ஒரு தவறு
நான் நினைத்தேன்: இவையெல்லாம் ஒரு தயாரிப்பு,
கடைசியில், எப்படி சாவதற்கு என கற்பதற்கு.
காலைகள் மற்றும் அந்திகள், மேப்பிள் மரத்தின் கீழ்,
லாரா தூங்குகிறாள், ரேஸ்ப்பெரிகளை தலையணையாகக் கொண்டு, பேண்ட் இல்லாமல்,
பிலோன், மகிழ்ச்சியாய், ஓடையில் குளிக்கிறான்.
காலைகள் மற்றும் வருடங்கள். ஒவ்வொரு கோப்பை வைன்,
லாரா மற்றும் கடல், நிலம் மற்றும் தீவுகளின் கூட்டம்
நம்மை நெருக்கம் கொள்ள வைக்கின்றன, அது ஒரே நோக்கிற்காக என நம்பினேன்
அந்த நோக்கில் தான் அதையெல்லாம் பயன்படுத்த வேண்டும்.
ஆனால் இடுப்புக்கு மேல் பக்கவாதம் வந்த ஒருவர் என் தெருவில்
அவரை ஒரு நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு போனார்கள்
நிழலில் இருந்து ஒளிக்கு, ஒளியில் இருந்து நிழலுக்கு,
ஒரு பூனையை பார்க்கிறார், ஒரு இலையைப் பார்க்கிறார், காரின் குரோம் ஸ்டீலைப் பார்க்கிறார்
தனக்குள் முணுமுணுக்கிறார் “அருமையான பருவநிலை, அருமையான பருவநிலை”.
உண்மையே. அழகானது நம் நேரம்
அது நேரமாக மட்டுமே இருக்கும் மட்டில்
சொர்க்கத்துக்கு பின்
இதற்கு மேல் ஓடாதே. அமைதி. இந்நகரத்தின்
கூரைகளில்
எவ்வளவு சன்னமாய் பெய்கிறது மழை.
எல்லா விசயங்களும்
எவ்வளவு கச்சிதம். மச்சு அறையின்
ஜன்னல் பக்கமாய்
ராஜ கட்டிலில் துயிலெழும் நீங்கள்
இருவருக்குமாய், இப்போது.
ஒரு கணவன் மனைவிக்காக. பரஸ்பரம்
ஒருவருக்காய் ஒருவர்
ஏங்கிய, ஆணாயும் பெண்ணாயும் பிளந்து
போன ஒரு செடிக்காக.
ஆம், இது உங்களுக்கான என் பரிசு.
ஒரு மிக மிக கசப்பான
பூமியின் சாம்பலுக்கு மேலாக. நிலத்தடி
கூச்சல், சபதங்களின்
எதிரொலிக்கு மேலாக. ஆக இனி இப்போது
விடிகாலையில்
நீங்கள் கவனமாய் இருக்க வேண்டும்:
தலையின் சின்ன ஒரு சாய்வு,
சீப்பை ஏந்திய ஒரு கரம், கண்ணாடியில்
இரு முகங்கள்
இவையெல்லாம் எப்போதைக்குமாய் சேர்ந்து
ஒரே ஒரு முறை தான், மறந்து விட்டாலும் கூட,
ஆதனால் நீங்கள் எது எப்படியோ அப்படியே
பாருங்கள், அது நிறம் மங்கி போனாலும் கூட.
உங்கள் இருப்புக்காய் ஒவ்வொரு
தருணமும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
பச்சை மார்பிள் மார்பளவு சிலைகள்
கொண்ட அந்த சின்ன பூங்கா
சாம்பல் வண்ண முத்தொளியில், கோடையின்
தூறலின் கீழே
நீங்கள் வாயிற்கதவை திறந்த போது
எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும்.
வண்ணம் உரியும் உயரமான வராந்தாக்கள்
கொண்ட தெருக்களும் கூட
அவை அல்லவா சட்டென உருமாற்றின
உனது இந்த காதலை.