூனை முகத்திலான
நன்பனொருவனுடன் பேசிக்கொண்டிருப்பதில்
விழிக்கிறது ஒரு நாள்

பல நாட்கள்
பார்த்த கண்ணாடி தான் என்றாலும்
இப்பொழுதெல்லாம்
மிக தெளிவாய் காட்டுகிறது அந்த பூனையை..

மறக்க விரும்பும்
அவளுடனான இனிய நினைவுகளை
மென்று விழுங்கிவிட்டு
மனதில் ஸ்திரமாய் அமர்கிறது

ஆச்சரியமாய் அந்த பூனை
இன்னும் பூனையாகவே இருக்கிறது

போலி நிறங்களடர்ந்த
என்
உலகத்திலிருந்து என்னை
அவ்வளவு பலவந்தமாய் பிரித்துவிட்டு
ஆயாசமாய்
அங்குமிங்கும் திரிகிறது

எனினும்
அந்த பூனை மட்டும்
ஏன் இன்னும் பூனையாகவே இருக்கிறதென்று
யோசித்த பின்னிரவில்
கைகளை பற்றியழைத்த பூனை
நான் முப்பொழுதும்
ஒரு செல்லப்பெயர் வைத்தோ
ஒரு வசைச்சொல்லை உதிர்த்தோ
அழைப்பது
தனக்கு பிடிக்கவில்லையென்றும்
தான் ஒரு பூனையாகவே
இருக்க விழைகிறதென்றும்
எதையோ சொல்லாமல் சொல்லிச் சென்றது